உயர்கல்விக்கு உதவி வேண்டும்
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள ஊர் பொம்மிநாயக்கன்பட்டி. இந்த ஊரில் செங்கல் சூளைத் தொழிலாளியாக வேலை பார்ப்பவர் குருசாமி. இவரது மகன் மணிகண்டன் (17) பிறவியிலேயே உடல் ஊனமுற்றவர். ஆனாலும் படிப்பில் ஆர்வம் அதிகம். இவரால் எழுந்து கூட நிற்க முடியாது என்பதால் தாயார் அமிர்தவள்ளி, தினமும் பள்ளிக்குத் தூக்கிக்கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பவும் அழைத்து வருவார். சக மாணவர்கள் பள்ளியில் இவருக்கு உதவுவர்.

ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மணிகண்டன் சமீபத்திய பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேற்கொண்டு கல்லூரியில் படிக்க ஆர்வம் இருந்தபோதும் வசதியில்லாததால் கல்லூரியில் சேர முடியாமல் உள்ளார். தன் நிலை பற்றி இவர், "பிளஸ் 2 தேர்வு எழுதும் போது மற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அதே தேர்வு நேரமே எனக்கும் வழங்கப்பட்டதால் குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க இயலவில்லை. அதனால், மதிப்பெண் குறைந்து விட்டது. மேற்படிப்பு படிக்க மிக்க ஆர்வமாக இருக்கிறேன். காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் இடம் கிடைத்தால் மிக வசதியாக இருக்கும். அரசு கல்வி உதவித்தொகை தந்து என்னை ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார்.

அரசும், தனியார் அமைப்புகளும், சேவை நிறுவனங்களும் உண்மையான கல்வித்தாகம் கொண்ட இந்த இளைஞருக்கு நிதியுதவி செய்வதே ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியின் கனவை நனவாக்கும்.

அரவிந்த்

© TamilOnline.com