அகல் விசும்புளார் கோமான் - 2
"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை குறளுக்குச் சற்றுப் பின்னர் வருவோம். அதற்கு முன்னால், 'ஐந்தவித்தான் ஆற்றலுக்கு' மணக்குடவர் உரையைக் கொஞ்சம் படியும் ஆத்மா. குறிப்பாக, உரையை அடுத்து அவர் சொல்லும் குறிப்பை" என்று தொடர்ந்தேன். "இந்திரன் என்று சொன்னது இவ்வுலகின்கண் மிகத்தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதாலான். இது, தேவரினும் வலியன் என்றது" என்று மணக்குடவருடைய விளக்கத்தை வாசித்தார் ஆத்மா. "புரியுதா?"என்று கேட்டேன். உதட்டைப் பிதுக்கினார். "அடல்வேண்டும் பத்தி என்னவோ சொல்ல வந்தீரு. இப்ப திசை திருப்பறீரே" என்று முணுமுணுத்தார். "அதுக்குதான் வரேன். கொஞ்சம் பொறுமையாக இரும்" என்று சமாதானப்படுத்திவிட்டு, "ஆத்மா, நாம் போனமுறை பேசிக்கொண்டிருந்த 'இந்திர பதவி என்பது கை மாறக்கூடியது. இருக்கின்ற இந்திரனைக் காட்டிலும் பெரிய ஐந்தவித்தான் கிடைத்துவிட்டால், அந்த இடத்துக்கு அந்தப் புதியவர் வந்துவிடுவார்' என்ற கருத்து மணக்குடவரால் அடிக்கோடு இட்டுக் காட்டப்படுகிறதல்லவா?". "அப்படித்தான் தோணுது. ஆனா இதை எதுக்கு இப்ப இழுக்கிறீர் என்பதுதான் விளங்கவில்லை" என்றார் ஆத்மா.

"யாருக்கெல்லாம் இந்திர பதவி கிடைத்திருக்கிறது, அப்படிக் கிடைத்த பதவியில் எவ்வளவு காலம் அவர்கள் அமர்ந்திருந்தார்கள், பிறகு என்ன காரணத்துக்காக அந்தப் பதவியிலிருந்து விழுந்தார்கள் என்பதைப் பார்த்தால், இந்த 'அகல் விசும்புளார் கோமான்' என்ற பதவி எப்படிப்பட்டது என்றும் புரியுமல்லவா?". "சரி. நீர் சொல்லாமல் ஓயமாட்டீர். சொல்லும். கேட்கத்தானே உட்கார்ந்திருக்கிறேன்" என்று ராஜிக்கு வந்தார் ஆத்மா. "ஆத்மா, சிறிய வயதில் வைகுண்ட ஏகாதசி இரவுகளில் பரமபத சோபான படம்' ஆடியிருக்கிறோமே, ஏணிகளாலும் பாம்புகளாலும் ஆன ஒரு விளையாட்டு, நினைவிருக்கிறதா?". தலையசைத்தார். "அதில் உள்ளதற்குள்ளேயே மிகப்பெரிய பாம்பு ஒன்று உண்டே, நூறு கட்டங்களைத் தாண்டியபின், முதல் கட்டத்துக்குச் சறுக்கிவிட்டு விடுமே, அதன் பெயர் நினைவிருக்கிறதா?". "நகுஷன்" என்றார் ஆத்மா. "யார் அந்த நகுஷன்?" ஆத்மாவின் நினைவுத் தடங்களில் அந்தப் பெயர் பரமபத சோபான படத்தைத் தாண்டி சிக்கவில்லை. உதவிக்கு வந்தேன். "மஹாபாரதத்தில் யயாதி இருந்தான் அல்லவா?" என்றதும், "ஆமாம் கௌரவ-பாண்டவர்களின் வம்சம் அவனிடமிருந்துதான் தொடங்குகிறது. அவர்கள் மட்டுமில்லாமல், கண்ணன் அவதரித்த யாதவ வம்சமும் யயாதியிடமிருந்து கிளைத்ததுதான்" என்று உற்சாகமானார் ஆத்மா. "யயாதியுடைய தந்தை நகுஷன்" என்றேன்.

##Caption## "ஓஓஓ அவனா... தெரியும் தெரியும்... இந்திர பதவியை அடைந்த பிறகு இந்திராணியைப் பார்ப்பதற்காகப் போகும்போது, முனிவர்கள் சுமந்த பல்லக்கில் அமர்ந்தபடிச் சென்று, பல்லக்கு வேகமாகப் போகவில்லை என்று அவசரப்பட்டு, அகத்தியர் தலையில் எட்டி உதைத்து 'ஸர்ப்ப ஸர்ப்ப' (வேகம், வேகம்) என்று சொல்லி, அகத்தியர் சாபத்தால் பாம்பாக மாறி இந்திர லோகத்திலிருந்து விழுந்தானே அவன்தானே?"--ஆத்மாவின் முகத்தில் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி. "அவனேதான். அவன் மட்டுமில்லை. யயாதியும் இந்திரலோகத்துக்குப் போனவன்தான். அங்கே போனதும் யயாதியைப் பார்த்து இந்திரன் "நீங்கள் அரசாட்சியை எல்லாம் முடித்துக்கொண்டு காட்டுக்குச் சென்று கடுந்தவம் இயற்றினீர்கள் அல்லவா, அப்படி நீங்கள் தவம் இயற்றியதால் பல ஆற்றல்களை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா? யாருக்குச் சமமான ஆற்றலை நீங்கள் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்கள்"என்று கேட்டான்.

யயாதியால் இந்தக் கேள்வியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "தவ ஆற்றலில் எனக்கு இணையான ஒருவனை மானிடர்களுக்குள்ளேயோ, தேவர்களுக்குள்ளேயோ அல்லது முனிவர்களுக்குள்ளேயோ ஒருவரைக்கூட என்னால் காண முடியவில்லை" என்ற விடையைக் கேட்ட மாத்திரத்திலேயே, "ஐயா, இவ்வளவு தவம் செய்திருந்தும், இவ்வளவு புலனடக்கம் பயின்றிருந்தும் உங்களிடம் ஒரு முக்கியமான பயிற்சி ஏற்படவில்லை. இந்த விடையைச் சொன்னதுமே நீங்கள் 'உங்களைக் காட்டிலும் உயர்வானவர்களையும், உங்களுக்குச் சமமானவர்களையும், ஏன், உங்களுக்குக் கீழானவர்களையும் கூட--அவர்களுடைய உண்மையான தகுதிகளைச் சரிவர அறிந்துகொள்ளாமலேயே--ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவமதித்துவிட்டீர்கள். நீங்கள் முயன்று பெற்ற தவ ஆற்றலெல்லாம் இந்த ஒரு பதிலாலேயே தீர்ந்துபோய்விட்டது. எனவே, நீர் இந்திரலோகத்திலிருந்து விழுந்தாக வேண்டியதுதான்" என்று சொல்ல, யயாதி இந்திர உலகிலிருந்து அந்தக் கணமே கீழே விழுந்தான் என்று மஹாபாரதம் ஸம்பவ பர்வத்தில் (அத்தியாயம், வடமொழி 83) விவரிக்கிறதே, நாம் சேர்ந்துதானே படித்தோம், நினைவில்லையா"என்றேன். ஆத்மா மௌனமாகத் தலையை அசைத்தார்.

"இந்திர பதவி போகட்டும். ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து பெற்ற நலனை எல்லாம் ஒரே ஒரு கணம் மோக வசப்பட்ட காரணத்தால் ஒருமுறையும், கோப வசப்பட்ட காரணத்தால் மறுமுறையும், திரிசங்கு விஷயத்தில் இன்னொரு முறையுமாக விஸ்வாமித்திரர் இழந்ததாகப் படித்திருக்கிறோமே, ஒவ்வொரு முறையும் இழந்த வலிமையைப் பெற மீண்டும் ஆயிர வருஷ காலம் தவம் செய்கிறார் அல்லவா விஸ்வாமித்திரர்?" சலனமில்லாமல் என்னைப் பார்த்தார் ஆத்மா. "சரி. ஒப்புக் கொள்கிறேன். இந்தக் கதையை எல்லாம் இப்போது எதற்காகக் கொண்டுவந்து கொட்டுகிறீர்? நான் கேட்டது ஒரு திருக்குறளைப் பற்றி. இவற்றையெல்லாம் சுத்த என் காதில் இடமில்லை. நீர் எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கிறீர் என்பதும் எனக்குப் புரியவில்லை" என்று கடுகடுத்தார் ஆத்மா.

தொடரும்...

© TamilOnline.com