பொறிபறக்கும் பிரசாரக் களம்
ம.தி.மு.க. தலைவர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் எந்திரத் துப்பாக்கி போலச் சுட்டுத் தள்ளுகிறார். காளிமுத்து பிரசாரத் திற்கு வராத குறையை வைகோவின் பேச்சு போக்கிவிட்டதாகவே அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர்.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் அ.தி.மு.க அரசின் சாதனைகள், நலத் திட்டங்கள் பற்றியே அதிகம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தியைத் தாக்கிப் பேசிய முதல்வர் இம்முறை தனிநபர்த் தாக்குதல் தொடுக் காமல் நேர்மறையான கருத்துகளையே எடுத்து முன் வைக்கிறார்.

இவருக்கு எதிர்மாறாக அமைந்துள்ளது வைகோவின் பிரசாரம். தென்தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ போகும் இடமெல்லாம் தி.மு.க.வின் “குடும்ப அரசியலைத்” தாக்குவதோடு, சன் தொலைக் காட்சி மற்றும் தயாநிதி மாறனைக் கடுமையாக விமரிசித்து வருகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கள் மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடுவதாகவும், வெள்ளநிவாரணம் மற்றும் சுனாமி நிவாரணங்களை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்குவதைத் தடைசெய்து வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்களை அள்ளி வீசி வருகிறார்.

வைகோவின் பிரசாரம் அ.தி.மு.க. தலைமையை மகிழ்ச்சி அடைய வைத் திருக்கிறது. ஜெயலலிதாவே வைகோவின் பிரசாரத்தை பாராட்டியுள்ளார். வைகோ வின் பேச்சைக் கேட்கக் கட்சி சார் பில்லாதவர்களும் ஆர்வத்துடன் வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு புறம் இரண்டு திராவிடக் கட்சிகளையுமே விமர்சிக்கும் நடிகர் விஜயகாந்தின் தேர்தல் பிரசாரம் கட்சி சார்பில்லாத மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com