தென்றல் பேசுகிறது
மூன்றே ஓட்டு வித்தியாசத்தில் அமெரிக்கக் காங்கிரஸ் தட்பவெப்ப மசோதாவை நிறைவேற்றியுள்ளது. புவிச் சூடேற்றம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஒபாமா உறுதி பூண்டதன் விளைவு இந்த மசோதா. ஆனாலும் இதன் ஷரத்துகள் ஐரோப்பிய அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்குப் பக்கத்தில்கூட இல்லை என்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதனால் எரிபொருள்மீது வரி ஏறுமே தவிர, புவிச் சூடேற்றத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று இதை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். அல் கோர் (சுற்றுச் சூழல் குறித்த ஆவணப்படத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்), ஹிலரி கிளின்டன் போன்றோர் இந்த மசோதாவுக்கு ஆதரவாகப் பல ‘மதில்மேல் பூனை'களுடன் பேசினார்கள். “ஜனநாயகக் கட்சியிலேயே பெரும்பிளவை ஏற்படுத்தியுள்ள இந்த மசோதா, பொருளாதாரத்தின் பல துறைகளில், குறிப்பாக மின் உற்பத்தி, வேளாண்மை, தொழில்துறை, கட்டுமானம் ஆகியவற்றில் நல்ல மாறுதலைக் கொண்டுவரும்” என்று நியூயார்க் டைம்ஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறது. “துணிச்சலான, அவசியமான நடவடிக்கை” என்று ஒபாமா இதைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு நல்ல தொடக்கம் என்ற அளவில் வரவேற்கத் தக்கது.

***


மேடைக் கேளிக்கையில் புதியதொரு வேகத்தையும் உடல்மொழியையும் கொண்டு வந்தவர் மைக்கல் ஜாக்ஸன். இந்த ‘மனிதப்-பையனின்' ஆடலுக்குத் துள்ளாத இதயங்கள் சென்ற முப்பத்தைந்து ஆண்டுகளில் இல்லை. உலகெங்கும் ஆயிரமாயிரம் மைக்கல் ஜாக்ஸன்கள் உருவான போதும் இவருக்கு இணை இவர்தான். இந்த இமாலயத் திறமைக்குள் ஒரு மகத்தான சோகமும் உண்டு. தன் தோலை வெள்ளையாக்கிக் கொண்டது, சிறுவர்களைப் பாலியல் நோக்கத்தோடு அணுகியது, மகிழ்ச்சியற்ற திருமணங்கள் என்று பல சர்ச்சைகள் இவரைத் துரத்தின. வெற்றியும் புகழும் நீடித்த மகிழ்ச்சியைத் தருமா என்ற இந்தியத் தத்துவப் பிரச்சனைக்கு விடை தேடுபவர்கள் மைக்கல் ஜாக்ஸனின் வாழ்க்கையைப் பரிசீலனை செய்வது பலன் தரும். முடிவு எதுவானாலும், இவரது மறைவு அதிர்ச்சியும் சோகமும் தருவதுதான் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.

***


தாலிபான் உட்பட்ட இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்கு உதவுவதாகக் கூறி, பணத்தைப் பாகிஸ்தானில் கொண்டுபோய்க் கொட்டுகிறது அமெரிக்கா. பாகிஸ்தானோ தனது உள்நாட்டுப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும், வியத்தகு வேகத்தில் உலகச் சூழலையும் மீறி வளர்ந்துவரும் இந்தியாவின் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சிகளைக் குலைக்கவும் தனது வன்முறையாளர்களை ஏவியபடி இருக்கிறது. ‘இந்தியாவின்மீது வன்முறையை ஏவக்கூடாது' என்கிற ஷரத்தோடு தொடங்கிய அமெரிக்காவின் குரல் வேகம் குறைந்து, இந்தியாவைப் பற்றிய பேச்சையே நிறுத்திவிட்டது. இந்திய அரசின் குரல் ஒருமித்து, வலுவாக, தெளிவாக இந்தியா உலகின் பிறநாடுகளுடனான உறவை தார்மீக, பொருளாதார பலங்கள் என்னும் அடித்தளத்தின் மீது நிறுவவேண்டும். அதுவரை இந்த அசட்டை செய்தலும் அவமானப்படுத்தலும் தொடரும்.

சரியான நேரத்தில் இந்திய அரசு நட்பு முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நேபாளம் வன்முறையாளர் கையில் சிக்கித் தவிக்கிறது. அங்கு ‘ஜனநாயகம்' என்று பேசப்படுவது வெறும் சடங்குமுறையில்தான். விளைவு, மேற்கு வங்கத்தில் கணக்கற்ற தீவிரவாதத்தில் இறங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் நேபாளக் கொடியை இந்தியாவுக்குள் சுமந்து போராடும் அளவுக்குத் துணிந்துவிட்டனர். இதைப்பற்றி முன்கூட்டிய எச்சரிக்கையை இந்திய உளவுத் துறை மத்திய, மாநில அரசுகளுக்குக் கொடுத்திருக்காது என்று நம்ப இயலவில்லை. ஆனாலும், இன்றைய உலகில் புரட்சிவாதி, கலகக்காரன், போராளி போன்ற சொற்கள் மிகக் கவர்ச்சி உடையவை ஆகிவிட்டன. மெத்தப் படித்தவர்கள்கூட வன்முறைக் கோஷங்களைக் கிளிப்பிள்ளை போலச் சொல்லத் தவறுவதில்லை. அன்பு, நட்பு, அமைதி, நல்லிணக்கம் போன்ற சொற்கள் புழக்கத்திலிருந்து நீங்கி வருகின்றன. அல்லது தவறானவர்களால் தவறானவற்றுக்கு முட்டுக்கொடுக்கத் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஊடகங்கள், கல்விமுறை, அரசியல் சிந்தனை ஆகிய எல்லாமே இந்தக் காட்டுமிராண்டிச் சிந்தனையில் பெரும்பங்கு வகிக்கின்றன. இது மாறவேண்டுமென்றால் அமைதிவாதிகள் மீண்டும் பொதுமக்கள் தொடர்பு ஊடகங்களைக் கையிலெடுத்து இன்னுமோர் அரை நூற்றாண்டுக் காலம் பாடுபடவேண்டியிருக்கும்.

***


அப்படிப்பட்ட அமைதிவாதிகளில் ஒருவர் ஜெயமோகன். தமிழில் இன்றைக்குக் கூர்ந்து கவனிக்கப்படும் எழுத்தாளர், சிந்தனையாளர். இந்த இதழில் வெளியாகியிருக்கும் அவரது நேர்காணல் மிகத் துணிச்சலானது, மாறுபட்டுச் சிந்திக்கத் தூண்டுவது. ‘ஸ்பெல்லிங் பீ', ‘ஜாகரஃபி பீ' என அறிவுத்துறைகளில் கால்தடம் பதிக்கும் அமெரிக்க-இந்திய இளைஞர்களைப் பற்றிய குறிப்புகள் இந்த இதழின் மற்றொரு சிறப்பம்சம். அவர்கள் எல்லோருமே இசை, நீச்சல் என்று பிற முகங்களும் கொண்டவர்களாக இருப்பது நம் குழந்தைகளுக்கு முன்னோடியாகவும் அமைகிறது. தமிழ்ப் படைப்புலகில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆளுமையான இரா.முருகன் எழுத்தாளர் பகுதியில் இடம்பெற்றிருக்கிறார். போரினால் சின்னாபின்னப் பட்டிருக்கும் இலங்கைத் தமிழருக்குச் சின்மயா மிஷன் போன்ற தன்னார்வத் தொண்டர்கள் செய்யும் தன்னலமற்ற தொண்டைப் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இந்தமுறை ஆசிரியர் குழுவை ஆச்சரியத்தில் அமிழ்த்தியது பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிந்த வாசகர் கடிதங்கள். மனித உள்ளத்தைக் காற்றிலேறி விண்ணையும் சாடச் செய்யும் சிறகுப் படைப்புகளை தென்றல் தாளாத ஊக்கத்துடன் வெளியிட்டு வருகிறது என்னும் உண்மையை வாசகர் கடிதங்கள் பிரதிபலிக்கின்றன. தொடர்ந்து வாசியுங்கள், எழுதுங்கள்.


ஜூலை 2009

© TamilOnline.com