செம்மங்குடி சீனிவாச ஐயர்
பக்தியிசையாகத் தோன்றி வளர்ந்த தமிழ்ப் பண்ணிசை, மேடையில் கர்நாடக சங்கீதமாகப் பரிணமித்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. மஹா வைத்தியநாத சிவன், டைகர் வரதாச்சாரியார், பூச்சி சினிவாச ஐயங்கார், வீணை தனம்மாள், காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை, பிடில் கிருஷ்ணையர், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை, மைசூர் சௌடையா எனக் கர்நாடக இசை வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்கள் பலர். அவர்களுள் தமிழிசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததுடன், செறிவான சீடர் பரம்பரையை உருவாக்கி இசையை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சென்றவர்களுள் முக்கியமானவர் செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர். இசையுலகில் நான்கு தலைமுறைகள் கண்டவர்; 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணி ஆற்றிவர்; தனது 92வது வயதில் கூட பிரசார் பாரதிக்காகக் கச்சேரி செய்தவர்; பாரதியாரின் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேடைதோறும் அதனைப் பரப்பியவர்; திருவனந்தபுரம் இசைக்கல்லூரியின் முதல்வராக நீண்டகாலம் பணியாற்றியவர் எனப் பல்வேறு பெருமைகளுக்குரியவர் செம்மங்குடி.

கும்பகோணம் அருகே உள்ள ஓர் அழகான சிற்றூர் செம்மங்குடி. அதற்குச் சற்றுத் தொலைவில் உள்ள திருக்கோடிக்காவலில் ஜூலை 25, 1908 அன்று, தர்மஸம்வர்த்தனி அம்மாளுக்கும், ராதாகிருஷ்ண ஐயருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார் சீனிவாசன். 'செம்மங்குடி' தந்தை ராதாகிருஷ்ண ஐயரின் ஊர். (எழுத்தாளர் மௌனி பிறந்த ஊரும் அதுதான்) திருக்கோடிக்காவல் அம்மாவின் ஊர். பிரபல வயலின் வித்வான் பிடில் கிருஷ்ணையரின் ஊரும் அதுதான். அவர் செம்மங்குடிக்கு மாமா முறை. அக்காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த வித்வான்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்தவர் கிருஷ்ணையர் தான். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, நாராயணசாமி ஐயர் உட்படப் பலர் அவரிடம் இசை பயின்றவர்களே.

##Caption## தந்தையார் செம்மங்குடி கிராமத்தில் தனது நிலபுலன்களை கவனித்துக் கொண்டு இருந்தார். சீனிவாசன் திருக்கோடிக்காவலில் தனது மாமா கிருஷ்ணையரின் வீட்டில் வளர்ந்தார். மாமாவின் மறைவுக்குப் பின் சொந்த ஊரான செம்மங்குடிக்குத் திரும்பி விட்டார். செம்மங்குடியின் தந்தை ஏகாதசி நாட்களில் கோவில்களில் பஜனை செய்து வந்தார். அத்துடன் ராதா கல்யாணம், அஷ்டபதி போன்றவற்றில் கலந்து கொள்வதும் வழக்கம். சிறுவன் சீனிவாசனும் அவருடன் செல்வார்.

செம்மங்குடி ஒரு குக்கிராமம். பள்ளிக்கூடம் பத்து மைல் தொலைவு. அவ்வளவு தூரம் சென்று கல்வி பயில்வதற்கான வசதிகள் இல்லாததால் சீனிவாசனுக்கு வீட்டிலேயே கல்வி தரப்பட்டது. காலச் சூழ்நிலையால் ஐந்தாவது வகுப்போடு கல்வி முற்றுப் பெற்றது.

செம்மங்குடியின் பெரியம்மா மகன் நாராயணசாமி ஐயர் அக்காலத்தில் பிரபல சங்கீத வித்வான். அவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர். நல்ல இசை ஞானம் கொண்டவர். தனது மாமா பிடில் கிருஷ்ண ஐயரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர். சீனிவாசனுக்கு எட்டு வயதானபோது நாராயணசாமி ஐயரிடம் இசை பயில அனுப்பப்பட்டார். அவர் கச்சேரி செய்யும் இடத்திற்கெல்லாம் கூடவே சென்றார். இது சீனிவாசனுக்கு நல்ல அனுபவங்களைத் தந்ததுடன், பெரிய இசைக் கலைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் தந்தது.

அக்காலத்தில் ஆலயங்களிலும் திருமணங்களிலும் நான்கு, ஐந்து நாட்கள் தொடர்ந்து கச்சேரிகள் நடக்கும். அவற்றில் பிரபல நாதஸ்வர அறிஞர்கள் திருவாரூர் நடேச பிள்ளை, சிதம்பரம் வைத்யநாதய்யர், கீரனூர் சகோதரர்கள், ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரின் வாசிப்பைக் கேட்டும், மதுரை புஷ்பவனம், பிடில் கோவிந்தசாமி பிள்ளை போன்றோரின் கச்சேரிகளைக் கேட்டும் தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார் சீனிவாசன்.

அச்சமயம் கோட்டு வாத்தியத்தில் மிகவும் பெயர்பெற்று விளங்கியவர் சகாராம ராவ். அவர் ஒருநாள் செம்மங்குடிக்கு வந்திருந்தார். சீனிவாசனின் இசையார்வத்தைப் பார்த்துவிட்டு, சிறுவனைப் பாடச் சொல்லிக் கேட்டார். அபாரமான குரல்வளம் இருப்பதைப் பார்த்து, சீனிவாசனைத் தன்னோடு அனுப்பி வைக்குமாறு அவரது தாயாரிடம் கேட்டுக் கொண்டார். தாயாரும் ஒப்புதல் அளிக்கவே சகாராம ராவுடன் திருவிடைமருதூர் புறப்பட்டுச் சென்றார் 16 வயதான சீனிவாசன்.

அன்றைய குருகுலம் மிகக் கடுமையானது. குரு எதை, எப்போது சொல்லிக் கொடுக்கிறாரோ அப்போதுதான் கற்றுக்கொள்ள முடியும். அது விடியற்காலை நேரமாக இருக்கலாம், நள்ளிரவாகவும் இருக்கலாம். புத்தகம், நோட்டு, நொடேஷன், சி.டி, கேசட் என்று எதுவுமில்லாத காலம். குரு சொல்லச்சொல்ல அதைக் கேட்டுச் சாதகம் பண்ணித்தான் இசை கற்றுக் கொள்ள வேண்டும். தவறாகப் பாடினாலோ, கவனம் குறைந்தாலோ அடி, உதை, திட்டுதான். இசை மீதிருந்த தணியாத ஆர்வம், இந்தச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு முன்னிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் சீனிவாசனைச் சங்கீதம் கற்றுக்கொள்ள வைத்தது. "ராயவர்வாளோட நாலுவருஷம் தங்கியிருந்த பெரும்பாக்கியம் எனக்குக் கிடைச்சது. அவருக்குக் கை-கால்களைப் பிடித்து விடுவேன்... வேஷ்டி-துணிமணியைத் தோச்சுப் போடுவேன்... இதெல்லாம் அவர் கேட்டோ, கண்டிஷன் போட்டோ நாங்க செய்யறதில்லை. குருகுலவாசத்தில் நாங்களாகவே விருப்பப்பட்டுப் பணிவிடை செய்வோம்..." என்று கூறியிருக்கிறார் செம்மங்குடி.

ஆலாபனையை விட சாஹித்யத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது குரு சகாராம ராவின் அறிவுரை. அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார் செம்மங்குடி.

சகாராம ராவிடம் பயிற்சி பெற்ற பின்னர் சிலகாலம் தமையனார் நாராயணசாமி ஐயரிடம் பயின்றார். ஆனால் அப்போது மேற்கொண்ட அதீத பயிற்சியினால் சீனிவாசனின் குரல் பழுதுபட்டது. ஒருமுறை இவர் பாடக் கேட்ட புதுக்கோட்டை வித்வான் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை, செம்மங்குடியை பாடுவதை விடுத்து, மாமா பிடில் கிருஷ்ணய்யரைப் போன்று வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்ளுமாறு பணித்தார். அது செம்மங்குடியின் மனதைப் புண்படுத்திற்று. ஆயினும் தனது அசுர சாதகத்தால், உடைந்த குரலைச் சரிசெய்து கொண்டதுடன் தனது சாரீரத்தையும் வளப்படுத்திக் கொண்டார்.

அன்றைய இசைமேதைகளுள் புகழ்பெற்று விளங்கிய மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடம் இசை பயிலும் வாய்ப்பு செம்மங்குடிக்குக் கிடைத்தது. அதை ஒரு திருப்புமுனை என்றும் சொல்லலாம். விஸ்வநாத ஐயரைப் பற்றிச் சொல்லும்போது "அவர் என்னையும் ஒரு மகனாகத்தான் கருதினார். தன்னோடு கச்சேரிகளில் பாடச் சொல்லி, பக்கவாத்தியம் வாசிக்கும் வித்வான்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தி, என்னை ஒரு பெரிய ஸ்தானத்திற்குக் கொண்டு வர உதவினார். அவரிடம் இருக்கும்போதுதான் நான் பல கீர்த்தனைகளைப் பாடம் பண்ணினேன்" என்று கூறியிருக்கிறார் செம்மங்குடி. தனது சீடரைப் பற்றி மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கூறுகையில், "சீனுவைப் போல் என்னிடம் எந்த சிஷ்யரும் இருந்ததில்லை. அடக்கம், மரியாதை, குருபக்தி, சமயோசிதம், ஆர்வம், உழைப்பு, லட்சிய, லட்சண ஞானங்கள் - இவையெல்லாம் சீனுவிடம் இயற்கையாகவே இருந்திருக்கின்றன. அவன் என் மூத்த பிள்ளை மாதிரி...." என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் சீடர் வழி வந்த மகாவித்வான் உமையாள்புரம் சாமிநாதய்யரிடம் குருகுலவாசம் செய்தார் செம்மங்குடி. அவரிடம் அரிய பல கீர்த்தனைகளை - குறிப்பாக, தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளை -- விரிவான ஸ்வர ஞானத்தோடு அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டார்.

இத்தனை மேதைகளிடம் பயின்றாலும் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரையே தனது மானசீக குருவாகக் கருதினார் செம்மங்குடி. "அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இசையால் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அவ்விசையினால் என்னுள் ஏற்பட்ட தாக்கம் வேறு யாருடைய இசையும் செய்யாதது. எனக்கு இன்னொரு ஜென்மம் கிடையாது என்றே நினைக்கிறேன். அப்படியே இன்னொரு ஜென்மம் இருக்குமானால் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரைப் போல நான் பாடவேண்டும் என்பதுதான் எனது ஆசை" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

செம்மங்குடியின் முதல் கச்சேரி 1926ல் திருநாகேஸ்வரம் ஆலயத்தில் நடந்தது. கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர், செம்மங்குடியின் மீது பேரன்பு கொண்டிருந்த மிருதங்க வித்வான் கும்பகோணம் அழகநம்பிப் பிள்ளை. அவரது மகன் ரத்தினவேலுப் பிள்ளை செம்மங்குடிக்கு மிருதங்கம் வாசித்தார். திருக்கோடிக்காவல் வெங்கட்ராம ஐயர் வயலின். கச்சேரி நன்கு நடந்ததுடன், செம்மங்குடிக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் வரத் துவங்கின. மைசூர் சௌடையா, பழநி சுப்ரமணிய பிள்ளை என பிரபல வித்வான்கள் பலரும் ஆர்வத்துடன் செம்மங்குடிக்கு பக்கம் வாசித்து அவரது முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தனர்.

'தையு' என்கிற தையம்மாளுடன் செம்மங்குடிக்கு திருமணம் நடந்தது. மனைவி வந்த வேளை கச்சேரி வாய்ப்புகள் பெருகின. கும்பகோணம், தஞ்சாவூர் வட்டாரத்தில் நடந்த அனைத்து வைபவங்களிலும் செம்மங்குடியின் கச்சேரி இடம் பெற்றது. தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டு, கர்நாடக சங்கீதத்தில் முத்திரை பதிக்கத் தொடங்கினார் செம்மங்குடி. 1927ல் மெட்ராஸ் செஷன் சங்கீதக் கச்சேரியில் பாடச் செம்மங்குடிக்குக் கிடைத்த வாய்ப்பு, அவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. ரசிக ரஞ்சனி சபா உட்படப் பல பிரபல சபாக்கள் செம்மங்குடிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. மதுரை மணி ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், ஜி.என்.பி., ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை, மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சுப்ரமண்ய ஐயர் போன்றோருக்கு இணையாகச் செம்மங்குடி மதிக்கப்படலானார்.

ஒருமுறை சென்னை கோகலே சாஸ்திரி ஹாலில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாடவேண்டும். அவர் வரவில்லை. செம்மங்குடிக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது. பிரபல வித்வான்கள் கோவிந்தசாமிப் பிள்ளை வயலின், தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா வாசித்தனர். செம்மங்குடி அற்புதமாகப் பாடி சபையோரைக் கட்டிப் போட்டார். கச்சேரியைக் கேட்க திருவிதாங்கூர் மஹாராணி சேதுபார்வதி வந்திருந்தார். செம்மங்குடியின் இசையில் மயங்கிய அவர், செம்மங்குடியைக் கேரளத்துக்கு வரும்படிக் கேட்டுக்கொண்டார். கேரளத்தில் கர்நாடக இசையைப் பரப்ப வேண்டும், ஸ்வாதித் திருநாள் மஹாராஜாவின் சாஹித்யங்களை ஒழுங்குபடுத்தித் தரவேண்டும் என்று இரு கோரிக்கைகளை ராணி முன்வைத்தார். அப்போதுதான் தமிழ் நாட்டில் இசைத்துறையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்த தான் கேரளத்துக்குச் செல்வதா என செம்மங்குடி யோசித்தார், தயங்கினார். அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி மஹா பெரியவரைச் சந்தித்தபோது, உடனடியாக அப்பணியை ஏற்றுக் கொள்ளும்படிப் பெரியவர் பணித்தார். தெளிந்த மனதோடு திருவனந்தபுரத்துக்குச் சென்றார் செம்மங்குடி.

##Caption## அப்போது இசைக் கல்லூரி முதல்வராக இருந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ஸ்வாதித் திருநாளின் கீர்த்தனைகளைத் தொகுத்துக் கொண்டிருந்தார். செம்மங்குடி அவருக்கு உதவியாக இருந்து செயல்பட்டார். 1940ல் முதல்வர் பதவியிலிருந்து முத்தையா பாகவதர் விலகவே, செம்மங்குடி இசைக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மஹாராஜாவும் ராணியும் வேண்டுகோள் விடுத்தனர். செம்மங்குடி தயங்கினார். அப்போது திவானாக இருந்த சர். சி.பி ராமசாமி ஐயர், செம்மங்குடி கட்டாயம் அப்பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அது மாணவர்களுக்கும் உதவிகரமாக இருப்பதுடன் சமஸ்தானத்திற்கும் பெருமையைத் தரும் என்று வலியுறுத்தினார். செம்மங்குடியும் அதற்கு உடன்பட்டார். கல்லூரி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். கல்லூரியில் பல சீர்திருத்தங்களைச் செய்ததுடன், நல்ல பல மாணவர்களை உருவாக்கினார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இசையை ஒரு பாடமாக வைப்பதற்கு ஏற்பாடு செய்தார். பல புகழ்பெற்ற தமிழக வித்வான்களை வரவழைத்து பயிலரங்குகளையும், கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார். ஊர்தோறும் சென்று கச்சேரிகள் செய்தார். நடுவில் மூன்றாண்டுகள் அகில இந்திய வானொலியின் இசைப்பிரிவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.

தொடர்ந்து கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர் 1963ம் ஆண்டில் தனது 55ம் வயதில் அப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஜி.என். பாலசுப்ரமணியத்தை முதல்வர் பொறுப்பில் நியமித்துவிட்டுச் சென்னை திரும்பினார். அப்போது தமிழ்நாடு இயல் இசைக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பிலிருந்து முசிறி சுப்ரமணிய ஐயர் ஓய்வு பெற்றதால் செம்மங்குடியை அப்பொறுப்பிற்கு நியமிக்க அரசு முடிவு செய்தது. அதை மறுத்த செம்மங்குடி சிறிது காலம் அதன் கௌரவ இயக்குநராகச் செயல்பட்டார். அப்பதவியில் இருந்தவரை தினம்தோறும் வகுப்புக்குச் சென்று பாடம் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

தனது இசை வாழ்க்கையில் சிறந்த பல சீடர்களை உருவாக்கியிருக்கிறார் செம்மங்குடி. பல மாணவர்கள் அவரது இல்லத்திலேயே தங்கி இசை கற்றுக் கொண்டார்கள். டி.எம். தியாகராஜன், பி.எஸ்.நாராயணசாமி, டி.என்.கிருஷ்ணன், வைகல் ஞானஸ்கந்தன் (சிக்கில் குருசரணின் குரு), கே.ஆர். குமாராசாமி ஐயர், பிரேமா-ஜெயா, சீதா ராஜன், ஓமனக்குட்டி, வி.ஆர்.கிருஷ்ணன் என பலர் அதில் முக்கியமானவர்கள். கே.ஜே. ஜேசுதாஸ், எம்.எஸ். சுப்புலட்சுமி உட்படப் பல பிரபல பாடகர்களுக்கும் இசை பயிற்றுவித்திருக்கிறார் செம்மங்குடி.

ஒருமுறை ரசிகர் ஒருவர் ஜி.என்.பியிடம் கரஹரப்ரியா ராகத்தை ஆலாபனை பண்ணச் சொல்ல, அதற்கு ஜி.என்.பி., "அதுதான் செம்மங்குடி அதை அக்குவேறு ஆணிவேறாக அலசித் தள்ளியிருக்கிறாரே. இனி நான் பாட என்ன இருக்கிறது?" என்றாராம். அந்த அளவிற்கு செம்மங்குடி, தான் பாடிய ராகங்களில் தான் பாடியதைத் தவிர வேறேதும் புதிதாகப் பாட முடியுமா என்று பிற இசைக் கலைஞர்கள் சந்தேகம் கொள்ளுமளவுக்கு தேர்ந்த இசை நுணுக்கம் அறிந்தவராக விளங்கினார். ரசிகர்களால் செம்மங்குடி "கரஹரப்ரியா சீனிவாசய்யர்" என்றே போற்றப்பட்டார்.

இசையில் புதுமைகளை ஏற்றுக் கொள்வதில் செம்மங்குடிக்கு உடன்பாடு உண்டு என்றாலும் பழமைக்கும், மரபுக்கும் பங்கம் வராததாக, அதை பாதிக்காததாக அந்தப் புதுமைகள் இருந்தால் மட்டுமே அவர் வரவேற்பார். மற்றவற்றை நிர்தாட்சண்யமாக அவர் நிராகரித்து விடுவார். அவரது கச்சேரிகளில் ஆலாபனையும், கல்பனா ஸ்வரமும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கும். ஸ்வர ஒற்றுமை கொண்ட ராகங்களை அடுத்தடுத்துப் பாடுவதைத் தவிர்ப்பார். பிரபல க்ருதிகளையும், ஓரிரு புதிய க்ருதிகளையும் கொண்டதாகவே தனது கச்சேரிகளை எப்போதும் அமைத்திருந்தார்.

செம்மங்குடி இசை விமர்சகர்கள் பற்றிக் கூறும் போது "இசை விமர்சகர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும். விமர்சனம் என்பது குறைகளைச் சுட்டிக் காட்டுவதாய் இருக்க வேண்டுமே தவிர, கலைஞரை மனம் தளர விடக் கூடாது. அவர்களது மனதைப் புண்ணாக்கி விடக் கூடாது. இது மிகவும் முக்கியம்" என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

ஆயிரக்கணக்காண கச்சேரிகளைச் செய்தவர் என்றாலும் அதுபற்றிய அகங்காரம் எதுவுமில்லாமல் அமைதியாக, எளிமையாக வாழ்க்கை நடத்தினார் செம்மங்குடி. மகாத்மா காந்தியின் மீது அவருக்குப் பற்று அதிகம். தம் வாழ்நாள் இறுதிவரை ஒரு காந்தியவாதியாகவே வாழ்ந்தார். இறுதிவரை ராட்டையில் நூல் நூற்றுக் கதாராடையாக்கி அதையே அணிந்து வந்தார். வயதான பின்னரும் நூலை நூற்று, அதனைச் சர்வோதய சங்கத்துக்கு அனுப்பி, அங்கிருந்து நெய்து வரும் ஆடையையே அணிவார்.

"அக்காலத்தில் மிகச் சில சபாக்கள் மட்டுமே சென்னையில் இருந்தன. ஆனால் சமீப காலங்களில் இசைக் கலைஞர்களின் எண்ணிக்கையைப் போலவே சபாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அன்றைய இசைக் கலைஞர்கள் பலர் கச்சேரி செய்து கொண்டிருக்கும் போது சிறு சலசலப்பு கேட்டால் கூட கச்சேரியை நிறுத்திவிட்டு எழுந்து போய்விடுவர். ஆனால் இன்று இசைக்கலைஞர்கள் ஒழுங்கீனத்தையும், இடையூறையும் பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டார்கள். கச்சேரி கேட்க வருகிறவர்கள் திரைப்படத்திற்குப் போவதைப் போல வருகிறார்கள். ரசிகர்களிடையே அரசியல் மற்றும் ‘புடவை'ப் பேச்சு அதிகமாகி விட்டது. பாட்டுக்கு நடுவில் ‘அப்ளாஸ்' பறக்கிறது. கை தட்டலை வைத்துக் கச்சேரியின் வெற்றியை நிர்ணயிக்கும் போக்கு இருக்கிறது. இதெல்லாம் வருத்தமான விஷயங்கள். அந்தக் காலத்தில் இசைக் கலைஞர்களுக்கு பெண் கொடுக்கவே பயந்தனர். இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நிறையப் பெண் இசைக் கலைஞர்கள் வந்திருக்கிறார்கள். இது வரவேற்புக்குரிய விஷயம்" என்றார் செம்மங்குடி.

கடல்கடந்து பல அழைப்புகள் வந்தாலும், தந்தைக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி காரணமாக அவர் செல்லவில்லை. ஒவ்வொரு கச்சேரியிலும் தனக்குக் கிடைத்த சன்மானத்தில் குடும்பத் தேவை போக எஞ்சியதைச் சமூகப் பணிகளுக்கே அவர் செலவிட்டார்.

39 வயதிலேயே அவருக்கு சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது கிடைத்து விட்டது. இதுதவிர சங்கீத கலா சிகாமணி, இசைப் பேரறிஞர், பத்மபூஷண் போன்ற விருதுகளும் அவரைத் தேடி வந்தன. வட அமெரிக்கக் கர்நாடக இசைச் சங்கம் அவருக்கு ‘சங்கீத சாகரம்' என்ற விருதை அளித்து கௌரவித்தது. சங்கீத சாம்ராட், காளிதாஸ் சம்மான் போன்ற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். கேரளப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.

இசையையே சுவாசித்த செம்மங்குடி 2003ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் மறைந்தார். ஆனால் அவரது இசைக்கு என்றும் அழிவில்லை. இசை என்றால் புகழ் என்றும் பொருள் உண்டே.

பா.சு.ரமணன்

© TamilOnline.com