தெரியுமா?: 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்புக்குத் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதிக்கொடை
ஆண்டுதோறும் இயல் விருது போன்ற கௌரவங்களை உலக அளவில் தமிழ்ச் சாதனையாளர்களுக்கு வழங்கும் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பின் செயல்பாடுகளை ஆதரிக்கும் வண்ணம் 'தென்றல்' இதழின் சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை ஆண்டுதோறும் 1000 டாலர் நிதிக்கொடை ஒன்றைத் தரப் பொறுப்பேற்றுள்ளது.

ஆண்டுதோறும் 'வாழ்நாள் சாதனையாளர் விருது', 'புனைகதை விருது', 'அபுனைவு விருது', 'கவிதை விருது', 'தகவல் தொழில்நுட்ப விருது' ஆகியவை தவிர ஒரு தமிழ் பயிலும் மாணவருக்குக் கல்வி உதவித் தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறது கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட தமிழ் இலக்கியத் தோட்டம். 2001ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு விருது வழங்கும் விழாவை ஒட்டி ஒரு தமிழ் அறிஞரின் சிறப்புரையையும் நடத்துகிறது. பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் இதன் முக்கியப் பின்பலமாக நின்று செயல்படுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அம்பை போன்றோர் 'இயல் விருது' பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தென்றல் இதழின் சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட லாபநோக்கற்ற அமைப்பாகும். இது உலக அளவில் தமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு நிதியமும், ஊடக விளம்பரமும் தந்து தோள் கொடுக்கிறது. தமிழ்ச் சங்கங்கள், அயல்நாடுகளில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் போன்ற தெரிந்தெடுத்த தமிழ் பரப்புத் திட்டங்களுக்கு நிதிக்கொடை வழங்குகிறது. 2008ல் தொடங்கப்பட்ட இது அதே ஆண்டில் அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கம், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஆகியவற்றின் குழந்தைகள் தின விழா தமிழ்ப் போட்டிகளுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கியது. 2009ல் அமெரிக்கத் தமிழ் நாடக விழாவுக்கான சுழல் கேடயத்தை வழங்கியது.

தமிழ் இலக்கியத் தோட்டத்துடன் கை கோர்ப்பதில் தென்றலும் தமிழ் ஆன்லைனும் பெருமிதம் கொள்கின்றன.

© TamilOnline.com