இலங்கைத் தமிழருக்கு உதவி
சின்மயா மிஷன் இலங்கைத் தமிழருக்குச் செய்துவரும் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 11-12, 2009 தேதிகளில் வீரபுரம், சுமதிபுரம் பகுதிகளில் இருக்கும் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்றிருந்தோம். முன்னதில் 1700 பேரும், பின்னதில் 2300 பேரும் தங்கியுள்ளனர்.

11ஆம் தேதி அதிகாலையிலேயே நாங்கள் கொழும்பிலிருந்து புறப்பட்டு மதியம் 2:30க்கு வவுனியாவை அடைந்தோம். 5:00 மணிக்கே முகாம்கள் அடைக்கப்படுவதால் அன்று எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அன்றைக்கு வவுனியாவில் இருந்த சில அனாதை இல்லங்களுக்குச் சென்றோம். அங்கேயும் முதியோர்களும் சிறார்களும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

12ஆம் தேதி காலை தேநீர் மட்டும் பருகிவிட்டு முகாமுக்குச் சென்றோம். அங்கே மிகவும் பாதிக்கப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் இருந்தனர். அரசு தரும் உதவி தவிர வேறு உதவிகள் இந்த முகாம்களைச் சென்றடையவில்லை. அதனால், அங்கே நாங்கள் நிவாரணப் பொருள்களோடு சென்றதில் அதற்குப் பொறுப்பாளியாக இருந்த ராணுவ அதிகாரி மகிழ்ச்சி அடைந்தார்.

மழைக்காலம் தொடங்கிவிட்ட காரணத்தால் சிறிய இடைவெளிகளில் கனத்த மழை பெய்துகொண்டிருந்தது. அவ்வப்போது நாங்கள் பொருள் வழங்குதலை நிறுத்த வேண்டியதாயிற்று. மாலை 5:00 மணிக்கு நாங்கள் வெளியேற வேண்டும் என்ற போதும், ராணுவ அதிகாரி அன்புகூர்ந்து எங்களை 7:00 மணிவரை இருந்து பணியை முடிக்க அனுமதித்தார்.

அங்கே நிம்மதியற்றிருக்கும் பெரியோருக்கும் சிறுவர்களுக்கும் சற்றே மாறுதலாக இருக்கும்பொருட்டு ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு 24" தொலைக்காட்சிப் பெட்டியாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

இந்தப் பணிகளில் நீங்களும் உதவலாம். உங்கள் நன்கொடையை 'Chinmaya Mission West' என்ற பெயருக்குக் காசோலையாக அனுப்பவேண்டும். காசோலையில் கீழே "CORD-Sri Lanka" என்று தவறாமல் குறிப்பிடுங்கள். நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323

அனுப்ப வேண்டிய முகவரி:
Chinmaya Mission West,
Meera Raja,
2246 West Cullom Ave.,
Chicago, IL 60618, USA.

ஆங்கிலத்தில்: கௌரி மகேந்திரன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com