டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அக்டோபர் 31, 2009 அன்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி நிகழ்ச்சி நேஷ்வில் விநாயகர் கோவில் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப்பின் செயலாளர் கார்த்திக் சந்திரசேகரன் வரவேற்புரை கூறினார். முதலில் இறைவனைத் துதிக்கும் நடனமும், அதைத் தொடர்ந்து செல்வி. வன்ஷிகாவின் நடனமும் இடம்பெற்றன. அதையடுத்துச் செல்வி. காவியா இனிமையாகத் திரைப்படப் பாடலைக் கீபோர்டில் வாசித்து கலைநிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து வந்த செல்வன் தீபக் சுப்பிரமணியன் கீபோர்டில் ரீதிகௌளை ராகப் பாடல் ஒன்றை வாசித்தார். அடுத்து மேடையேறிய ஜிதேந்திரா, பின்னணி இசைக்கோர்வையுடன் இணைந்து உச்சஸ்தாயில் பாடி மகிழ்வித்தார். இவர் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் ராஜ் ஆர்காட்டின் மகன் என்பது உபரிச் செய்தி. கணநேர இடைவெளியும் கொடுக்காமல் குகாவும், பீமாவும் வந்தனர். பீமா தாள வாத்தியத்தில் (ட்ரம்ஸ்) கலக்க, கிடார் இசைத்தார் குகா. மேற்கத்திய 'ராக்' பாடலைப் பின்னி எடுத்துவிட்டார்கள் இருவரும்.

சிறுவர்கள் விக்னேஷ் பாலசுந்தரம், விக்னேஷ் குமார், அபிநவ் ராஜ், விசு செந்தில்நாதன் ஆகியோர் இணைந்து 'ஜெய் ஹோ' பாடலுக்கு நேர்த்தியாக ஆடினார்கள். நடன அமைப்பு திருமதி. வித்யா பாலசுந்தரம். செல்வியர் ரம்யா குமாரும், நளினாவும் முந்தைய நடனத்துக்கு இணையாக ஆடிக் கைதட்டலை அள்ளினார்கள்.

அன்று ஹாலவீன் (Halloween) தினம் என்பதால் திருமதி. அருணா கார்த்திக் குழந்தைகளுக்கான மாறுவேட அணிவகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இரேமஷ் இராமலிங்கம் ஒவ்வொரு வேடத்துக்கும் பொருத்தமான பின்னணி இசையை அருமையாகத் தேர்ந்தெடுத்திருந்தார். முக்கிய அம்சமான பெண்கள் குழுவின் 'தீப ஒளி நடனம்' தெய்வீகமாக இருந்தது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இசையும் மிகச் சிறப்பாக இருந்தது. பரத நாட்டியம் இல்லாமல் நடன நிகழ்ச்சியா? செல்வி. நிவேதா சந்திரேமாகன் பரதம் வழங்கிச் சிறப்பித்தார்.

திருமதி. நந்தினி கம்பி அவர்களின் தொலைபேசி உரையாடலை மையமாக வைத்த 'கலைமகள் டி.வி' நாடகமும் அதைத் தொடர்ந்து திரு. ராஜேஷ் கண்ணனின் 'பல்லானது பலானது' நகைச்சுவை நாடகமும் நன்றாக இருந்தன. அடுத்ததாக நடிகை ஜெயஸ்ரீ நடத்திய 'ஜோடிப் பொருத்தம்' நிகழ்ச்சி நடைபெற்றது. தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைத் திறம்பட நடத்திய அனுபவம் இங்கும் தெரிந்தது. ஏழு ஜோடிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ஆடலும் பாடலுமாகச் சென்றது.

வட அமெரிக்காவில் பல மேடைகளில் குழுவினருடன் பாடிவரும் திரு.C.S.ஐங்கரன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் நடிகை ஜெயஸ்ரீயுடன் இணைந்து இரண்டு பாடல்களையும் பாடி அசத்தினார். சங்கத் தலைவர் திரு.செந்தில்நாதன் நன்றியுரை வழங்கினார். துணைத்தலைவர் ராஜ் ஆர்காட் அணியினரின் மெல்லிசைப் பாடல்களுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

அருணாசலம்,
டென்னசி

© TamilOnline.com