யுவன் சந்திரசேகர்
கவிஞராக எழுத்துலகில் புகுந்த யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர்வலர் கூட. தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்து வரும் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர். ஆர். சந்திரசேகரன் என்னும் இயற்பெயர் கொண்ட யுவன், பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில். பள்ளிப்படிப்பு அங்கேதான். பன்னிரண்டு வயதில் தந்தை காலமானதால் யுவன் குடும்பம் மதுரைக்குக் குடிபெயர்ந்தது. மதுரையில் உயர்நிலைப் படிப்பு. பின் அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம்.

கல்லூரியில் படிக்கும்போதே யுவனுக்கு இலக்கியத்தில் பெரும் நாட்டம் இருந்தது. முதல் சிறுகதை கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது. "அதற்கும் முன்பே சாவி இதழில் ஒரு படைப்பு பிரசுரமானது. ஆனால் அதைச் சிறுகதையென்று சொல்ல மனசாட்சி மறுக்கிறது" என்கிறார் யுவன். பின்னர் யுவனின் கவனம் கவிதைகளில் சென்றது. முதல் கவிதை விருட்சம் இதழில் வெளியானது. தொடர்ந்து தீவிரமாகக் கவிதைகள் மட்டுமே எழுதி வந்தார். பின்னரே அவரது கவனம் புனைகதைகளில் திரும்பியது.

"எனக்கு எழுத்தார்வம் வரக் காரணம் என் தந்தையின் மறைவுதான். கதைக் களஞ்சியமான அவரது மறைவே புத்தகங்களிடம் என்னை நகர்த்திச் சென்றது. மேலும் மேலும் புத்தகங்கள் எழுதத் தூண்டியது" என்கிறார் யுவன். யுவனின் கதை சொல்லும் பாணி சராசரி கதை சொல்லும் பாணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாசகனைப் புனைவுலகின் ஆழத்துக்குள் அமிழ்த்திவிடக் கூடியது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என்று செல்லும் யுவனின் கதைகள், வாசகனுக்கு நுட்பமான வாசிப்பின்பத்தை அளிப்பதுடன், படைப்பின் நிர்ப்பந்தங்களற்ற இனியதொரு புத்துலகுக்கு அவனை அழைத்துச் செல்வன.

##Caption## நாம் காணும் இந்த உலக யதார்த்தம் இதன் ஒரு முகமே. இன்னும் நாம் அறியாத பல யதார்த்த முகங்கள் உள்ளன என்னும் மாற்று மெய்ம்மை பற்றிய கருத்துக்களை யுவனின் படைப்புகளில் காணலாம். இவரது கதைகள் தன்மை ஒருமையில் கதை சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. பெரும்பாலான கதைகள் கிருஷ்ணன் என்ற மையக் கதாபாத்திரத்தின் வழியாகச் சொல்லப்பட்டவை. இவரது படைப்புகளில் மற்றொரு கதாபாத்திரமாக வரும் இஸ்மாயிலும் சுகவனமும் கதைசொல்லியான கிருஷ்ணனின் பிற முகங்களே.

கதைகளை பலகதைகளின் தொகுப்பாகவும் சுய அனுபவங்களாகவும் சொல்வது, தன்னையே பல ஆளுமைகளாக உருவாக்கிச் சித்திரிப்பது, வாசகனுடன் நேருக்கு நேர் பேசுவது போன்ற உரையாடல் பாணிகளில் கதையை நகர்த்திச் செல்வது என்று பின் நவீனத்துவத்தின் அனைத்துக் கூறுகளும் கொண்டவையாக யுவனின் கதைகள் விளங்குகின்றன. வாழ்வைச் சற்றே கிண்டலும், கேலியும் கலந்ததாக இவரது கதைகளில் காண முடிகிறது. எல்லா வகையான வட்டார வழக்குகளையும் கலந்து எழுதும் திறமையும் இவருக்கு இருக்கிறது. யுவனின் படைப்புகள் சிலவற்றை ஒரே பிரதியின் பல்வேறு பக்கங்கள் என்று கூடச் சொல்லலாம்.

"ஒற்றை உலகம்", "வேறொரு காலம்", "புகைச் சுவருக்கு அப்பால்", "கைமறதியாய் வைத்த நாள்" ஆகிய நான்கும் கவிதைத் தொகுப்புகள். "குள்ளச்சித்தன் சரித்திரம்", "பகடையாட்டம்", "கானல் நதி" மூன்றும் நாவல்கள். "ஒளிவிலகல்", "ஏற்கனவே" ஆகிய இரண்டும் சிறுகதைத் தொகுப்புகள். "பெயரற்ற யாத்ரீகன்" என்ற தலைப்பில் ஜென் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். ஜிம் கார்பெட்டின் ஆங்கில நூலை "எனது இந்தியா" என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். இவரது "மணற்கேணி" குறுநாவல் வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றது. இவரது சிறுகதைகள் அனைத்தையும் முழுத் தொகுப்பாக கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரது படைப்புகளுக்கு திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் விருதளித்து கௌரவித்துள்ளது.

எழுத்து என்பது பற்றி யுவன் "முன்பெல்லாம் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று இப்படித்தான் கதை இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தன. ஆனால் இப்போது அப்படிப்பட்ட தடைகளெல்லாம் இல்லை. முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் எதையும் சுவாரஸ்யமாகச் சொல்வது மிகவும் முக்கியம். நம்ப முடியாத நிகழ்வுகள் கொண்டதாகக் கூட கதைகள் எழுதலாம். ஆனால் வாசகனைத் தொடர்ந்து படிக்கத் தூண்டும்படி அது இருக்க வேண்டும்" என்று சொல்கிறார்.

"பத்து வருடங்கள் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நான், திடீரென்று புனைகதைக்குள் இறங்கி, கணிசமாக எழுதவும் செய்திருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது" என்கிற யுவன், பாரதியின் மீதும் அரவிந்தர் மீதும் பற்றுக் கொணடவர். கவிஞர்களுள் தேவதச்சனும், சமகால எழுத்தாளர்களில் ஜெயமோகனும் இவரது மனம் கவர்ந்தவர்கள். கர்நாடக இசையில் பெருத்த ஆர்வம் உண்டு. ஹிந்துஸ்தானி இசையைப் பெரிதும் நேசிக்கிறார். பிரபல கர்நாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியம் இவரது நெருங்கிய நண்பர்.

"என்னைச் சுற்றியுள்ள அனைவருமே எனது எழுத்துக்கு உறுதுணையாக இருப்பவர்கள்தாம். பிடித்த, பிடிக்காத நூல்கள், வணிகப் பத்திரிகைகள் என்று எல்லாமே எனக்குள் பாதிப்பு ஏற்படுத்துகிறவைகள்தாம்" என்று கூறும் யுவன், சமீபத்தில் உரையாடல் அமைப்பு நடத்திய சிறுகதைப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருக்கிறார். எப்படிக் கதை எழுத வேண்டும், கதை எழுதுவதற்கான நுட்பங்கள் என்னென்ன, அதன் நுணுக்கங்கள், மொழி ஆளுமை, உத்திகள் யாவை என்பது பற்றியெல்லாம் விரிவாக அதில் விளக்கியிருக்கிறார். (அதன் காணொளியைக் காண)

##Caption## "புனைவு என்பதே முழுக்க முழுக்கக் கற்பனை. Method acting போல் அல்ல அது. தலித் பிரச்சினைகளை எழுத அவர் தலித்தாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி எழுதப்பட்ட படைப்பு அவர்களின் வலியைச் சரியாய் பிரதிபலிக்கவில்லையென்றால், ஒதுக்கலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் எழுதவே கூடாது என்பது ஃபாசிசம்" என்பது யுவனின் கருத்து. தான் ரசிக்கும் தற்கால படைப்பாளிகள் வரிசையில் யுவன் சந்திரசேகருக்கும் முக்கியத்துவம் தருகிறார் பிரபல விமர்சகர் வெங்கட் சாமிநாதன்.

பன்முகம், உயிர்மை, காலச்சுவடு, சொல்புதிது, தீராநதி, சாம்பல், அகநாழிகை, உலகத்தமிழ்.காம் என இலக்கிய, இணைய இதழ்களில் யுவனின் கதை, கவிதை, விமர்சனக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. கனடாவிலிருந்து வெளிவந்த காலம் இதழிலும் கதைகள் எழுதியிருக்கிறார். பிரபல இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

லட்சியங்கள் திட்டங்கள் என்றெல்லாம் எதுவும் இல்லாமல் என் போக்கில் சுதந்திரமாக எழுதிக் கொண்டிருப்பதே எனக்கு விருப்பமானது என்று கூறும் யுவன், மனைவி, மகன், மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். பாரத ஸ்டேட் வங்கியில் முதுநிலை எழுத்தராகப் பணியாற்றுகிறார்.

யுவன் போன்ற கதை சொல்லிகள் தங்களது சொல்லாடல்கள் மூலம் வாசகர்களைப் புனைகதை உலகின் இனிமையானதொரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

அரவிந்த்

© TamilOnline.com