எதிரொலி விசுவநாதன்
'கவிமாமணி', 'பாரதி இலக்கியச் செல்வர்' 'இலக்கியச் சிரோன்மணி' 'பாரதி பணிச் செல்வர்', 'கம்பன் அடிப்பொடி' உட்பட எண்ணற்ற விருதுகள் பெற்றிருக்கும் எதிரொலி விசுவநாதன், தமிழில் சத்தமில்லாமல் பல சாதனைகளைச் செய்து வரும் எழுத்தாளர் ஆவார். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் விசுவநாதன் பாரதி புகழ் பாடும் கவிஞர்களுள் ஒருவர். பாரதியையும், தமிழையும் இரு கண்களெனப் போற்றி வாழும் இவரைப் பாராட்டி பாரதி இளைஞர் சங்கம், பாரதி கலை இலக்கியக் கழகம், ஸ்ரீராம் நிறுவனம், அன்பு பாலம் அமைப்பு, சென்னை கம்பன் கழகம், வானவில் பண்பாட்டு மையம், தாய் மண் அறக்கட்டளை போன்றவை விருதுகள் வழங்கிக் கௌரவித்துள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் நவம்பர் 22, 1941 அன்று பிறந்த விசுவநாதன், இளமையிலே கவி இயற்றும் ஆற்றலுடன் திகழ்ந்தார். பள்ளிப் பருவத்திலேயே பல கவிதைகளை எழுதினார். திருலோக சீதாராமிடமிருந்து 'பால பாரதி' என்ற பாராட்டைப் பெற்றார். பின் அவரது இலக்கிய ஆர்வம் கதை, கட்டுரை, கவியரங்கம் என விரிவடையத் தொடங்கியது. பாரதியின் அன்பிற்குகந்தவராக விளங்கிய பரலி சு. நெல்லையப்பருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது மாணாக்கரானார். அவ்வழியே பல்வேறு தமிழறிஞர்களுடன் அறிமுகம் கிடைத்தது. விசுவனாதனின் தமிழார்வம் தழைத்தோங்கியது. பரலி சு. நெல்லையப்பரின் மேற்பார்வையில் தமிழ்நாட்டின் சிறந்த கவிஞர் எழுபது பேரின் கவிதைகளைத் தொகுத்து 'எதிரொலிகள்' என்னும் கவிதை நூலை வெளியிட்டார். உவமைக்கவிஞர் சுரதா அதனைப் பாராட்டி 'எதிரொலி' விசுவநாதன் என்ற பட்டப்பெயரைச் சூட்டினார். அது, இவருக்கு நீடித்த புகழைத் தேடித் தந்ததுடன், தொடர்ந்து பல நூல்கள் எழுதும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தது.

##Caption## இவர் எழுதிய 'பாரதிக்கு விடுதலை', பரலி சு. நெல்லையப்பப் பிள்ளையைப் பற்றிய 'பாரதியின் தம்பி' போன்ற நூல்கள் முக்கியமானவை. 'பரம்பரை கண்ட பாவேந்தர்' என்ற நூலில் 'பாரதிதாசன் பரம்பரை' பற்றி இவர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை மிக முக்கியமானது. அதை ஆதாரமாக வைத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவரது பல நூல்களை ஆதாரமாக வைத்து பல கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பாரதிப் பித்தரான இவர், தன் பெண்ணிற்கு 'பாரதி' என்ற பெயரைச் சூட்டியிருப்பதுடன், புதுமையான முறையில் பாரதியைப் பற்றி பல பாடல்களை இயற்றியிருக்கிறார்.

ஆத்திச் சூடியை மாற்றிய ஆண்ஔவை!
அரிசனம் போற்றிய அந்தணன்! - போரில்
தோற்ற நாட்டுக்கும் வாழ்த்துப்பா சொன்னவன்
சோவியத் வெற்றியைப் பாடியவன்!


போன்ற இவரது பாடல் வரிகள் சான்றோர் பலரால் பாராட்டப்பெற்றவையாகும்.

வெ.சாமிநாத சர்மா, நாரண. துரைக்கண்ணன், பரலி.சு.நெல்லையப்பர், சுரதா போன்ற சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியிருக்கும் விசுவநாதன், வள்ளலார், காந்தியடிகள், பாரதியார், வ.வே.சு. அய்யர், அம்பேத்கர், திரு.வி.க., வலம்புரி ஜான், சிவாஜி கணேசன் எனப் பல்துறைச் சான்றோர்களின் சாதனைகளையும் எழுத்துச் சித்திரமாக்கியிருக்கிறார். 'அவதார் மெஹர் பாபா' பற்றித் தமிழில் முதலில் நூல் படைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி இவர் எழுதிய நூல் மிக முக்கியமான ஒன்று. இவர் இயற்றிய எழுபதுக்கும் மேற்பட்ட மெல்லிசைப் பாடல்களை கே.ஜே. ஏசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, ஏ.எம். ராஜா, L.R. ஈஸ்வரி, ஜிக்கி போன்றோரின் குரலில் அகில இந்திய வானொலி நிலையம் ஒலிபரப்பி உள்ளது.

இவரது தமிழ்ச்சேவையை தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கனார், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், கி.வா. ஜகந்நாதன், ம.பொ.சி., டி.கே.சண்முகம், கலைஞர் மு.கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன், கிருபானந்த வாரியார், க.நா.சு. போன்ற பலஅறிஞர் பெருமக்கள் பாராட்டியிருக்கின்றனர். “பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆபாச அரிப்பூட்டும் நூல்கள் எதையும் நான் எழுதவும் இல்லை, எழுதவும் மாட்டேன்” என்று கூறும் விஸ்வநாதன், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் மாத இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியதையும், அவரால் 'காந்த எழுத்தன்' என்று பாராட்டப் பெற்றதையும் பெருமையாகக் கருதுகிறார்.

மணம் முடித்த நான்கே ஆண்டுகளில் தம் மனைவியை இழந்த போதிலும், குழந்தைகள் நலனுக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் தூய தவவாழ்வை மேற்கொண்ட விசுவநாதன், சென்னை பேசின்பிரிட்ஜ் அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது 'நான் கண்ட நல்லவர்கள்' என்னும் தலைப்பில் நூல் ஒன்றினை எழுதிக் கொண்டிருக்கிறார். சன்மார்க்கத்துறவி, ஆன்மிகச் செம்மல் முருகசரணன் இவரது மூத்த சகோதரர். திருப்புகழ்ச் செம்மல் மதிவண்ணன் இவரது இளைய சகோதரர். இவர்கள்ம் மூவரும், 'கவிமூவர்' எனப் பரலி சு. நெல்லையப்பரால் பாராட்டப் பெற்றவர்கள்.

68 அகவையைக் கடந்த போதிலும் பாரதி கலைக் கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பாரதியின் புகழ் பாடி வரும் விசுவநாதன், பல இலக்கிய இதழ்களில் கவிதை, கட்டுரை எழுதி வருகிறார். சென்னை பாரதியார் சங்கத்தின் மணிவிழாவை ஒட்டி இவரது பாரதி சேவையைப் பாராட்டும் வகையில் 'பாரதி புகழ் பரப்புநர்' விருது சமீபத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களால் வழங்கப்பட்டது. 'பாரதி வெறும் தமிழ்நாட்டுக்கு மட்டுமேயான கவி அல்ல; அவன் இந்தியாவின் தேசிய கவி. அவன் தமிழில் பாடியிருந்தாலும் கூட கனவிலும், நனவிலும் எப்போதும் இந்திய தேசிய எழுச்சியை மட்டுமே சிந்தித்தவன். அதை இந்தியர்கள் அனைவரும் நன்கு உணர வேண்டும்' என்று கூறும் இவர், அதற்காக பாரதிக்கு தேசியக் கவி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் செல்லும் அரங்குகளில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com