சிகாகோ 'தங்கமுருகன்' கோபாலகிருஷ்ணன்
திரு. கோபாலகிருஷ்ணன் சொந்த ஊரான மதுரையிலிருந்து மேலே படிக்க 1967ல் சின்சினாடிக்கு வந்தார். 1971ல் வேதிப் பொறியியலில் (Chemical Engineering) முதுகலைப் பட்டம் பெற்ற பின் சிகாகோவுக்கு வேலை நிமித்தம் குடிபெயர்ந்தார். டேவி மக்கீ கார்ப்பரேஷனில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி 2003ல் பதவி ஒய்வு பெற்றார். தற்போது மனைவியுடன் நேபர்வில்லில் வசித்து வருகிறார். மூன்று மகன்கள் உள்ளனர். சிறுவயதில் திருத்தணிக்குப் படிவிழா காணச் சென்றபோது அங்கு கூடியிருந்த பக்தர் கூட்டமும், கலைநிகழ்ச்சிகளும் இவரை வெகுவாகக் கவர்ந்தன. பூஜை மட்டுமின்றி, ஆடிப்பாடி முருகனை அன்பர்கள் வழிபட்ட காட்சி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. தீவிர முருக பக்தராக மாறிப்போனார். சிகாகோவில் வசிக்க ஆரம்பித்த காலத்தில் முருகனை வழிபட ஒரு கோவிலும் இல்லையே என்ற குறை இவர் மனதை வாட்டியது. கோவில் பார்க்க வேண்டுமென்றால் இஸ்க்கான் கோவிலுக்குப் போக வேண்டும். அது மிகத் தொலைவில் இருந்ததோடு வழிபாட்டு முறையும் வேறாக இருந்தது. தென்னிந்தியக் கோவிலாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிய தருணத்தில் 1986ல் லெமான்ட் கோவில் திறக்கப்பட்டது மனதுக்கு ஆறுதல் தந்தது. பின்னர் அரோரா கோவிலும் வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தனது சொந்த வீட்டுக்கு முருகா இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார். லெமான்ட் கோவிலில் தங்க முருகன் விழா வந்த விதம் போன்றவற்றை அவரே சொல்லக் கேளுங்கள்....

கே: வணக்கம் திரு. கோபாலகிருஷ்ணன். முருகனுக்கு இப்படி ஒரு விழா எடுக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

##Caption## ப: வணக்கம். ஒரு சமயம் கந்த சஷ்டியன்று அரோரா கோவிலுக்கு முருகனை தரிசிக்க சென்றபோது அச்சந்நிதியில் சிறுமி ஒருத்தி அமைதியே வடிவாக அமர்ந்து கொண்டு அழகு முருகனை பற்றி கொஞ்சும் தமிழில் மிக அழகாகப் பாடிய காட்சி என்னைக் கவர்ந்தது. அங்கு கூடியிருந்தோர் எண்ணிக்கை வெகு குறைவு. என் மனதில் அப்போதே ஒரு எண்ணம் தோன்றியது. ஸ்ரீ ராமருக்காக உலகெங்கும் விழாக்களும், ஆராதனைகளும் நடப்பது போல், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் ஆராதனை விழா ஒன்று செய்தால் என்ன என்று. முருகன் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும் என்று நம்பினேன். நண்பர்களிடம் யோசனை கேட்டேன். முக்கியமாக உமா ஸ்ரீனிவாசன், ஆனந்தி ரத்னவேலு, ராம் பாலா, ரகுராமன் ஆகியோர் கொடுத்த உற்சாகத்தினாலும், மற்றும் பலரின் உதவியாலும் லெமான்ட் கோவில் அதிகாரிகளுடன் கலந்து பேசினேன். தலைவர் சம்மதித்தாலும், மற்றவர்கள் சம்மதிக்கவில்லை. கோவில் அரங்கத்தில் அனுமதி கிடைப்பது முதலில் சிரமாக இருந்தது. விடாமுயற்சியுடன், விழா நடத்த அரங்கம் தருமாறு அனுமதி கேட்டேன். நீ தனி ஒருவனாக, பண உதவியின்றி எவ்வாறு சாத்தியம் என்று கேட்டனர். எல்லாவற்றையும் முருகனே பார்த்துக்கொள்வான் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கூறினேன். ஒருவாறு மனமிளகி விழா நடத்த ஒப்புதல் கொடுத்தார்கள். எனக்குத் தெரிந்த நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து தெரிந்த இன்னும் நான்கு பேருக்குச் சொல்லுமாறு வேண்டினேன்.

கே: இது எந்த ஆண்டில்?

ப: 2001ஆம் ஆண்டு தொடங்கிய விழா இன்று ஒன்பதாவது ஆண்டில் காலடி வைக்கிறது.

கே: விழாவுக்கான செலவுகளை எப்படிச் சமாளித்தீர்கள்?

ப: முருகனுக்காக இப்படி ஓர் ஆராதனை நடப்பது மிகப்பெரிய விஷயம, இதில் பங்கு கொள்ள வாய்ப்பளியுங்கள் என்று பல முருக பக்தர்கள் முன்வந்தனர்.. விழா முடிவில் திரண்ட நிதியை பார்த்த கோவில் நிர்வாகத்தினர் கண்கள் வியப்பால் விரிந்தன. நீங்களே வருடா வருடம் இந்நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்துங்கள். நாங்கள் அரங்கத்தை இலவசமாகத் தருகிறோம் என்று கூறினர். முருகனின் அருளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. வாயடைத்துப் போனேன்.

கே: குறிப்பாக வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

ப: முதல் வருடம் ஒருவாறாக முருகனுக்கு அலங்காரம் செய்து முடித்த பின் பிரபையைச் சுற்றி அலங்கார விளக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன். சில மணித்துளிகளில் சிங்கப்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன் இங்குக் குடியேறிய ஒருவர் வந்து சட்டத்துடன் பொருந்திய சரவிளக்குகளை என்னிடம் கொடுத்து இதை முருகனுக்கு அலங்காரம் செய்ய உபயோகித்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்!

கே: பிறகு?

ப: 'லிட்டில் முருகா ஷோ' எல்லோரையும் கவர்ந்தது. மேலும் பால்காவடியும் பிரபலமானது. இப்போது ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் காவடியாட்டத்தில் பங்கு பெறுகின்றனர். இந்த விழா பக்தி உணர்வோடு கலை உணர்வையும் உயர்த்திக் குடும்பத்தோடு பங்கு பெறும் ஒரு மங்கள விழாவாக மாறியது மகிழ்ச்சி அளிக்கிறது. முருகன் மகிமையை உலகும் முழுவதும் பரப்ப வேண்டும் என் விருப்பம்.

டிசம்பர் 12, 2009 அன்று லெமான்ட் கோவிலில் தங்கமுருகன் விழா நடைபெற உள்ளது. அனைவரும் திரளாக வந்து ஆராதித்து அவனருளைப் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். தென்றலின் ரசிகர்களில் நானும் ஒருவன். மென்மேலும் வளர்ந்து சிறப்பாய்ச் செயல்பட எல்ல்லாம் வல்ல முருகன் அருள் புரியட்டும். நன்றி.

சந்திப்பு: மீனா சுபி, சிகாகோ

© TamilOnline.com