ஒன்றில் மூன்று: பருப்பு உசிலி, பருப்பு வடை, மசாலா பரோட்டா
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு அல்லது சிவப்பு லெண்டில் பருப்பு - 4 கிண்ணம்
நறுக்கிய முளைவிட்ட அவரை (bean sprout) - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
கோதுமை மாவு - 2 கிண்ணம்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
இஞ்சித் துருவல் - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

பொதுவானது
துவரம் பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து மிக்ஸியில் மிளகாய் உப்பு சேர்த்து நரநர என்று அரைத்துக் கொள்ளவும். பின்பு 2 1/2 கிண்ணம் அளவு அரைத்த மாவை இட்டலித் தட்டில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். வெந்த மாவு ஆறட்டும்.

பருப்பு உசிலி
1 1/2 கிண்ணம் வேகவைத்த மாவை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு பெருங்காயம் தாளிக்கவும். அதில் முளைவிட்ட அவரை விதையை ஒரு கிண்ணம் போட்டு சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும். வதங்கிய கறியில் உதிர்த்த பருப்புமாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பருப்பும் கறியும் நன்றாகக் கலந்த பிறகு கறிவேப்பிலையை மேலாகத் தூவி இறக்கவும். பருப்பு உசிலிதயார். இந்த உசிலி சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். தொட்டுக்கொள்ள மோர்க்குழம்பு அல்லது காரமாக வற்றல் குழம்பு வைக்கலாம்.

பருப்பு வடை
1-1/2 கிண்ணம் அரைத்த பருப்பை வெங்காயம், முளைவிட்ட அவரை, இஞ்சித் துருவல், கொத்துமல்லி, சீரகம் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். மொறுமொறு பருப்புவடை தயார்.

மசாலா பரோட்டா
மீதமுள்ள ஒரு கிண்ணம் வேகவிட்ட உதிர்த்த பருப்பில் 1/2 தேக்கரண்டி கரம் மசாலாவைச் சேர்த்து வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவைப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த கோதுமை மாவில் சிறு உருண்டைகள் செய்து கிண்ணமாகச் செய்துகொள்ளவும். அதற்குள் மசாலா சேர்த்த பருப்பு மாவை உருட்டி வைத்து மூடவும். அதைச் சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வாட்டி எடுக்கவும். மசாலா வைத்த பரோட்டா தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்றும் தேவையில்லை. தேவையானால் ராய்தா அல்லது கூட்டுடன் சாப்பிடலாம். மொத்தமாகப் பருப்பை அரைத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேவையானபோது தினுசு தினசாகச் செய்து சாப்பிடலாம்.

பிரேமா நாராயணன்,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com