தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு
தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். 57 வயதாகும் இவர் தற்போது கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி. மாலிக்யுலார் பயாலஜி ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். வேதியியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபெல் பரிசு இவருக்கு கிடைத்துள்ளது. ரிபோ நியூக்ளியைக் அமிலத்தில் உள்ள புரதங்கள் குறித்து விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டிருந்தார். பின்னர் இவரும், தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ரிபோசோமில் உள்ள ஆயிரக்கணக்கான அணுக்களைக் கண்டறிய எக்ஸ்-ரே மற்றும் கிரிஸ்டலோகிராஃபி போன்ற முறைகளைப் பயன்படுத்துவது குறித்து இவர்கள் செய்த ஆய்விற்கே தற்போது நோபெல் பரிசு கிடைத்துள்ளது. சர் சி.வி. ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வரிசையில் சிதம்பரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட்ராம் ராமகிருஷ்ணனும் இடம்பெறுவது பெருமைக்குரியது. வேதியல் துறையில் நோபெல் பரிசு பெற்ற ஹர்கோபிந்த் குரானாவும் இந்தியர்தான் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது.



© TamilOnline.com