தாயார்
ரயில் திருவாங்குடியை நெருங்கி விட்டது. நாகராஜன் கதவுக்கருகே நின்று பெருமூச்சு வாங்கினான். வயிற்றில் பட்டாம்பூச்சி. கையிலிருந்த பெட்டியை ஒருமுறை பார்த்துக் கொண்டான். உள்ளே மூன்று லட்சம் ரூபாய். அப்பாவின் உழைப்பு. சென்னை வங்கியில் அவருடைய இறப்புப் படிவத்தைக் காட்டி, கணக்கை மூடி, கட்டாக எடுத்த பணம்.

வண்டி நின்றுவிட்டது. கல்லூரி மாணவர் கூட்டம் தேனீக்கள் போல வண்டியை மொய்க்க, திணறிக் கொண்டே இறங்கினான் நாகா. இருபத்தி மூன்று வருடங்களுக்குப் பின் திருவாங்குடி. திருச்சியிலிருந்து பதினெட்டு கிலோ மீட்டர். காரிலேயே வந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு ரயில் அனுபவம் தேவையாயிருந்தது.

திருவாங்குடி அதிகம் மாறியதாகத் தெரிய வில்லை. ரயில்நிலையத்திலிருந்து வெளியே செல்ல அமைத்திருந்த மேம்பாலம் இருள் படர்ந்து முள்செடி அடர்ந்து கிடந்ததால் பயணிகள் இன்னும் தண்டவாளத்தில் இறங்கி, உடைக்கப்பட்டிருந்த ரயில்வே வேலி வழியாக ஊருக்குள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.

நாகா மெதுவாக மெயின் ரோடில் நடந்தான். சிவன் கோவிலுக்கு புதிதாகச் சாயம் பூசப்பட்டிருந்தது. மசூதிக்கு வெளியே சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க, ஐஸ் வண்டிக்காரன் சுற்றி வந்து கொண்டிருந் தான். டீக்கடையாக இருந்த நாயர்கடை மிலிட்டரி ஓட்டலாய் மாறியிருந்தது. ''நான் பார்த்திலே அவள் ஒருத்தியைத்தான்...''
பாடலுக்குப் பதில் ''கல்யாணந்தான் கட்டிகிட்டு...'' ஒலித்துக் கொண்டிருந்தது. காலை பத்துமணிக்கு வெயில் குறைவாகவே இருந்ததால் நாகா ஓடிவந்த குதிரை வண்டிக்காரர்களை அனுப்பிவிட்டு வேக மாக நடக்க ஆரம்பித்தான்.

முனிசிபல் ஆஸ்பத்திரி வாசலில் ஒரு நிமிஷம் நின்றான். அம்மாவைக் கடைசி யாகப் பார்த்த இடம். சின்னதாய்க் குத்திய முள்காயம் புரை ஓடி, உடலை விஷமாக்கிக் கொன்று துப்பிய இடம். பதிமூன்று வயதில் தாயைப் பறிகொடுத்த இடம். உடலை எரிக்கக்கூடக் காசில்லாமல் அப்பா கதறியழுத இடம்.

அப்பா... நாகாவிற்குத் தெரிந்த ஒரே உறவு. அம்மா இறந்த ஒரு வருடத்தில் ராஜஸ் தானத்திலிருந்து வந்திருந்த சேட்டிடம் வேலைக்குச் சேர்ந்து வைரம் பட்டை தீட்டும் தொழில் கற்று, அங்கிருந்து பம்பாய் பின்பு லண்டன். சொந்தத் தொழில். நாகாவிற்கு எல்லாமாய் இருந்து கல்யாணம் செய்து வைத்து, நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து முந்தின வருஷம் புற்றுநோயால் கரைக்கப்பட்டவர். இறந்த பத்தாவது நாள் அவரது உடைமைகளைத் திரட்டும் போதுதான் காந்திமதியின் போட்டோவும், அப்பா அவளுக்காகக் கொடுக்கும்படி எழுதப்பட்டிருந்த தொகையைப் பற்றியும் நாகாவிற்குத் தெரிந்தது. அப்பா ரொம்பவும் கெஞ்சியிருந்தார்.

நாகாவின் கையில் பெட்டி கனத்தது. காறி ஒருமுறை துப்பினான். காந்திமதி! எரிச்ச லாக வந்தது நாகாவிற்கு. தெய்வமாய் நினைத்திருந்த அப்பாவின் தொடர்பு. கையிலிருக்கும் மூன்று லட்ச ரூபாயுடன் முடியப் போகிற தொடர்பு. எப்படி ஏற்பட்டது என்றோ, எப்போது ஏற்பட்டது என்றோ அறிய விருப்பமில்லாத தொடர்பு.

"காந்திமதியும் உனக்குத் தாய் அவளைப் பார். அவள் எல்லா விளக்கங்களையும் சொல்வாள்'' என்ற தந்தையின் கடிதத்தை உடனுக்குடன் கிழித்துப் போட்டான். அவர் விருப்பப்படி பணத்தை மட்டும் எறிந்துவிட்டு, இந்த அசிங்கமான உறவை யாருக்கும் தெரியாமல் முடித்துவிட வேண்டும். பாவத்திற்கோ, பச்சாதாபத்திற்கோ இட மில்லை. கடந்த காலத்தை விவரித்து உறவைப் புதுப்பித்துக்கொள்ள அவன் வரவில்லை. பட்ட கடனை முடித்து விட்டு வண்டியேற வந்திருக்கிறான்.

''காந்திமதியம்மா வீடு எது தம்பி?'' சைக்கிளுக்குக் காற்றடித்துக் கொண்டிருந்த பையன் தலையை நிமிர்த்தினான்.

''ஆயா ஊடுங்களா? அங்கன பச்சை பெயிண்டடிச்ச வூடுங்க...'' இடதுபுறம் கைகாட்டினான்.

''ஆயா! யாரோ வந்திருக்காங்க...'' கையில் குழந்தையுடன் பெண் அவனை ஆச்சரிய மாய்ப் பார்த்தாள்.

மெதுவாக ஒரு பெண்மணி இருட்டடைந்த கதவு வழியாக வெளியே வந்தாள்.

நாகா நிமிர்ந்து பார்த்தான். அம்மாவைப் பங்கு கொண்டவள். உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை.

''நான் லண்டனிலிருந்து வந்திருக்கிறேன். இந்தப் பணம் உங்களைச் சேர்ந்தது. கொடுத்துப் போக வந்திருக்கிறேன்.''

அப்பா இறந்த விஷயத்தையோ, தான் அவரது மகன் என்பதையோ சொல்ல வில்லை. அவசியமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.

நடுங்கும் கைகளால் கிழவி பெட்டியை மூடினாள். அவனைப் பார்த்து நகர்த்தினாள். வானத்தை நோக்கி ஒருமுறை கும்பிட்டு விட்டு, குளமான கண்களுடன் திரும்பி வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற நாகா பெட்டியைத் தூக்கிக் கொண்டு மெதுவாகத் திரும்பி நடந்தான்.

''அண்ணே!'' குரல் கேட்டு திரும்பினான்.

''ஆயா இதைக் குடுத்து விட்டுச்சுங்க'' கைக்குழந்தைப் பெண்.

மஞ்சள் துணியால் மூடப்பட்ட சிறிய மூட்டை. வாங்கிப் பெட்டியில் போட்டுக் கொண்டான். கண்காணாத தூரத்தில் போய்த் தூக்கி எறிந்துவிடலாம். அப்பாவிற்கு ஏதாவது தின்பண்டமோ, துணியாகவோ இருக்கலாம். நாகா மறந்து போனான்.

திருச்சியிலிருந்து சென்னை. அங்கிருந்து லண்டன் ஏர்போர்ட்டில் மனைவி, குழந்தை. பிரயாண அயர்ச்சி. தூக்கம் கழிந்து எழுந்த நாகா பெட்டியைத் திறந்தான். மூலையில் மஞ்சள் மூட்டை. என்னதான் இருக்கும் என்ற சுவாரசியத்தில் மூட்டையைப் பிரித்தான்.

அழகான சிகப்பு நிறத்தில் நெய்யப் பட்டிருந்த கம்பளித் தொப்பி. இறந்து போன கணவனுக்கு இரண்டாமவள் அளிக்கும் பரிசு. நாகாவின் புன்னகை அரைகுறையாய் நின்றது. தொப்பிக்குள்ளிருந்து விழுந்த கருப்பு வெள்ளைப் பழுப்புப் படம். கழுத்தில் மாலையுடன் அப்பா. பக்கத்தில் நிற்பது... காந்திமதி! சுற்றி உறவுகள். அப்பா வகைத் தாத்தா, பாட்டி. நேர்பின்னால் பாவாடை தாவணியுடன் நிற்கும் பெண் அம்மா. அம்மாவேதான்.

போட்டோவுக்குப் பின்னால் எழுதியிருந்தது:
பெரியசாமி-காந்திமதி. திருமணநாள் 06.01.1953. தாத்தா, பாட்டி, உறவுகளின் பெயர்கள். அம்மாவின் அடையாளமாய்: வள்ளியம்மாள், மணப்பெண்ணின் தோழி...
போட்டோவைப் பிடித்திருந்த நாகாவின் கை லேசாக நடுங்கியது.

மோஹன்
ஹூஸ்டன்

© TamilOnline.com