தென்றல் பேசுகிறது
பங்குச் சந்தை சுறுசுறுப்படைந்து வருகிறது. குறியீட்டெண்கள் மேல்நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. தங்கமும் வெள்ளியும் விலையேறி வருகின்றன. இவற்றாலெல்லாம் பொருளாதாரம் மீண்டும் அபிவிருத்தி அடைகிறது என்று எண்ணிவிட முடியவில்லை. வேலையிழப்புகள் நிற்கவில்லை. வீடு, மனை விலைகள் அமிழ்ந்தே உள்ளன. இன்னமும் வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. சாதாரண மனிதனின் மனநிலையில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கவில்லை. ‘வறுமையின் விளைவுகள் இனிமையானவை' என்று ஷேக்ஸ்பியர் கூறினார். இந்தச் சமயத்தில் சுயபரிசோதனை செய்வது மிகுந்த பலனைத் தரும். வாழ்க்கையின் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அடைக்க இது ஒரு வாய்ப்பு என்று கொள்ளலாம். அவ்வாறல்லாமல் கணவாயின் இறுதியில் வெளிச்சமிருக்கிறது என்று அதையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எழுவது விழுவதற்காகவே இருக்கும்.

***


‘எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன' என்பது இந்தியர்களுக்கு மிகப் பிடித்த வாக்கியம். ஆனால் மதம் என்பதில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று, ஆன்மீகம்; மற்றது, மத அரசியல். ஆன்மீகம் எப்போதும் அன்பு, கருணை, கொல்லாமை, தியாகம் போன்ற உயர்பண்புகளை வற்புறுத்தும். ஆனால், மத அரசியல் அவ்வாறல்ல. இதற்குக் கண்கூடான சாட்சி இலங்கையில் புத்த பிட்சுக்களின் தூண்டுதலில் நடந்து வந்திருக்கும் இனப்படுகொலை. கொல்லாமையே மிகச் சிறந்த அறம் என்று பேசியதில் போதிசத்துவரை மிஞ்சியோர் எவருமில்லை. ஆனால் அவர் பெயரால் விளங்கும் மதமோ மனசாட்சியில்லாமல் ஈழத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வன்முறை அரசியலைக் காலம் காலமாக நடத்தி வருகிறது. உலகின் ஆதிக்க மதங்கள் எல்லாமும் நேராகவோ மறைமுகமாகவோ தமது மதப்பரவலுக்காக வெவ்வேறு வகைப் போர்களை நடத்தியுள்ளன, நடத்தி வருகின்றன என்பதுதான் உண்மை. சில செயல்பாடுகளைப் ‘போர்முறை' என்று புரிந்துகொள்ள முடியாத அளவு பூடகமாக இருக்கும். மெய்யாகவே ஆன்ம உயர்வுக்கான வழிதான் மதம் என்பதை உணரும் தனிமனிதன் மத அரசியலைத் தவிர்த்து, உலகளாவிய பேரன்பைப் பூணுவது அவசியம். அதல்லாதவரை ‘சமத்துவம், சகோதரத்துவம்' போன்றவை சாமர்த்தியமான கோஷங்களாகத்தான் இருக்கும்.

***


“நேர்மையான வழியை மேற்கொள்ளுங்கள்” இது பிரதமர் மன்மோஹன் சிங், லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைவராகப் பதவியேற்ற அஸ்வினி குமாருக்குக் கூறிய அறிவுரை. அன்றாடம் சார்பதிவாளர்கள், சுங்க அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் என்று பலர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பிடிபடும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. லஞ்ச ஊழல் அளவுகோலில் இந்தியா 85வது இடத்தை -- சீனா, மெக்ஸிகோ, பிரேஸில் ஆகிய நாடுகளைவிட மோசமான இடத்தை -- பெற்றுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை மெச்சி மகிழும் அதே நேரத்தில் இதையும் கணக்கில் கொள்வது அவசியம். லஞ்சத்தின் ஊற்றுக்கண் அரசியல் கட்சிகள்தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த இடத்தில், இந்தப் பதவியில் நியமிக்க வேண்டுமென்றால் இவ்வளவு என்று பெட்டிக் கணக்கில் பேரம் பேசப்படும் நிலையில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தில் பெரும்பகுதி அதற்கான குழாய் வழியே மேலிருக்கும் தலைவர்களுக்குச் செல்கிறது. ஆனால் லஞ்சம் வாங்கும் விஷயத்தில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுப்பதில்லை, மாட்டிக்கொள்வதுமில்லை. சிறைக்குச் செல்பவர்கள் அதிகாரிகள்தாம். இந்த நிலை ஆரோக்கியமானதல்ல. சிறிய படகுகள் வழியே அஜ்மல் கசப்கள் இந்தியக் கடற்கரையில் வந்திறங்கி ஒரு பெருநகரத்தையே ரத்தக்களறி ஆக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் லஞ்சம் கொடுத்தால் இந்தியாவில் எதையும் செய்யமுடியும் என்றிருக்கும் நிலைதான். தேசபக்தி, நேர்மை ஆகியவை விலைமதிப்பற்றவை. லஞ்சக் கறையானால் இவை அரிக்கப்பட்டுவிட்டால் தனது சுதந்திரத்துக்கே ஆபத்து என்பதை இந்தியா உணர வேண்டும்.

***


இந்த இதழ் கர்நாடக இசையுலகின் தேவியர் மூவரில் ஒருவரான டி.கே. பட்டம்மாள் அவர்களுக்குத் அஞ்சலி செலுத்துகிறது. மேடையில் தமிழிசை முழங்கிய முன்னோடிகளிலும் அவர் ஒருவராவார். ஜெயமோகனின் நேர்காணலின் இறுதிப் பகுதி வெளியாகி உள்ளது. படித்தே ஆக வேண்டிய ஒன்று அது. புதிய புலத்தில் தமது அறிவுத் தடத்தைப் பதித்த சாதனையாளர் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன், இளம் சாதனையாளர் ஆதித்யா ராஜகோபாலன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் இந்த இதழைச் சிறப்பிக்கின்றன. தேர்ந்த பதிப்புத்துறை நிர்வாகி, எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான ஆர். வெங்கடேஷ் இந்த இதழின் எழுத்தாளர் பகுதியில் தோன்றுகிறார். சுவையான சிறுகதைகளுக்கும் பஞ்சமில்லை. மருத்துவம், வித்தியாசமான சமையல் குறிப்புகள், ‘எங்கள் வீட்டில்' படங்கள் என்று தென்றல் மெருகேறிய வண்ணம் உள்ளது. வந்து குவியும் கடிதங்கள் வாசகர்களின் அன்பையும் அபிமானத்தையும் எமக்குத் தெரிவிக்கின்றன. தமக்குப் பிடித்தவற்றை மட்டுமல்லாமல் சிலர் கோபமாகவும் எழுதியுள்ளனர். நல்லதுதான். கருத்துப் பரிமாற்றத்துக்கு நல்லதொரு மேடை அமைத்துத் தருவதில் தென்றல் பெருமை கொள்கிறது. தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் பாலமாக இருப்பதென நாங்கள் வரித்துக்கொண்ட பணியை ஊக்கத்தோடு தொடர்ந்து செய்ய இவை தூண்டுகோல்களாக இருக்கின்றன.

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. கிருஷ்ண ஜயந்தி, விநாயகச் சதுர்த்தி, ஆடிப் பெருக்கு ஆகியவை இந்த மாதத்தில் வருகின்றன. இஸ்லாமியப் பெருமக்களுக்கு நோன்பு பிறக்கிறது. எல்லோருக்கும் பண்டிகைக் கால வாழ்த்துக்கள், இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!


ஆகஸ்டு 2009

© TamilOnline.com