நிலாவுடன் நான்
ஊரைவிட்டுச் சற்றே தள்ளி இருந்த அந்த அமைதியான ‘திருப்பதி பவனம்' வழக்கத்துக்கு மாறாகச் சற்றே கலகலப்பாக இருந்தது. மார்கழி மாதப் பனிமூட்டம் பங்களாவைக் குளிரூட்டினாலும் உள்ளே ஜோதியின் சாம்பிராணிப் புகைமூட்டம் வீட்டைக் கதகதப்பாக்கியது. உன்னி கிருஷ்ணனின் பக்திப் பாடல்களை ரசித்தபடி, காப்பியை ருசித்தபடி, அன்றைய நாளிதழில் ஐக்கியமானார் சதாசிவம். ஜோதியின் கணவர். இன்று அவர்கள் பையன் சுரேந்தருக்கு பெண் பார்க்க அல்லவா போகிறார்கள். இந்த பெண்ணையாவது தன் மகனுக்குப் பிடிக்க வேண்டுமே என்று தனிப் பிரார்த்தனையே செய்தாள் ஜோதி.

மாலை 4 மணி. பெண் வீடு....

அந்தக் காலம்போல் பட்டுப் புடவையில் வந்து காப்பி டம்ளருடன் வந்து நமஸ்காரம் செய்யவில்லை என்றாலும் எளிமையான புடவையில் புன்னகையுடன் வந்தாள் பெண் நிலா. அவிழ்த்துவிட்ட கூந்தலுடன் நவீன ‘திரௌபதி'யாக இல்லாமல் பின்னலிட்டிருந்தாள். ஏனோ தெரியவில்லை. பார்த்தவுடன் ஜோதிக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி அதிகமாக விமரிசிக்கவும் அவளுக்கு விருப்பமில்லை. தனக்கே பிடிக்கவில்லை என்றால் பையனுக்கு எப்படிப் பிடிக்கும், பையனை ஜாடையாகக் கேட்டாள். அவனோ பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கிசுகிசுத்தான்.

தன்னைவிட ஒரு வருடம் சீனியரான அவள் அண்ணி கொடுத்த தைரியத்தில் நிலாவும் தனியே பேசச் சம்மதித்தாள்.

##Caption## பேசிவிட்டு வந்த சுரேந்தர், தனக்கு முழு சம்மதம் என்பதைத் தெரிவித்தான். ஜோதி அதிர்ந்து போனாள். எவ்வளவோ அழகான பெண்களை எல்லாம் பார்த்து விட்டு வேண்டாம் என்றவன், இந்தப் பெண்ணைப் பார்த்து எப்படிச் சம்மதித்தான்? ஜோதி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் கேட்பதாக இல்லை. அடுத்த மாதமே திருமணம் நடந்து முடிந்தது. ஜோதி புலம்பித் தீர்த்தாள், தன் தோழிகளின் கிண்டலான விமர்சனங்களைக் கேட்டு. பையனும், மருமகளும் நான்கு நாட்களில் தேனிலவிற்குக் கிளம்பி விட்டார்கள்.

நான்கு நாட்கள் கழித்து தேனிலவு சென்றவர்கள் திரும்பி வந்தார்கள், கையில் ஒரு குழந்தையுடன். வீட்டில் ஏற்பட்டது பூகம்பம்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல் வேலைக்குச் சென்றான் சுரேந்தர். மாலை அலுவலகம் முடித்து வீடு திரும்பினான். பூகம்பத்தின் வீரியம் சற்றுக் குறைந்திருந்தது.

வீட்டின் மத்தியில் நின்று சுரேந்தர் தன் பேச்சை ஆரம்பித்தான். “அம்மா, அப்பா, இருவரும் நான் சொல்றத தயவு செய்து கொஞ்சம் கவனமா கேளுங்க” அவன் பேச ஆரம்பித்தான்.

“நான் நிலாவைத் திருமணம் செய்யச் சம்மதித்ததே அவள் என் வேண்டுகோளுக்குச் சம்மதித்ததால்தான். அதாவது ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பதுதான் அது. அதுதான் எங்கள் முதல் குழந்தை. இது என்னுடைய நீண்ட நாள் கனவு. ஏன்னா, நான் சின்னவனா இருக்கும்போதே நம் தாத்தா வீட்டிற்கு கிராமத்திற்குப் போகும்போதெல்லாம் தாத்தா வேலைக்காரர்களை “அநாதை நாயே, அநாதை நாயே” என்று திட்டுவார். அதற்காகவே யாரும் ஆதரவு இல்லாதவர்களாகப் பார்த்து வேலைக்கு வைத்துக் கொள்வார். அந்தச் சொல் என் மனதை ரொம்பவும் பாதித்தது. அந்தப் பழியைத் துடைப்பதற்காகவே நான் ஆசிரமத்தில் இருந்து இந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்தேன். அதற்கு இவள் சம்மதித்ததால்தான் நான் இவளைக் கரம் பிடித்தேன். எங்களுக்குக் குழந்தை பிறப்பதற்கு முன் இதைச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் உடனடியாக இக்காரியத்தைச் செய்தோம்” என்று சொல்லி முடித்தான் ஒரே மூச்சில்.

இதைக் கேட்ட ஜோதியும் சதாசிவமும் வாயடைத்து நின்றனர். வீட்டின் முன்ஹாலில் தன் மாமனார், மாமியார் போட்டோவிற்கு மேல் தன் மகன், மருமகள் போட்டோவை மாட்டினாள் ஜோதி. தன் மாமனார் பெயரையே அக்குழந்தைக்குச் சூட்டி, தன் பேரக் குழந்தையாக ஏற்றுக் கொண்டாள். அதன் பொக்கை வாயும் மலர்ந்தது. தன் தாத்தா பாட்டியைப் பார்த்து சிரித்தது.

- கலா ஞானசம்பந்தம்,
கலிபோர்னியா

© TamilOnline.com