ஏழைச் சிறுவர் கல்விக்கு நிதி திரட்ட 'குஜாரிஷ்'
ஆகஸ்ட் 29, 2009 அன்று சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள வெஸ்ட் வேல்லி கல்லூரியில் மாலை 5:30 முதல் ‘குஜாரிஷ்' என்ற இசை, நடன நிகழ்ச்சி ஒன்றை ‘பிரதம்' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அஷ்வின் ரங்கன், சாங்க்யா கிமிகர், பிரகாஷ்-சபினா வாஸ்வானி, ராகினி ஸ்ரீனிவாசன், ராஜ் ராகவன், சாரு ராய், வாசு ரங்கநாதன் ஆகியோர் பாடுவர். மேடையைக் கலகலக்கச் செய்ய ‘தி மோனா சம்பத் டான்ஸ் கம்பெனி' குழுவினர் வருகிறார்கள்.

லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பான பிரதம் பிற்பட்ட சிறாருக்குக் கல்வி தருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் சுமார் 15 மாநிலங்களில் மில்லியன் மாணாக்கர்களுக்கு மேல் அடிப்படைக் கல்வி தந்துள்ளது. “கிடைக்கும் ஒவ்வொரு டாலரிலும் அதிகபட்ச நன்மையைச் செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை தருகிறோம்” என்கிறார் அமெரிக்காவில் பிரதம் அமைப்பின் தலைவர் டாக்டர் அதுல் வரதாச்சாரி. “பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் சிறுவர்கள் 12 மணி நேரம் அற்பக் கூலிக்கு உழைக்கும்படி வற்புறுத்தப் படுகிறார்கள். பெற்றோர், போலீசார், முதலாளிகள் இவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்று தனது லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டுரையில் எழுதுகிறார் சித்ரா திவாகருணி. இந்தச் சூழலிலிருந்து மீட்டு கல்விக்கூடங்களுக்கு இவர்களை அனுப்பும் நற்பணியைச் செய்கிறது பிரதம். அப்படிப்பட்ட காஜல் இன்றைக்குத் தனது வகுப்பின் முதல் மாணவியாக வருகிறார்!

இந்த நற்பணியில் நீங்களும் பங்கு பெறலாம்.

நுழைவுச் சீட்டின் விலை: $20, $50.
நுழைவுச் சீட்டு வாங்க: mangala@yahoo.com - 650-969-0421.

ஜயா பத்மநாபன்

© TamilOnline.com