தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு? - 8
ஆரம்பநிலை மூலதனத்தார் மிகவும் தயங்கும் இந்நிலையில் மூலதனம் பெறுவதற்கான மாற்று வழிகள் சில கூறினீர்கள்; வேறு வழிகள் உள்ளனவா?

உள்ளன. இன்னொரு முக்கியமான வழி, வணிக முக்கியத்துவம் வாய்ந்த பெரும் கூட்டு நிறுவனங்களிடமிருந்து (strategic partners) மூலதனம் பெறுவது. பல ஆரம்ப நிலை நிறுவனங்கள் இவ்வழியில் செல்கின்றன. பெரும் நிறுவனங்களின் விற்பொருட்களுக்கு, ஆரம்பநிலை நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் உபகரணிகளாக அமைய நல்ல வாய்ப்புள்ளது.

இதற்கு புதுமைச் சங்கடம் (innovators dilemma) என்ற கோட்பாடு ஒரு முக்கிய காரணமாகிறது. அதாவது பெரும் நிறுவனங்கள் வெற்றி வாய்ப்பு நிச்சயமற்ற நுட்பங்களைத் தாங்களே தயாரிக்கத் தயங்குவதால் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பது; இதைப் பற்றி முன்னொரு கட்டுரையில் விரிவாகக் கண்டிருந்தோம். குறுகியகால வணிக விற்பனைத் தருணம், அல்லது வாடிக்கையாளர் மொத்தப் பொருளாக (complete solution) வேண்டிய தேவையை அவர்கள் கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தருவதாகவே தீர்மானித்திருப்பது போன்ற மற்றக் காரணங்களும் உள்ளன.

அதனால், சிறு நிறுவனங்களின் நுட்பங்கள் அவர்களுக்கு முக்கியமாக அமைந்தால், அவர்கள் மூலதனம் இடத் தயங்குவதில்லை. இன்டெல் (Intel) நிறுவனம் இதற்கு ஓர் உதாரணமாகும். தங்கள் மிக முக்கிய புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னேற்றக் கூடிய ஆரம்பநிலை நிறுவனங்கள் பலவற்றில் அவர்கள் மூலதனமிட்டுள்ளனர். ஸிஸ்கோ (Cisco) நிறுவனத்தையும் அவ்வகையில் குறிப்பிடலாம். அவ்விரு நிறுவனங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் பல பெரும் நிறுவனங்கள் மூலதனம் இடத் தயாராக உள்ளன. சமீப காலத்தில் இவ்வகைப் போக்கு அதிகரித்துள்ளது.

##Caption## ஆனால் இம்முறையான மூலதனத்திற்கு எதிர்விளைவுகள் இல்லாமல் இல்லை. ஒரு பெரும் நிறுவனத்திலிருந்து அதிகபட்ச மூலதனம் பெற்றுவிட்டால், பிற்காலத்தில் வேறு பெரும் நிறுவனங்கள் வணிக ஒத்துழைப்புக்கும் அல்லது நிறுவனத்தை வாங்க முயல்வதற்கும் கூட தயக்கம் காட்டக் கூடும். அல்லது, உங்கள் நுட்பம் ஒரு நிறுவனத்தின் விற்பொருளுக்கான முறையில் மிக அதிகமாகச் சாய்ந்து பொது வணிகத்துக்கு இடைஞ்சல் ஏற்படலாம். உதாரணமாக, வலைச் சாதனங்களில் X86 அல்லாத CPU-க்கள் நிறையப் பயனாவதால் உங்கள் மென்பொருளை அந்த CPU-வுக்கு மாற்றச் செய்தால், மற்றவர்களுக்கு விற்கக் கூடிய வாய்ப்புக் குறையக் கூடும். அதையே நெம்புகோலாக்கி, மூலதனமிட்ட பெரும் நிறுவனம், தங்களுக்கு மிக அனுகூலமான வணிக ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதோடு, உங்கள் நிறுவனத்தையே, அடிமாட்டு விலைக்கு விற்குமாறு நிர்ப்பந்திக்கக் கூடும்.

இவற்றைப் புரிந்து கொண்டு ஜாக்கிரதையாக செயல்பட்டால் (ஒரே பெரும் நிறுவனத்திடமிருந்து உங்கள் நிறுவனத்தின் 10% பங்குக்கு மேல் விற்குமளவு மூலதனம் பெறுவதைக் தவிர்க்கலாம் etc.), இந்த மாற்று மூலதன முறை உங்களுக்குப் பலமளிக்க வாய்ப்புள்ளது. பெரும் நிறுவனத்துடன் சேர்ந்து விற்பனை செய்தால், சிறு நிறுவனம் தான் மட்டுமே அணுக முடியாத வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன், வாடிக்கையாளர்களிடமிருந்து சற்று அதிகபட்ச நம்பிக்கையும் ஆதரவும் பெற முடியக்கூடும்.

அது மட்டுமல்ல. இத்தகைய முக்கிய உறவுகளே, நிறுவனத்தை மூடக்கூடிய அபாய நிலையில் அடிமட்ட விலையில் விற்கும் நிலை வராமல், முன்கூட்டியே பெரும் நிறுவனங்கள் உங்கள் நிறுவனத்தையும், குழுவையும், நுட்பத்தையும் புரிந்துகொண்டு அவர்களே ஒரு நியாயமான விலைக்கு வாங்கக் கூடிய அனுகூலமான வாய்ப்பை உருவாக்கும். ஒரே ஒரு பெரும் நிறுவனமாக இல்லாமல் இம்மாதிரியான இரு போட்டி உறவுகளை வளர்க்க முடிந்தால், இன்னும் அனுகூலமாக இருக்கும்! ஆனால், இரண்டு நிறுவனங்களும் போட்டியால் உங்களைக் கோபித்துக் கொண்டு விடாமல் இருக்குமாறு ஜாக்கிரதையாக வணிக ரீதிப் பிரிவினை செய்ய வேண்டியிருக்கலாம். கவனமாகச் செயல்படுங்கள்.

மற்றொரு வழி, தனிப்பட்ட செல்வந்தர்கள் - ஏஞ்சல் மூலதனத்தார் என்று குறிப்பிடுவார்கள். பல ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு இதுவே முதல் மாற்று வழியாக அமைகிறது. உங்கள் நுட்பத்திலும், வணிகத் துறையிலும் ஆர்வமுள்ள செல்வந்தர்கள் ஐம்பதாயிரத்திலிருந்து மில்லியன் டாலர் வரை தங்கள் பணத்தையே மூலதனமிட்டு உங்களுடன் நெருக்கமாகச் சேர்ந்து ஆலோசனையளித்து, வாடிக்கையாளர்கள், மற்ற ஆலோசகர்கள், மூலதன நிறுவனங்கள், ஒத்துழைப்பு நிறுவனங்கள் போன்றவர்களுக்கு அறிமுகம் அளிப்ப்து போன்ற பல உதவிகளைச் செய்து உங்கள் வெற்றியில் பங்கு கொள்வார்கள். இம்மாதிரி உதவியுடன் வரும் மூலதனம் பெரும் பக்க பலமாக அமையும். ஆனால் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் மூலதனமிடக் கூடிய, அல்லது அதில் ஊக்கமுள்ள செல்வந்தர்கள் மிகக் குறைவாதலால், இந்த வழி கடினமாக உள்ளது.

அப்படியே ஓரிரு ஏஞ்சல்களை நீங்கள் பிடித்துக் போட முடிந்தாலும், அவர்கள் அளிக்கும் உதவியை அவர்களாகவே வெள்ளித் தாம்பாளத்தில் வெற்றிலை பாக்குடன் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். நடக்காது! நீங்கள் தொடர்ந்து முயன்று நச்சரித்துத்தான் உதவி பெற வேண்டியிருக்கும். ஏனெனில் அவர்களுக்கென்று வெவ்வேறு தொழில்களும் பல்வேறு திக்குகளில் ஆர்வமும் இருக்கலாம். அவற்றின் நடுவில் உங்கள் மேல் கவனமும் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் நீங்கள்தான் முயற்சி எடுத்து வர வேண்டும்!

ஏஞ்சல்கள் அல்லாத மற்றொரு தனியார் மூலதன வழியும் உள்ளது. சில நிதித்துறைத் தரகர்கள் (financial brokers) உயர் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு இல்லாத மற்றத் துறைசெல்வந்தர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்துத் திரட்டித் தருவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனம் சிகாகோவில் உள்ள ஒரு தரகர் நிறுவனத்தின் மூலம் இருபத்தைந்து மில்லியன் டாலர் ஒரே சுற்றில் திரட்டினர்! ஆனால், பங்குச் சந்தை மதிப்பீடு பாதாளத்தில் சரிந்த பின்னர் இம்மாதிரி நடக்கிறதா என்பது சந்தேகந்தான். சில மருத்துவர்கள் தாங்களே தனிப்பட்ட முறையில் சிறிய அளவில் ஆரம்பநிலை மூலதனம் அளிப்பதும் உண்டு. உற்றார், உறவினர், நண்பர்கள் குழாமிடமிருந்தும் சிறிய அளவு நிதி திரட்டக் கூடும். இவ்வழிகள் எல்லாம் உதவியுடன் வரும் நிதியளிப்பதில்லை. வெறும் பணம் மட்டுந்தான். நிறுவனம் மூழ்கிவிடாமல் இருக்க இம்மாதிரி நிதி உதவலாம். ஆனால் வளர்ந்து தழைப்பதற்கு மேற்கொண்டு பலனளிக்காது. ஆனாலும் ஆழ்ந்த தேவையானால் வருங்காலத்தில் வளரும் வாய்ப்பிருக்குமானால் அதுவரை பிழைத்திருப்பதற்காக இத்தகைய மூலதனத்துக்கு முயற்சிப்பதில் தவறில்லை.

நிதி திரட்டுவதற்கான இன்னும் சில மாறுபட்ட வழிகளைப் பற்றியும், பட்டியிலிலிருந்த மற்றக் குறிப்புக்களப் பற்றியும் அடுத்த பகுதியில் தொடர்வோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com