'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம்
அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் தொடரைப் படித்த யாரும் 'வந்தியத் தேவனும் ஆழ்வார்க்கடியானும் போடும் சுவையான சண்டைகளை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்?', 'பொன்னியின் செல்வர் நேரில் வந்தால், எப்படி உணர்வோம்?', 'குந்தவைப் பிராட்டி நம்மிடம் பேசினால் வானதியைப் போன்று அவரிடம் நாமும் அன்பு கொள்வோமா அல்லது நந்தினியைப் போல் பொறாமைப் படுவோமா?', 'நந்தினியை நேரில் சந்தித்தால் அதே ஈர்ப்பும் பச்சாதாபமும் உண்டாகுமா, அல்லது சினிமாவில் வரும் அழகிய வில்லிகள் உண்டாக்கும் அருவருப்பே மிஞ்சுமா?' என்று பற்பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாடக மேடைக்கே ஒரு சவால். நிறையப் பாத்திரங்கள், பலவாகப் பின்னிவரும் கதைகளும் உபகதைகளும், சரித்திரகாலப் பின்னணியைக் காட்சிப்படுத்துவது எல்லாவற்றும் மேலே மூன்று மணி நேரத்துக்குள் மேடையில் முழுக்கதையைச் சொல்வது என்று பல சவால்கள்.

'சக்தி' போன்ற நாடகங்களை மேடையேற்றிப் புகழ்பெற்ற பாகீரதி சேஷப்பன் இந்தச் சவால்களை ஏற்று பொன்னியின் செல்வனை மேடை வடிவமைத்து, இயக்கவும் செய்திருக்கிறார். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் இதை மேடையேற்றுகிறது. ஸ்ரீதரன் மைனர் இசையத்திருப்பதோடு இயக்கத்திலும் உதவியிருக்கிறார்.

தமிழர் வரலாற்றுச் சிறப்பைப் பாடப் புத்தகம் போலல்லாமல் விறுவிறுப்பான மர்மக் கதையைப் போல, நகைச்சுவையோடு கலந்து எழுதி எண்ணற்ற உள்ளங்களைக் கவர்ந்த பெருமை கல்கி அவர்களையே சாரும். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தலைமுறையினர் இவ்வளவு நீண்ட புதினத்தைப் படித்தறிய இயலாதவர்களாக இருக்கலாம், ஆனால் இப்போது சுவையாக மேடையேறும் போது கண்டு ரசிக்க முடியுமே! அதுமட்டுமல்ல, இந்திய வரலாற்றுப் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்கேற்க வைப்பதும் இந்த நாடகத்தால் நிறைவேறும்.

'பொன்னியின் செல்வன்' என்கிற ராஜராஜ சோழர், கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே சமுதாய நலம் கருதும் அரசியல் சிந்தனைகளை வளர்த்திருக்கிறார். நாளை அரசராகப் போகின்றவரும், நாட்டின் செல்வப் புதல்வனுமாகிய அவர், ஓர் ஏழையும், அநாதையுமாகிய வந்தியத்தேவனைக் காப்பாற்ற, புயலென்றும் கொந்தளிக்கும் கடலென்றும் பாராமல், தன் உயிரைப் பணயம் வைத்துக் கப்பலிலிருந்து குதிக்கிறார். வெள்ளத்தில் மாட்டித் துன்புறும் மக்களுக்குத் தன் கையிலிருக்கும் அத்தனையையும் அள்ளி வழங்கி உதவ முன்வருகிறார். அவரைப் பற்றிய ஒவ்வொரு செய்தியுமே ஒவ்வொரு தமிழனும் அறிந்து பெருமைப்படக் கூடிய வரலாறுதான். அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், இலங்கைச் சிம்மாசனத்தையும், சோழ நாட்டுச் சிம்மாசனத்தையும் முழுமனதோடு மறுதலித்துத் தியாகம் செய்திருக்கிறார்.

இசை, நாட்டியம் போன்றவை இந்த நாடகத்திலும் இடம்பெறுகின்றன. பொன்னியில் செல்வனில் கல்கி அவர்கள் கொடுத்துள்ள பாடல்கள் மற்றும் நடனங்களையே இதில் பயன்படுத்தி உள்ளனர். இலங்கையிலும் இந்தியாவிலுமாக இந்தக் கதை நடக்கிறது. அது தவிர, காஞ்சீபுரம், பழையாறை, தஞ்சாவூர், கோடிக்கரை, வீரநாராயணபுரம், கடம்பூர் போன்ற பல பண்டைத் தமிழ் நகரங்களையும் நாம் இதில் பார்க்கிறோம். மின்னல், இடி, மழை, வெள்ளம், சதிகாரர்களின் கூட்டங்கள், கொலை, விசாரணை, மர்மக் காட்சிகள், பேயைப் போல் நடித்துச் சுந்தரசோழரைத் துன்புறுத்தும் அழகிய நந்தினி, சுழற்காற்றில் தவிக்கும் கப்பல் என்று பலவித மேடையேற்றச் சவாலான அம்சங்கள் நிறைந்த இந்த நாடகத்தை, எப்படிச் சமாளித்து அரங்கேற்றுகிறார்கள் என்பது பார்க்கத் திகட்டாதது.

சிறந்த அரங்க வேலைப்பாடுகள், ஒளி ஒலி ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அரங்க சாதனங்கள் இதுவரை மேடையில் கண்டிராத காட்சிகள் என்று மூளையைக் கசக்கிப் பிழிந்து இதைத் தயார் செய்திருக்கின்றனர். இட்ஸ்டிஃப் ஸ்ரீ, ராகாலயா ராஜாமணி, அசோக் சுப்ரமணியம், சுகிசிவா, TS ராம், பெரிய பழுவேட்டரையராகவே மாறிவரும் ராம்கி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வேணு சுப்பிரமணியம் தயாரிப்பில், ஸ்ரீதரன் மைனர் இசையில், பாகீரதி சேஷப்பன் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மேடையேறத் தயாராகிவிட்டது.

ஒரு காப்பியம் என்று சொல்லத்தக்க வகையில் சுமார் 45 பாத்திரங்களும், 5 பாகங்களும் 50க்கு மேற்பட்ட காட்சிகளும் கொண்டு, 3 மணி நேரத்தில் நடக்க இருக்கும் பொன்னியின் செல்வன் நாடகம் நவம்பர் 08, 2009 அன்று சான் ரமோனின் DVHS தியேட்டரில் மாலை 4 மணிக்கு அரங்கேற உள்ளது. அப்போது நீங்கள் அங்கே இருக்க வேண்டும். தவற விடாதீர்கள்.

மேலும் விவரங்களுக்கு:
இணையதளம்: www.bayareatamilmanram.org
மின்னஞ்சல்: president@bayareatamilmanram.org

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்

© TamilOnline.com