மானஸா ரவி பரதநாட்டிய அரங்கேற்றம்
ஜூன் 27, 2009 அன்று குமாரி மானஸா ரவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பிட்ஸ்பர்க் அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோவில் அரங்கில் நடைபெற்றது. பெதல் பார்க் உயர் நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்குச் செல்லவிருக்கும் இவர் நாட்டிய கலாவதி திருமதி ஜெயா மணியிடம் ஒன்பது ஆண்டுகளாக நடனம் பயின்று வருகிறார். குரு ஜெயா மணி அவர்கள் காஞ்சிபுரம் எல்லப்ப பிள்ளை அவர்களின் பாரம்பரியத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியப் பயிற்சி அளித்து வந்து, இதுவரை 88 மாணவிகளுக்கு அரங்கேற்றம் செய்வித்திருக்கிறார். இவர் ஸ்லிப்பரி ராக் பல்கலைக் கழகத்தில் நாட்டியத்துறை இணைப் பேராசிரியர். மானசா, பிட்ஸ்பர்க் வாசிகளான ரவி சுந்தரம், அருணா ரவியின் குமாரத்தி ஆவார்.

நிகழ்ச்சி ஊத்துக்காட்டாரின் ‘ஆனந்த நர்தன கணபதி'யுடன் தொடங்கியது. தொடர்ந்து மாங்குடி துரைராஜ ஐயரின் ‘வானகத்தரும் மாதவத்தரும்' எனத் தொடங்கும் ராமாயண பாலகாண்டப் பாடலுக்கு ஷப்தம் எனும் வகையில் நடனமாடினார். மானஸா வர்ணத்துக்கு எடுத்துக்கொண்ட மதுரை கிருஷ்ண ஐயங்காரின் ‘கோலமயில் வாகனனே' பாடல் பொருத்தமாக ஷண்முகப்ரியாவில் அமைந்திருந்தது. வள்ளி கல்யாணம், கார்த்திகை மகளிர் கண்ட ஆறுமுகன், சூரன் வதம் ஆகியவற்றுக்கு அழகாக அபிநயத்ததுடன் ஜதிகளுக்குச் சிறப்பாக ஆடினார்.

இடைவேளைக்குப் பின் அம்புஜம் கிருஷ்ணாவின் ‘ஆடினயே கண்ணா' (மோகன கல்யாணி), சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய ‘வந்தேஹம் ஷாரதாம்' (யமன் கல்யாணி) ஆகியவை இடம்பெற்றன. கண்ணன் நதிக்கரையில் நிலவொளியில் அற்புத நடனமாடியதைக் காண விழையும் கோபியர்களைக் கண்முன்னே கொண்டு நிறுத்தினார் மானஸா. தொடர்ந்து கம்பீரவாணியில் ஒரு தில்லானா.

முத்தாய்ப்பாக, ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழியில் ‘வாரணமாயிரம்' பாசுரத்தில் தொடங்கிப் பத்துப் பாடல்களுக்கு அருமையாக அபிநயித்தார். மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து தன் கைத்தலம் பற்றிடக் கோதையார் கண்ட கனாவை தானே கண்டதுபோல அவ்வளவு அழகாக பாவத்துடன், முத்துப் பந்தல்களையும் நிறைகுடங்களையும், குங்குமம் அப்பி, குளிர் சாந்தம் பூசி ஊர்வலம் சென்று மங்கல நீராடியதையும் ஆடிக் காட்டினார் மானஸா.

நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த திருமதி ஜ்யோத்ஸ்னா களவார் தமிழ் அறியாதவரும் புரிந்துகொள்ளும்படிச் சிறப்பாகத் தொகுத்தளித்தார். நிகழ்ச்சிக்கு 300க்கு பேருக்கு மேல் வந்திருந்து கண்டு களித்தனர்.

ரவி,
பென்சில்வேனியா

© TamilOnline.com