நவம்பர் 2009: வாசகர் கடிதம்
'அஞ்சலி' கட்டுரையை அருமை என்று சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்ற மிகுந்த தயக்கதுக்குப் பின் எழுதுகிறேன். சொல்லாமல் இருக்க முடியவில்லை. தென்கச்சியாரைப் பற்றிய மதுரபாரதியின் சித்திரம் அருமை. வள்ளுவர் வழியில் வாழ்ந்தார் என்ற ஒன்று போதும்.

சந்திரசேகரன் (மின்னஞ்சலில்).

*****


ஜூலை 2009 இதழிலிருந்து தென்றலைப் படித்து வருகிறேன். மிகவும் சுவையாக உள்ளது. ஆன்லைனிலும் படிக்கிறேன். எழுத்தாளர், நேர்காணல்கள் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் அளவற்ற தகவல்களை அறியத் தரும் தென்றலுக்கு நான் நன்றியுடைவனாக இருக்கிறேன். தென்கச்சி சுவாமிநாதன் போன்ற தன்னலமற்றவர்களைப் பற்றி வாசிக்கையில் என் இதயம் பெருமிதத்தில் விம்முகிறது. உங்கள் பத்திரிகையில் எழுதுபவர்களைப் பற்றியும் அறிய நான் விரும்புகிறேன். நான் தற்போது என் மகளுடன் கலிஃபோர்னியாவில் இருந்தாலும் மும்பைவாசி. பல ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல தமிழ்க் கதை கட்டுரைகளை வாசிப்பது சுகமாக இருக்கிறது.

சுந்தரம் ஸ்ரீகண்டன்

*****


நம்பர் ஒன் அணு ஆயுத நாடு என்ற இடத்துக்குப் போட்டியிட இப்போது USSR இல்லை. இரான் ஆயுதப் பரிசோதனை செய்கிறது. சீனா முதலிடத்துக்கு முட்டி மோதுகிறது. அமெரிக்க அதிபர் கவலைப்படுவதில் நியாயம் உண்டு. 1962ல் நமது பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்த பின்னும் கூட இந்தியா பாடம் கற்கவில்லை. 'தென்றல் பேசுகிறது' (அக்டோபர் 2009) இவற்றை மிக அழகாகச் சொல்லியுள்ளது.

திருமலைராஜன் (மின்னஞ்சலில்)

*****


செப்டம்பர், 2009 தென்றல் 'நகைச்சுவைச் சிறப்பிதழ்' குதூகலமாக இருந்தது. பாக்கியம் ராமசாமியின் காலத்தால் அழியாத 'அப்புசாமி-சீதாப்பாட்டி' உள்ளிட்ட 'சீதே ஜே.பி' சிறுகதை, கிரேஸி மோகன் நேர்காணல், இல்லினாய்ஸ் சேகரின் 'கலைமகள் கைப்பொருள்', எல்லே சாமிநாதனின் 'முதலீடு' ஆகிய நகைச்சுவைச் சிறுகதைகள், ஏராளமான துணுக்குகள் என்று தேர்ந்த நகைச்சுவை உணர்வோடு அருமையான இதழை வடிவமைத்த 'தென்றல்' குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் 'பொருட்களை உபயோகப்படுத்தி மனிதர்களை நேசியுங்கள் -மாறாக அல்ல' என்ற வரிகள் தாரக மந்திரம். சிகாகோவிலிருந்து வாஷிங்டன் வரை நடைப்பயணம் மேற்கொண்டு ஈழத்தமிழர் வாழ்க்கைக்கு ஆதரவு தேடும் மூன்று இளைஞர்களை 'போதும் இந்த மெளனம்' என்ற கட்டுரை மூலம் நமக்கு அறிமுகப்படுத்திய சிகாகோ பாஸ்கருக்கு நன்றி.

சென்னிமலை. பி. சண்முகம்,
நியூயார்க்.

*****


அட்லாண்டா வந்ததிலிருந்து 'தென்றல்' படிக்கிறேன். மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. வித்தியாசமான, பயனுள்ள தகவல்கள் நிறைந்திருக்கின்றன.

பட்டம்மாள்,
அட்லாண்டா

*****


தென்றல் ஆகஸ்ட் இதழில் வெளியான ஒவ்வொரு பகுதியும் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஆர்.வெங்கடேஷ் எழுதிய 'அனுமன் சாட்சி' என்ற கதையின் கடைசி மூன்று பாராக்கள் மனதை நெகிழ வைத்தன. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களுக்கு வந்த பெயர் குறிப்பிடப்படாத கடிதம் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. மருத்துவர் வரலட்சுமி நிரஞ்சன் எழுதிய 'இதய முடுக்கி' கட்டுரை மிகவும் பயனுள்ளதாகவும், இதயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பேருதவியாகவும் இருந்தது. ஜெயமோகனின் பேட்டியில் தற்பொழுதுள்ள அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை சிறப்பாக எடுத்தியம்புவதுடன், முந்தைய தலைமுறை, இன்றைய தலைமுறை மக்களிடம் நிலவிய, நிலவுகின்ற விழிப்புணர்ச்சியின்மையைச் சுட்டிக் காட்டுவதாயும் இருந்தது.

பு.பா. சுந்தரேசன்,
மால்பொரோ, மசாசூசெட்ஸ்

*****


பன்றிக்காய்ச்சல் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளது. திரு. வி. கல்யாணம் அவர்களின் நேர்காணலை மிகவும் ரசித்தேன்.

தென்கச்சி சுவாமிநாதனுக்குச் செலுத்திய அஞ்சலி என்னை அழவைத்தது. நான் அவரோடு 1977ல் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றினேன். ஒரு சகோதரரைப் போல மிகவும் நெருக்கமாக இருந்தேன். அமெரிக்காவுக்கு வந்தபின்னும் பத்து நாட்களுக்கு ஒருமுறை அவரோடு பேசுவேன். அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு முதல்நாளும் பேசினேன். அவரைப்பற்றி மதுரபாரதி அவர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு சொல்லும் நூற்றுக்கு நூறு உண்மை.

பைம்பொழில் எம். நாகூர் மீரான் (ஓய்வுபெற்ற அதிகாரி, ஆல் இந்தியா ரேடியோ)
நேப்பர்வில், சிகாகோ.

*****


தென்றலில் வெளியிடப்படும் ஒவ்வொரு பகுதியும் ஒரு சாதனையாகத் தெரிகிறது. 'இளந்தென்றல்' சிறுவர், சிறுமிகளின் பகுதி மிகவும் வரவேற்கத்தக்கது. இப்பகுதி குழந்தைகளின் கற்பனைத் திறனையும், சிந்தனைச் சக்தியையும் ஊக்குவிக்கப் பெரிதும் உதவும். தமிழ் நாட்டை விட்டுப் பல்லாயிரம் மைல்கள் அப்பால் வந்து 'தென்றல்' பத்திரிகையினை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருவதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம் குமாரசுவாமி,
மென்லோ பார்க், கலிபோர்னியா

*****


தென்றல் குழுவினருக்கு எப்படி நன்றி சொல்வது என்று அறியாமல் தவிக்கிறேன். உங்கள் சேவைக்கு இலங்கை சின்மயா மிஷன் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. ஒருமுறை TNA கூட்டத்தில் தற்செயலாகத் தென்றல் பதிப்பாளரைச் சந்தித்தது என் பெரும் பாக்கியம். எல்லாம் வல்ல ராமபிரானுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றி!

கௌரி மகேந்திரன், சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com