திருவாரூர் தியாகராஜர்
தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்களுள் பல்வேறு சிறப்புத்தன்மைகள் கொண்ட ஒரே ஆலயம் திருவாரூர் தியாகராஜர் ஆலயம். சிலப்பதிகார காலத்துக்கும் முற்பட்ட திருவாரூர் திருத்தலத்து மிகப் பழமையான ஆலயம் இது என்பது 'திசையெட்டும் தெரிவதற்கு முன்னே' என்ற பாடல் மூலம் அறியலாம். மகாவிஷ்ணு, தேவேந்திரன் மற்றும் முசுகுந்த சக்ரவர்த்தி ஆகியோரால் பூஜிக்கப்பட்டது இந்தத் தியாகராஜர் விக்ரகம். புற்றிடங்கொண்டார் (வன்மீகநாதர்) எழுந்தருளியுள்ள திருக்கோயில் 'பூங்கோயில்' என்று குறிப்பிடப்படும்.

'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியுள்ளார். பெரியபுராணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பு என்னும் பகுதியும் இத்தலத்தைச் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்ததே.

சித்தந் தெளிவீர்காள் அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ முத்தி யாகுமே.

பிறவி யறுப்பீர்காள் அறவ னாரூரை
மறவா தேத்துமின் துறவி யாகுமே.

என்றெல்லாம் சம்பந்தர் தேவாரம் இத்தலத்தின் புகழைக் கூறுகிறது.

இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகள் பெற்றது. உலகத்திலேயே கருவறையில் இறைவன் இல்லாத ஒரே கோயில் இதுதான். தினசரி நீராட்டும் இறைவனுக்குக் கிடையாது.

##Caption## நவக்கிரகங்கள் தீபமாய் இருப்பது, நந்தியெம்பெருமான் நின்ற கோலத்தில் உள்ளது. ஏழு யந்திரங்கள் மேல் 'ருண விமோசனர்' என்ற சிவலிங்கம் இருப்பது, ஈசான்யம் பார்க்க அம்பாள் எழுந்தருளியுள்ளது, முகுந்தார்ச்சனை (மகாவிஷ்ணுவினால் சொல்லப்பட்டது), முசுகுந்தார்ச்சனை, இந்திரார்ச்சனை என்ற மூன்று அர்ச்சனைகள் செய்யப்படுவது, கோயிலுக்கு ஐந்து பிரதான வாயிற்கோபுரங்கள் இருப்பது, குறிப்பிட்ட மலர்களை மட்டுமே அர்ச்சனைக்கு ஏற்பது, வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளைப் பார்க்க முடியும் என்பது, சிதம்பர ரகசியம் போல் திருவாரூர் ரகசியமும் உண்டு என்பது போன்ற தனிச்சிறப்புக்கள் முக்கியமானவைகளாகும்.

300 டன்னுக்கு மேல் எடையுள்ள பிரம்மாண்டமான ஆழித்தேரைத் தவிர மற்ற வாகனங்களில் தியாகேசர் வீதி உலா வருவதில்லை. மதுரையில் 64 திருவிளையாடல்கள் செய்த சிவன், இங்கு 365 திருவிளையாடல்கள் செய்திருப்பது பலர் அறியாத ஒன்று. கிரகண காலங்களில் நடை திறந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதும் தனிச்சிறப்பு.

குண்டலினி சக்திக்கு ஆதாரமான இத்தலம் மூலாதாரத் தலம் எனப் பெயர் கொண்டது. கமலாம்பிகையின் உற்சவ விக்ரகம் மனோ சக்தியின் வடிவமான மனோன்மணி வடிவமாகும். பஞ்சபூதத் தலங்களில் ப்ருத்வி ஷேத்திரமாகக் (காஞ்சியையும் சொல்வதுண்டு) கூறப்படுவதோடு 'ஜனனாத் கமலாலயே' என்று பிறப்பால் முக்தியளிக்கும் தலமாகவும் சொல்லப்பட்டுள்ளது. சக்தி பீடங்களில் நான்காவதாகக் கூறப்படுவது கமலாம்பிகை ஆலயம். அதிகத் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட தலம் இது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தீட்சிதராலும், பாபநாசம் சிவன் போன்றவர்களாலும் பாடல்கள் பாடப் பெற்ற தலம். தீட்சிதர் பாடிய 'வாதாபி கணபதிம்', 'வல்லபா நாயகஸ்ய', 'ஸ்ரீ மஹா கணபதிம்' போன்ற விநாயகர் கீர்த்தனைகள் அனைத்தும் இங்குள்ள விநாயகர் மூர்த்தங்கள் மேல் பாடப் பெற்றவை.

இக்கோயிலின் திருக்குளம் பல முக்கிய தீர்த்தக் கட்டங்கள் கொண்டது. 'ஆலயம்' என்ற பெயர் கொண்ட திருக்குளம் கமலாலயத் திருக்குளம் ஒன்றே! தருமபுரம் ஆதினம் அமைய அருளாசி கொடுத்ததும் ஆரூரில்தான்.

தஞ்சைப் பெரியகோயில் கட்ட, இராஜராஜ சோழனுக்கு முன்மாதிரியான இருந்தது அசலேஸ்வரர் சன்னதி. இந்தக் கோயிலின் கலச நிழல் கீழே விழாத வண்ணம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மட்டுமே தந்தம் இல்லாத விநாயகரைப் பார்க்கலாம்.

இங்கே இரண்டு திருவிழாக்கள் மிக முக்கியமானவை. திருவாதிரைத் திருவிழா முதலாவது. பழங்காலந்தொட்டே இவ்விழா பெருஞ் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. அப்பர் சுவாமிகள் அதன் சிறப்பை 'முத்து விதானம்' என்று தொடங்கும் திருப்பதிகத்தினால் ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக் கூறியருளி உள்ளார்கள்.

##Caption## பங்குனி உத்திரத் திருவிழா மாசிமாதத்தில் நடைபெறும் ஹஸ்த நட்சத்திரத்தன்று கொடியேறி, பங்குனி உத்திரத்தில் தீர்த்தம் நடைபெறும் திருவிழா இதுவாகும். இவ்விழா நினைவுக்கு வந்துவிடவே, திருவொற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தனது சூள்மொழியை மறந்து, திருவாரூர்க்குப் புறப்பட்டார் என்கிறது பெரியபுராணம். சிவனடியார்க்கு அத்துணைச் சிறப்புடைய விழா இது.

பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருப்பெயர்கள் வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், திருமூலட்டான நாதர். இறைவியாரின் திருப்பெயர் அல்லியம்பூங்கோதை அம்மை. யோக நிலையில் தனிக்கோயிலில் கமலாம்பிகையாக எழுந்தருளியுள்ளார்.

இப்படிப் பல்வேறு தனிச் சிறப்புக்கள் பெற்ற சிவாலயமான இதனை அவசியம் அனைவரும் தரிசிக்க வேண்டும்.

பி.பஞ்சாபகேசன்,
மால்பரோ, மசாசூசெட்ஸ்

© TamilOnline.com