'அச்சமுண்டு அச்சமுண்டு'
கடந்த சில வருடங்களாகத் திரைப்பட ஆசையே இல்லாமல் போய் விட்டது. காதலும் மோதலும் ரத்தக் களரியான காட்சிகளும், ரத்தம் என்ற உணர்வு இன்றி சிவப்புப் பெயிண்டாக வழியும் கொலைகளும் திடுக்கிட வைப்பதால் நல்ல படம் என யாராவது கூறினால் ஒழியப் படம் பார்க்கப் போவதில்லை. ஆனால் 'அச்சமுண்டு அச்சமுண்டு' அப்படியல்ல. மாறுபட்ட கதை. அதிலும் அமெரிக்காவில் நடக்கும் கதை. காவியமாக, தென்றலாக, ஆர்ப்பாட்டமில்லாத மிகையான ஒப்பனையின்றி அமரிக்கையான ஒரு தமிழ்ப்படம் இங்கு வந்து பார்க்க முடியும் என்று நான் கனவிலும் கருதவில்லை. சிறு குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் அந்த வில்லனின் சாந்தமான முகத்துக்குப் பின்னே, கொடூரமான அவன் மனம் வெளியில் தெரியாத மென்மையான நடிப்பு பாராட்டுதலுக்குரியது. குறைந்த ஆட்களின் நிறைவான நடிப்பு. இன்றைய காலகட்டத்தில் அமரிக்கையான யதார்த்தமான உண்மையைச் சிறு குழந்தைகளைக் கூட அழைத்துப் போய் அவர்களிடம் உணர வைக்கக் கூடிய படம். பரபரப்புக்காகக் கூட குழந்தைகளிடம் வில்லன் நடந்து கொள்ளும் முறையைக் காட்டாமல் மேலோட்டமாக பார்ப்பவர்களின் சிந்தனைக்கு விட்டுவிட்டு அவன் அவர்கள் துணிகளை மட்டும் எரிப்பதும், வேதனையை மறக்கத் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்வதும், யதார்த்தத்தைக் காட்டுகின்றது. இத்தனை அருமையான படம்! நாங்கள் ஒரு எட்டு பேர் குழுவாகப் பார்க்கப் போனோம். எங்களைத் தவிர தியேட்டரில் யாருமே இல்லை.

மற்றொரு கொடுமையான விஷயம் இந்தியாவில் மட்டுமே அதிகமாக இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கடைசியாகக் காட்டியபோது வேதனையாகவும், வருத்தமாகவும் இருந்தது. படம் முடிந்ததும் நாங்கள் அனைவரும் கைதட்டி அப்படத்திற்காக எங்களின் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டு கிளம்பினோம். ரொம்ப நாட்களுக்கு மறக்க முடியாமல் மனதை மயிலிறகால் தடவியது போல் மென்மையாகத் தடவிக் கொடுத்த நல்ல படம்.

ஜயலக்ஷ்மி சேஷாத்ரி,
ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com