நடன அரங்கேற்றம்
ஆகஸ்டு 30, 2009 அன்று டாலஸ் நகரத்தின் கிரான்வில் நிகழ்கலை அரங்க மையத்தில் ஸ்வேதா சங்கர் மற்றும் நிஷா ஐயர் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

பாபநாசம் சிவனின் 'ஸ்ரீ கணேச சரணம்' புஷ்பாஞ்சலியோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது. மலரும் அரும்பாய் 'அலாரிப்பு' அரங்கத்தில் பரிமளித்தது. தொடர்ந்து, குரு மதுஸ்ரீ அவர்களின் நட்டுவாங்கத்தில் ஜதிகளும் ஸ்வரங்களும் மாலையாய் மாற அதை நிஷா தனது அபிநயத்திலும் அசைவிலும் நாட்டியக் கடவுளுக்குச் சூட்டினார். பின்னர், யானையைக் கண்டு வள்ளி நடுங்கியதையும், ஆறுமுகனைக் கண்டு மகிழ்ந்த காதலையும் ஸ்வேதா தனது முகபாவத்தில் பிரகாசித்தார். அடுத்து ஆடிய பாவயாமி வர்ணத்தில் இராமயண இதிகாசத்தைத் திருமதி. நீலா பாட, இருவரும் மிக அழகாக ஆடியதில் அரங்கமே மயங்கியது. அபிநயத்தில் கைகேயியும் கூனியும் சம்பாஷணை செய்ய, ஜடாயுவாகப் பறந்து, அனுமனாகத் தாவி, இறுதியில் இராமனும் சீதையுமாக இருவரும் நின்றபோது அயோத்தி கண்முன் வந்தது. அடுத்து வந்த பாரதி பாடலுக்கு மாதா பராசக்தியை தாமரையில் தவழும் அன்பு முகமாகவும், புலியில் அமரும் ஆவேச முகமாகவும் நிஷா சக்தியின் ஸ்வரூபத்தை நம்முன் கொண்டு வந்தார்.

அலைபாயும் ஆண்டாளின் காதல் மனநிலையை மரகதப் பச்சை உடையில், மாலையிட்ட மங்கையாய் ஸ்வேதா நடனமாடினார். இறுதியில் மதுவந்தி ராகத் தில்லானாவில் குதித்தாடிய குமரியரின் குஞ்சலங்கள் சலங்கைகளுடன் பேசிய அழகே தனி. அடுத்ததாக, எம்.எஸ். பாடி பிரசித்திபெற்ற 'டோலாயம்' பாடலில் தசாவதார நாரயணனை ஊஞ்சலாட்டி, அலங்கரித்து, வர்ணித்து, கும்மியடித்து, அரங்கத்தினரின் கைதட்டலுடன் மங்களம் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

இவர்களுக்கு ஆறு வயதுமுதல் நடனம் பயிற்றுவித்த குரு மதுஸ்ரீயின் நடன வடிவமைப்பு, புதுமையும் பாரம்பரியும் கலந்து அருமையாக அமைந்திருந்தது. இந்தியாவிலிருந்து வந்திருந்து பாடிய திருமதி. நீலாவின் குரல் இனிமையாக, கம்பீரமாக இருந்தது. அவரது இசைக்குழுவினர் கோயில் மணி ஓசையையும், குழலிசையையும் மிருதங்கத் தாளத்தையும் மிகவும் பிரமாதமாக வழங்கினர். மொத்தத்தில் நல்ல நிகழ்ச்சி.

© TamilOnline.com