ஜூன் 2009: வாசகர் கடிதம்
மே மாத தென்றல் இதழ் பக்கத்துக்குப் பக்கம் பாராட்டுக்குரியது. சை. பீர்முகம்மது அவர்களின் சிறுகதையின் ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். அதிலும் மூன்றாவது பாரா, ‘காளிமுத்துவின் சயன வர்ணனை...' படித்துக் கொண்டே இருக்கலாம், சுகமோ சுகமாக... அதற்குச் சற்றும் குறையாத வகையில் சித்திரம் வரைந்த ஓவியர். ‘சித்திரம் பேசுதடி' என்று அந்த ஓவியரை நேரில் பாராட்ட வேண்டும்.

சிலகாலங்களுக்கு முன்னால் தென்றல் சிறுகதைகளின் ஓவியங்கள் 'ஏனோ தானோ'வென்று இருக்கும். சமீப காலங்களாக ஓவியங்க(ளும்)ள் சபாஷ் போட வைக்கின்றன. அதுசரி, ஓவியரின் பெயரையும் எழுதினால் குறைந்தா போய்விடுவீர்கள்?

இந்திரா காசிநாதன்,
சன்னிவேல்

*
என் மகன், மகள் ஆகியோருடன் சிறிது காலம் வசிப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன். நேற்று தென்றல் இதழை வீட்டுக்கு எடுத்து வந்தேன். அதன் வடிவமைப்பும் உள்ளடக்கமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. ஒவ்வொரு படைப்பும் ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்டுள்ளன. தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. சிறுகதைகள் உயர்ந்த தரத்தில் உள்ளன. கோகுலனின் கவிதை அற்புதம். டாக்டர் வெங்கட்-விஜி சேவைக்கு என் வாழ்த்துகள்.

இதழின் பிற அம்சங்களைப் பற்றி எழுதவில்லையென்றால் அவை தரத்தில் எந்த வகையிலும் தாழ்ந்தவை என்று பொருளல்ல. ஒவ்வொன்றாக எழுதினால் இந்தக் கடிதம் மிகவும் நீண்டுவிடும் என்பதால்தான்.

மோஹன்,
சன்னிவேல், கலி.

*
தென்றல் இதழ் மிகச் சிறப்பாக வெளிவருகிறது. குறிப்பாக கணபதி ஸ்தபதி அவர்களின் நேர்காணல் அற்புதம். எனது பாராட்டுகள்.

அம்புஜம் வெங்கட்ராமன் (மின்னஞ்சல் வழியே)© TamilOnline.com