கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்!
மயிலாப்பூரில் ஒரு சிறிய வீடு. அங்கேதான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை முதலில் சந்தித்தேன். 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். என்னை முன்னே பின்னே தெரியாவிட்டாலும் அன்பாகப் பேசுகிறார். அவருக்கிருந்த பிரபலத்துக்குச் சரிவிகிதத்தில் பந்தாவைக் காணோம். ஒரு விழாவுக்கு அழைக்கச் சென்றிருந்தேன். வர ஒப்புக்கொண்டபின் சொல்கிறார், "விழாவுக்கு ஒருநாள் முன்னால போன் பண்ணி நினைவுபடுத்துங்க. நான் பஸ்சில ஏறி வந்துர்றேன்". அதிர்ச்சி எனக்கு. எல்லாப் பேச்சாளர்களுமே பொதுவாக "கார் அனுப்பிடுங்க" என்றுதான் முடிப்பார்கள். "எதுவும் சன்மானம் வாங்கறதில்லை. நான் அரசு ஊழியன்" என்கிறார். அது அடுத்த அதிர்ச்சி. பிறகு நான் வற்புறுத்தி ஒரு நண்பரை அனுப்பிக் காரில் அழைத்துவரச் செய்தேன்.

இதுதான் தென்கச்சியார்.

அவர் தென்றலுக்கு (மே, 2009 இதழ்) கொடுத்த பேட்டியில் "நான் வந்து திருக்குறளை உங்ககிட்ட கொடுக்குறேன். திருக்குறளைக் கொடுக்குறது என் வேலை. உடனே என்னையே நீங்க திருவள்ளுவரா நினைச்சிரக் கூடாது. ஆனா ஜனங்க அப்படி நினைச்சிடுறாங்க" என்று கூறியிருந்தார். அவர் அப்படிக் கூறுவதும் அடக்கத்தின் காரணமாகத்தான். தன்னைப் பெரிதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்று அவர் கவனமாக இருந்த காரணத்தினாலேயே அவர் பெரிதாக நினைக்கப்பட்டார். 'இன்று ஒரு தகவல்' பல தொகுப்புகளாக வெளிவந்து தமிழ்நாட்டில் பெருமளவில் விற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிலிருந்து வரும் ராயல்டி தொகையை அவர் அப்படியே தர்மகாரியங்களுக்குச் செலவிட்டார் என்பது பலர் அறியாதது. அவரை வள்ளுவராக நினைக்க வேண்டாம்; ஆனால் வள்ளுவர் வழி நின்றவராக நினைப்பதில் தவறில்லையே.

ஒரு சராசரி அரசு ஊழியனைப் போல பணம் என்றால் வாயைப் பிளக்கவில்லை என்பது மட்டுமல்ல, அரசு ஊழியர்களின் அசட்டைப் போக்கை அவர் கேலி செய்யத் தயங்கவில்லை. மேலே கூறிய விழாவில் அவர் சொன்ன கதையைப் பாருங்கள்:

"தெருவுல எங்க வீட்டு வாசல்ல மூணு பேரு வேல செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நான் பாத்துக்கிட்டிருந்தேன். ஒருத்தன் ரொம்ப சிரத்தையா நாலுக்கு நாலு ஒரு பள்ளம் தோண்டினான். அவன் கஷ்டப்பட்டு தோண்டி முடிச்சதும் மற்றொருத்தன் அதை முழுசா மூடினான். மூணாவதா இருந்தவன் அதுல ஒரு பக்கட் தண்ணியை ஊத்தினான். மூணு பேரும் அங்கேருந்து நகந்து கொஞ்ச தூரம் போய் இதே மாதிரி ஒருத்தன் பள்ளம் தோண்டுறது, இன்னொருத்தன் மூடுறது, மூணாமவன் தண்ணி ஊத்தறதுன்னு நடந்துச்சு. இப்படியே பண்ணிக்கிட்டிருந்தாங்க."

"எனக்கு ஆச்சரியமாயிட்டுது. நான் அவங்ககிட்டப் போயி 'என்னப்பா, என்ன பண்றீங்க? ஒண்ணும் புரியலையே'ன்னு கேட்டேன். அதுக்கு, 'சார் நாங்க நாலு பேரு வந்திருக்கணும். குழியைத் தோண்டினதும் ஒருத்தர் விதை போடணும். அவரு இன்னிக்கு லீவு சார். அதுக்காக நாங்க எங்க வேலயைச் செய்யாம இருக்க முடியுமா'ன்னு கேட்டான் அவன்."

இதுதான் தென்கச்சியார்.

##Caption## அவரை நங்கநல்லூர் ரமண சத்சங்கத்தில் பேசுவதற்காக அழைக்கச் சென்றிருந்தேன். இப்போது மடிப்பாக்கத்தில் சொந்த வீட்டில் சந்திப்பு. முதல் சந்திப்பு நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு என்று நினைக்கிறேன். இடையில் சந்திக்கவில்லை. ஆனாலும் அவருக்கு என்னை நினைவிருந்தது. ரமண விழாவில் ஒருமணி நேரம் பேசினார். ரமணரின் 'நான் யார்' வேதாந்த தத்துவத்தை அவ்வளவு சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முடியும் என்று யாருக்கும் தெரியாது. அங்கே வந்திருந்த சுமார் 300 பேரும் ரமண பக்தியில், வேதாந்தத்தில் தோய்ந்தவர்கள். அவர்களிடம் புதிதாக எதுவும் கூறிவிட முடியாது. அப்படிப்பட்டவர்களிடமும் உயர்ந்த தத்துவத்தை ரசிக்கும்படிப் பேசியவர் தென்கச்சியார்.

இதுதான் தென்கச்சியார்.

அவரை அழைத்துச் சென்ற வாடகைக் காரின் ஓட்டுனர் என்னிடம் கேட்டார், "சார், இவர் தென்கச்சி சாமிநாதன் சார்தானே?" "ஆமாம் தம்பி." "குரலிலிருந்தே கண்டுபிடிச்சுட்டேன் சார். நான் தினமும் கேப்பேன்" என்றார். திரைப்படத் தயாரிப்பாளரிலிருந்து வேதாந்திகள் வரை, ஹ்யூமர் கிளப் உறுப்பினரிலிருந்து டூரிஸ்ட் கார் டிரைவர் வரை - எல்லாத் தர மக்களும் அவருக்கு ரசிகர்கள்தாம்.

இதுதான் தென்கச்சியார்.

இந்த இதழில் வெளியாகியிருக்கும் காந்திஜியின் தனிச்செயலர் கல்யாணம் அவர்களை நேர்காணல் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை கொடுத்தவர் தென்கச்சியார்தான். அவருடைய பேட்டி வெளிவந்திருந்த தென்றல் 2009 மே மாத இதழை இணை ஆசிரியர் அரவிந்த் சுவாமிநாதனும் நானும் நேரில் போய் அவரிடம் கொடுத்தோம். அதை வாங்கிப் பார்த்துவிட்டு அவர் கூறினார்: "தென்றலைப் படிச்சுட்டு என் பேட்டி நல்லா இருக்குன்னு அமெரிக்காவிலே இருந்து ரெண்டு மூணு போன் வந்திச்சு. அது எனக்குப் புது அனுபவம். இங்கே பேட்டின்னு எதாவது பத்திரிக்கையில கேட்டுட்டுப் போவாங்க. அப்பறம் அது வெளிவந்திருக்கறதா யாராவது என்கிட்ட சொல்லுவாங்க. நானே போய்க் கடையில அந்தப் புஸ்தகத்தை வாங்கிட்டு வந்து படிச்சுக்குவேன். ஆனா, பேட்டி வந்த தென்றலை நீஙகளே நேர்ல கொண்டு வந்து கொடுக்கிறீங்க. இதுவும் எனக்குப் புது அனுபவந்தான்" என்று கூறினார். அவர் நெகிழ்ந்திருக்கலாம். ஆனால் அது அவர் முகத்திலோ குரலிலோ தெரியவில்லை. தனது நகைச்சுவைக்கும் அவர் சிரித்துக் கொண்டதில்லை.

இதுதான் தென்கச்சியார்.

அதே சந்திப்பின் போது, "நான் அழுததே இல்லை. எங்கம்மா இறந்தப்போ கூட நான் கண்ணீர் விட்டதில்லை. அது என் உடலமைப்புன்னு மருத்துவர்கள் சொல்றாங்க" என்றும் கூறினார். இந்த அடைப்பின் காரணமாகவே அவருக்குக் கண்ணில் அழுத்தம் உண்டாகி க்ளாகோமா நோயால் அவஸ்தைப் பட்டார். அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனாலும் புத்தகம் படிப்பதில் சிரமம் இருந்தது. "யாராவது ரமணரைப் பற்றிப் பேசக் கூப்பிட்டால் நான் உங்கள் 'ரமண சரிதம்'தான் படித்துவிட்டுப் போவேன் என்று அவர் சொல்லக் கேட்டதில் எனக்குப் பெரிய சந்தோஷம். புக்கர் பரிசு கிடைத்தது போல.

இது நடந்து சில மாதங்களிலேயே அவருக்காக இவ்வளவு பேர் கண்ணீர் விடுவார்கள் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். எல்லோருமே கண்ணீர் வராத உடலமைப்பு கொண்டவர்கள் இல்லையே!

மதுரபாரதி

© TamilOnline.com