மேல்கோட்டை வைரமுடி பிரம்மோத்ஸவம்
பெங்களூர் - மைசூர் சாலையில் மாண்டியா ஜில்லாவில் உள்ள மேல்கோட்டை என்ற மலையில் உள்ளது திருநாராயணபுரம். இங்கு ஒவ்வொரு வருடமும் மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடப்பது வைரமுடி பிரம்மோத்ஸவ உற்சவ சேவையாகும். மைசூர் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள வைரமுடி என்று சொல்லப்படும் பலகோடி மதிப்புள்ள வைரங்கள் பதித்த கிரீடம் மைசூரிலிருந்து மேல்கோட்டை கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, பலதரப்பட்ட சம்பிரதாய சடங்குகளுடன் எம்பெருமான் திருநாராயண மூர்த்திக்கு அணிவிக்கப்படும். நன்கு அலங்கரிக்கப்பட்ட பெருமாள் நான்கு மாட வீதிகளிலும் அசைந்து அசைந்து வருவது பக்த கோடிகள் கண்களுக்குப் பெருவிருந்து. அதைக் காணக் கண் கோடி வேண்டும்! அந்த பதினான்கு நாட்களும் அந்த திருநாராயணபுரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். தினமும் இரவில் ஏதாவது ஒரு உற்சவம் நடக்கும். கர்நாடக அரசும் பக்தர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது மிகவும் பாராட்டத் தக்க விஷயமாகும். ஹிரண்ய வதம், பூச்சொரிதல், தெப்ப உற்சவம் என்று பற்பல விழாக்கள் இங்கு நடைபெறுகின்றது.

ஜி. ரத்தினவேல்,
சன்னிவேல்

© TamilOnline.com