போதும் இந்த மௌனம்...!
இரவு 9 மணியிருக்கும், மழை விட்டும் சற்றுத் தூறிக்கொண்டு இருந்தது. காருக்கு பெட்ரோல் போடுவதற்கு நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு வந்தபோது, பெட்ரோல் நிலையம் தெரிந்தது. உள்ளே சென்று பெட்ரோலை நிரப்பிவிட்டுக் காரின் கதவை திறக்க முற்பட்டபோது, பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக மூன்று இளைஞர்கள் நிற்பதைப் பார்த்தேன். மழைத்தூறல் தெறிக்காமல் இருக்கச் சுவரை ஓட்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். தலையின் மேலாகக் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களை நோக்கி நடந்தேன்.

என்னைப் பார்த்ததும், அவர்களில் ஒருவர் என்னை நோக்கி வந்தார். பார்த்ததும் அவர்கள் எங்கள் ஊர்க்காரர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்துவிட்டது. "மாலை வணக்கம்! யார் நீங்கள்? இங்கு என்ன செய்கிறீர்கள்? நீங்க இந்தியாதானே?" என்று ஆங்கிலத்தில் கேட்டேன். "இல்லை, நாங்க இலங்கைத் தமிழர்" என்றுவிட்டு சிரித்துக் கொண்டே, "நாங்க ஈழத் தமிழர்" என்றார்.

"ஓ! தமிழா? மிகவும் நல்லது. நானும் தமிழ்தான்" என்றுவிட்டு என் கைகளை நீட்டினேன். கைகளைப் பற்றி மெதுவாகக் குலுக்கிக் கொண்டே மற்ற இருவரையும் தலை அசைத்து வரக்கூறினார்.

"என்ன இங்கு நிற்கிறீர்கள்? எங்கு போகிறீர்கள்?" என்றேன்.

"நாங்கள் வாசிங்க்டன் டி.சி.க்குப் போகிறோம்" என்றார் ஒருவர்.

"என்ன, டி.சி.யோ? அதுக்கு இங்கு ஏன் நிற்கிறீர்கள்? எந்த விமான நிலையத்திற்குப் போகப்போகிறீர்கள்?" என்றேன் ஆச்சரியத்துடன்.

"இல்லை. நாங்கள் டி.சி.க்கு நடந்துதான் போய்க்கொண்டிருக்கிறோம்" என்று சிரிப்போடு கூறினார்.

"என்ன! நடந்தா, எவ்வளவு தூரம் தெரியுமா" என்றேன்.

"இவர்கள் என்ன விளையாட்டுப் பிள்ளைகளாக இருக்கிறார்கள்!" என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து பேசியபோதுதான் அவர்கள் விளையாட்டுப் பிள்ளைகள் அல்ல என்பது தெரியவந்தது. அவர்கள் ஒரு மாபெரும் பணியைத் தங்கள் மண்ணுக்காக, தங்கள் மக்களுக்காக மேற்கொண்டுள்ளார்கள்!

பார்வைக்குச் சிறியவர்களாக இருந்தபோதும் பெரியவர்களான நாங்கள் செய்யமுடியாத கருமமொன்றைச் செய்து கொண்டிருக்கும் இவர்களைக் கை தூக்கித் தொழவேண்டும் போலவிருந்தது. "செயற்கரிய செய்வார் பெரியர்" என்ற வள்ளுவனின் குறளுக்கு உயிர்கொடுத்து நிற்கும் எங்கள் மண்ணின் இந்த மூன்று மைந்தர்களையும் எண்ணி என் இதயம் நெகிழ்ந்து விம்மிப் பெருமைப்பட்டது. காரணம் இந்தத் தூயவர்கள் பிறந்த அதே மண்ணில் பிறந்த பெருமை எனக்கும் உண்டல்லவா!

இன்றைய இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இனி நாளை நல்லது நடக்கும் என்பது இவர்கள் செயற்பாடுகள் மூலமாகத் தெரிகிறது.

கண்ணன் ஸ்ரீ காந்தா, விஜய் சிவனேஸ்வரன், ரமணன் திருக்கேதீஸ்வரநாதன் ஆகிய இம்மூன்று இளைஞர்களையும் அன்று சந்தித்ததை என் வாழ்கையில் ஒரு மறக்கமுடியாத நாளாகக் கருதுகிறேன்.

இவர்கள் ஆயிரம் மைல் தூரத்தை இரவு பகலென்று பாராது, மழை, வெயில், குளிர் என்று பாராது, ஒழுங்கான தூக்கமின்றி, சரிவரச் சாப்பிடாது, உடல் வலியைப் பொருட்படுத்தாது ஒரு நடைப்பயணத்தைச் செய்வதற்கு ஊக்குவித்ததென்ன? பரம்பரை பரம்பரையாகத் தாம் பிறந்த மண்ணிலே மற்றவர்களைப் போல சகல உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் காந்தியண்ணலின் அஹிம்சைப் போராட்டத்தை மேற்கொண்டபோது அந்த உரிமைப் போராட்டத்தை அடக்கு முறையினால் அழிக்க முற்பட்டதனால் ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது தமிழினம். மூன்று இலட்சம் தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே அகதிகளாகிப் போயினர்.

##Caption## இந்த அப்பாவித் தமிழர்களைப் பற்றி எந்த நாடும் கவலைப்படுவதாகவோ, கவனிப்பதாகவோ தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமானமுள்ள பல நாடுகள் இன்றுவரை மௌனம் சாதிக்கின்றன. கண்டும் காணாததுமாகவிருக்கும் உலகத்தின் மௌனத்தைக் கலைத்து, கவனத்தை ஈர்த்து, முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை வெளியே கொண்டு வந்து மீளக் குடியேற்றி, மறுவாழ்வு அளிக்க, மேற்கொள்ளும் முயற்சியே இவர்கள் செய்கின்ற பணி. போகும் இடமெல்லாம் அந்த மக்களுக்கான ஆதரவைத் திரட்டி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவர்களது நோக்கம்.

மூவரும் மே மாதம் 26ம் திகதி சிகாகோ நகரத்தில் இருந்து புறப்பட்டு பல சிறு கிராமங்கள், நகரங்களைக் கடந்து இலினொயிஸ், இந்தியானா மாநிலங்கள் ஊடாகத் தற்போது ஒகாயோ மாநிலத்தைக் கடந்து பென்சில்வேனியாவை அடையவிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த நடைப் பயணத்தை எந்த ஒரு நிறுவனமும் பொறுப்பெடுத்து நடத்தவில்லை. இவர்கள் பெரும்பாலும் சொந்தப் பணத்திலும் நல்லவர்கள் வழங்கும் காணிக்கைகள் மூலமாகவும் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

உதவி செய்ய விரும்புபவர்கள் இணைய தளத்தின் மூலமாக (www.breakthesilenceusa.com) தொடர்பு கொள்ளலாம்.

இவர்கள் பகலில் மட்டுமல்லாமல் சில சமயங்கள் இரவு வேளைகளில் நடப்பதோடு, சில நாட்கள் விடுதிகளிலும் அவ்வப்போது பூங்காக்களிலும் தங்குகின்றனர். சில நாட்கள் பட்டினியோடும் நடக்கிறார்கள். ஒருநாள் வயதான மூதாட்டி உள்ளூர் பத்திரிகையில் இவர்களைப் பற்றிப் படித்துவிட்டு, இவர்களைத் தேடி உணவு கொண்டு வந்து கொடுத்ததோடு, வறுமைக்கோட்டின் எல்லையில் இருந்த போதிலும் தன்னிடம் இருந்த சிறு உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தையும் கொடுத்து, வாழ்த்திவிட்டுப் போனாராம். இதைக் கூறியபோது அவர்கள் கண்கள் கலங்கிவிட்டன.

இவர்கள் செப்டெம்பர் மாத இறுதியில் வாஷிங்டன் டி.சி.யை அடைந்து அங்கு பல முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்திப்பதோடு வெள்ளை மாளிகையின் முன்பாக நடைபெறும் பேரணியிலும் கலந்து கொள்வார்களென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

© TamilOnline.com