ராணியும் கொள்ளைக்காரனும்
ஆங்கில மூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

எனது தாயாரின் தாய்வழிப் பாட்டனார், பிரசாத்ராம் ஜூட்ஷி ஒரு காஷ்மீரி பண்டிட். சிப்பாய்க் கலகத்துக்குப் பின் 1860ல் பிறந்தார். இவர் ஸ்ரீநகரின் காவல்துறை தலைவராக இருந்தார். செல்வந்தரான இவர் பெரிய சொகுசு வீட்டில் வசித்தார். அதற்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் இருந்தன. விருந்தினர்க்கென்று தனித் தங்குமிடங்கள். கூட்டங்கள், விழாக்கள் நடத்தப் பல தனியான கட்டிடங்கள் இருந்தன. திருமணம் மற்றும் விழாக் காலங்களில் சமைப்பதற்குப் பெரிய சமையல்கூடம் இருந்தது. மற்றொன்று சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வர்ணம் பூசிய மேற்கூரைகளில் பலநிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. படுக்கையறைகளின் சுவர்களில் சரசமாடும் ஜோடிகளின் உருவங்கள் தீட்டப்பட்டிருந்தன. சித்திரங்களின் கீழே பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ருபையாத்திலிருந்து கவிதை வரிகள் எழுதப்பட்டிருந்தன.

ரெய்ன்வாரி நகரையும் இந்தத் தீவையும் இணைக்கும் குறுகிய சாலை வழியே குதிரை வண்டியில் சவாரி செய்து அந்தப் பெரிய வீட்டுக்குச் சென்று வந்ததை என் தாயார் நினைவில் வைத்திருக்கிறார். எனது பாட்டனார் என்றால் கொள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம். அவர்களில் ஒருவன் லயுக் என்ற பெயர் கொண்ட பிரபல கொள்ளைக்காரன். தொடர்ந்து அவனைத் துரத்திப் பிடிப்பதிலேயே இவர் கண்ணாக இருந்தார். ஆனால் ஏராளமாகச் சாப்பிட்டு, குடித்து, தன் மனைவி ராணியை ஒரு பணக்கார விதவையாக்கி விட்டு இளமையிலேயே காலமானார். கணவர் இறந்தபிறகு லயுக் அவளுக்கு பயங்கரமாகத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான். அவளைப் பழிவாங்கி அவளது நகைகளை அபகரிக்க விரும்பினான். ராணியும் புத்திசாலி, விழிப்புடன் இருந்தார். நகைகளைத் துணிப்பையில் வைத்துக் கட்டி, பையை நீண்ட கம்பளிக்குள் வைத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். இப்படி இரவில் உஷாராக இருந்தார். அவளுடைய படுக்கை அறைப் பக்கமாக அவன் போகும்போது ஜன்னல் அருகில் நின்று, "ராணி நீ விழித்துக் கொண்டிருக்கிறாயா?" என்று கூவுவான். "ஆம் நான் உன் மரணத்திற்காக துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்" என்று ராணி பதில் கூறுவார்.

##Caption## ஒரு தடவை கதவை உடைத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது, பொன் ஆபரணம் ஆகியவைகளுடன் ஜன்னல் வழியாகத் தன் குதிரை மீதேறி இரவோடு இரவாக ராணி தப்பித்துச் சென்றுவிட்டார். மற்றொரு சமயம் அவர் வீட்டில் இல்லாதபோது கும்பலுடன் புகுந்த அவனுக்கு விலைமிகுந்த பொருள்கள் கிடைக்கவில்லை. எரிச்சல் அடைந்த அவர்கள் ராணியை அவமானப்படுத்தச் சமையல் அறையில் சிறுநீர் கழித்தார்கள். சடங்குகள் செய்து அந்த இடத்தைச் சுத்தமாக்க வேண்டியதாயிற்று. லயுக் தன்னுடைய சாதுர்யத்தினால் ராணியை ஏமாற்ற முடியவில்லை. அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில் வியக்கத்தக்க தைரியம், பலம், உறுதி, சுதந்திரம் இத்தனை குணமும் கொண்ட பெண்ணாக அவர் விளங்கினார். இந்த மனவலிமை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களிடமும் காணப்படுவதற்கு நாங்கள் அவருக்குத்தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

லயுக்கின் வாழ்வுக்கும் முடிவு வந்தது. ஒருமுறை காவலர்கள் அவனைத் துரத்திச் சென்றபோது ஹரிபர்வத கோட்டையின் பெரிய வாயில் கதவிலிருந்து கீழே குதித்தான். பலதடவை இப்படிச் செய்திருக்கிறான், ஆனால் இந்தமுறை கீழே குதித்தவன் தலைகுப்புற விழுந்து அதே இடத்தில் மரணத்தைத் தழுவினான். அதன் பிறகு எஞ்சிய இரவுகளில் ராணி அமைதியாக உறங்கினார்.

ராணிக்கு நான்கு பெண்களும் ஒரே மகனும்தான். அந்தப் பெண்களில் ஒருவர்தான் என் அன்னை தேவகி. பிறகு தாரா என்று அழைக்கப்பட்டார். சகோதரிகளில் மிகவும் அழகானவரும் மூத்தவரும் அவர்தான். 1900ம் ஆண்டில், அதாவது சென்ற நூற்றாண்டின் கடைசி ஆண்டில், பிறந்தவர். அவருக்கு ஐந்து வயதானபோது எட்டு வயதான தாரா சந்த் என்பவருக்கு மணம் செய்து வைக்கப்பட்டார். அந்தக் காலத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே ஜோடிகளாக இணைப்பது வழக்கமாக இருந்தது.

(தொடரும்)

ஆங்கில மூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com