பாலைவனத்து இளநீர்
'சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது'

தனது பிங்க் கலர் ஸ்கூட்டியை வராண்டாவில் நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் ஸ்ருதி.

"வாம்மா, பிங்கி" தனது செல்ல மகளை செல்லப் பெயர் கொண்டு பாசத்துடன் அழைத்தார் அப்பா மகேஸ்வர். பிங்கி என்று அவளை அவர் அழைப்பதே அவளது கலரை வைத்துத்தான். அவள் அம்மா போல் இவளுக்கும் பாட்டில் ஈடுபாடு வர வேண்டுமென்று ‘ஸ்ருதி' என்ற பெயரை வைத்தார் அவள் தாத்தா.

"என்னப்பா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க... எப்பவும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, பங்கு விலை உயர்வு, ஷேர் மார்க்கெட் காலி அப்படின்னு ஏதாவது பிரச்சனையைப் பத்தியே பேசி புலம்பிட்டு இருப்பீங்க..."

"என்னம்மா கிண்டலா, நீ மட்டும் என்னவாம்? வரவர இந்த உலகமே சரியில்லை. வன்முறையும், அநியாயமும் தலை விரித்தாடுதுன்னு ஊரையே திருத்தப் பிறந்தவள் போல பேசிக்கிட்டுத் திரிவ. இன்னிக்குக் கோடைகாலத்து பானைத் தண்ணியாட்டம் இருக்க"

"இல்லப்பா, நான் இன்று எங்க ‘இளைஞர் அணி' தலைவியா ஆனதிலேர்ந்து 100வது கண்ணை எடுத்து தானமா கொடுத்தேன். என்னால நூறுபேர் உலகத்தப் பார்க்குறாங்க. அதான் இவ்வளவு சந்தோஷம்."

"சரி சரி, அப்பாவும், பொண்ணும் பேசினது போதும். வாங்க சாப்பிட..." அம்மாவின் ஆணை பிறந்தது.

##Caption##"ஆமாம்மா, உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்."

"என்னப்பா, சீக்கிரம் சொல்லுங்க."

"நம்ம வீட்டுக்கு இன்னிக்குக் காலைல டாக்டர் ரங்கபாஷ்யம் வந்திருந்தார்மா."

"என்னப்பா சொல்றீங்க! அவர் எவ்ளோ பெரிய டாக்டர். எல்லோரும் அவரைத் தேடித்தான் போவாங்க. அவர் ஏன் நம்ம வீட்டைத் தேடி வந்தார். என்ன விஷயமாம்?"

"உன்னை அவங்க வீட்டுக்கு மருமகளாக்கிடணுமாம், அதான்."

"வாட், என்னப்பா பேசுறீங்க. அவுங்க எங்க, நாம எங்க. என்ன... நம்பள பலிகடா ஆக்கப் பார்க்கறாங்களா? இல்ல, அவங்க பையன் ஏதும் சரியில்லயா?"

"அட என்னம்மா நீ! காலைல அவர் வந்துட்டுப் போனதும், என்னுடைய டாக்டர் நண்பர் மூலமா எல்லாத்தையும் விசாரித்தேன். நல்ல குடும்பம்தான். பையனும் ஒண்ணும் தப்பானவன்லாம் இல்ல. அவனும் ஒரு டாக்டர்தான். அவனைப் பத்தி எல்லோரும் நல்லாத்தான் சொல்றாங்க. இப்ப ஒண்ணும் அவசரமில்லை, நீ மெதுவா யோசிச்சு பதில் சொல்லு. நானும் இன்னும் தீர விசாரிக்கிறேன்."

அன்றுமுதல் அவள் மனதில் ஏதோ ஒரு பதற்றம். எந்தச் செயலிலும் மனது ஈடுபடவில்லை.

அழைப்புமணிச் சத்தம் கேட்டு கதவைத் திறந்த டாக்டர் ரங்கபாஷ்யத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. எதிரே நின்றவளைப் பார்த்து. வலிய வந்த ஸ்ரீதேவியை வரவேற்று உபசரித்தார். ஆம், அது ஸ்ருதியே தான்.

"என்னம்மா இவ்ளோ தூரம், அப்பா ஏதாவது சொன்னாரா?"

"ஆமாம், சொன்னாரு. அதைப் பத்தித்தான் பேசிட்டுப் போலாம்னு வந்தேன்."

"வாம்மா, உட்கார்ந்து பேசலாம் வா..."

"என்னப் பத்தியும், எங்க குடும்பத்தப் பத்தியும்..."

"வேண்டாம்மா, நீ சொல்லவே வேண்டாம். எங்க குடும்பத்துக்கு ஏற்றாற்போல தகுதி உங்களுக்கு இல்ல. உங்க அப்பா ஒரு சாதாரண அரசு அலுவலர். கார் கூடக் கிடையாது. எங்க தகுதிக்கு ஏற்ப உங்களால் வரதட்சணை தர முடியாது - இதான நீ சொல்ல வந்தது? நான் உங்க குடும்பத்தப் பார்த்து வரவில்லை. உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதுபோதும்."

"இல்ல சார், இன்னொரு முக்கியமான விஷயம்..."

"தெரியும்மா, நீ ஒன் ஒரு கிட்னிய தானமாக் கொடுத்தவ. அதுவும் எனக்குத் தெரியும்."

"தெரியுமா சார். தெரிஞ்சுமா?"

"நான் சொல்றதக் கொஞ்சம் பொறுமையாக் கேளும்மா. என் மகன் சஞ்சீவிக்கு அம்மா பாசம்னா என்னன்னே தெரியாதம்மா. நான் வாங்கி வந்த வரம் அப்படி. அவ தானும் வாழல. என்னை வாழ விடவும் இல்ல. ஒரு டாக்டரா, நான் என் தொழிலை தெய்வமா மதிக்கிறது அவளுக்குப் பிடிக்கலை. அதெல்லாம் இப்போ எதுக்கும்மா. அவ என்னை விட்டுப் பிரிஞ்சு போயிட்டா. தனியா என் மகனை வளர்த்து அவனையும் ஒரு டாக்டராக்கிட்டேன். அவனுக்கும் என்னைப் போல தொழில் பக்தி அதிகம். அவன் தன் தொழிலை தெய்வீகமா நடத்தணும்னா உன்னைப் போல, ஒரு தியாக சிந்தனையும், சேவை மனப்பான்மையும் உள்ள பெண் தான்மா மனைவியா அமையணும். உன்னுடைய சமூக சேவையைப் பத்தி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நீ உயிர் வாழ்வதற்கும், நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கும் ஒரு கிட்னி போதும்ங்கறது டாக்டரான எனக்கு நல்லாத் தெரியும். அவன் இழந்த அந்தத் தாய்ப்பாசத்தை உன்னால் தாம்மா அவனுக்குக் கொடுக்க முடியும். நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன். அவனை என்னோட சேத்து வையுங்கன்னு கேக்குற பெண்கள் மத்தியில் இப்படி ஒரு பெண் இருப்பது கோடைக்கால மழை மாதிரிம்மா. அப்புறம் உன் இஷ்டம்..."

எல்லா மலருக்கும் மாலையாகத் தானே ஆசை இருக்கும்!

"சரிங்க மாமா, என் அப்பா, அம்மா கிட்ட வந்து பேசுங்க" தன் பதிலைத் தெரிவித்தாள் அந்தக் கோடை மழையாள்.

பாலைவனத்தில் தணியாத தாகத்துடன் நிற்பவன் கையில் ஓர் இளநீர் கிடைத்தது போல் இருந்தது டாக்டர் ரங்கபாஷ்யத்திற்கு.

கலா ஞானசம்பந்தம்,
மவுண்டன்வியூ, கலிபோர்னியா

© TamilOnline.com