மூன்றாண்டுகளுக்குப் பிறகு
மதுரையிலிருக்கும் செல்வாவை அழைக்க அவன் "இங்க வா. திருநகர்ல ஆள் இருக்கு. முடிச்சிரலாம்" என்றான். அதற்காக இல்லாவிட்டாலும் வாழ்நாளில் பாதியைக் கழித்த மதுரைக்கு எப்படியும் போவதாக இருந்தேன். மனைவி குழந்தைகளை ஸ்ரீரங்கத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு நண்பன் வண்டியில் தொற்றி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் மதுரைப் பேருந்துகள் நிற்கும் பிளாட்பாரத்தினருகில் இறங்கியதும் "மர்ரை மர்ரை மர்ரை" என்று நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு "சார் ஏஸி விடியோ கோச்சு. நான் ஸ்டாப். ரெண்டு அவர்ல போயிரலாம். நூறு ரூவாய்தான்" என்று சொல்லிவிட்டு காதருகில் "தசாவதாரம் போடுவாங்க" என்றார்கள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக. அவர்களிடம் தப்பித்து அரசுப் பேருந்து ஒன்றில் ஏறிப் படியருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

தங்க நாற்கரத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்னவோ - திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் ஏகமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க முன்பு ஊர்களுக்குள் பயணித்த சாலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க ஹைவே, அல்லது ஃப்ரீ வே மாதிரி சாலை நெடிதாகப் போக, எக்ஸிட் எடுத்து வழியில் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் அமைப்பில் உருவாகிக் கொண்டிருந்த அந்த நால்வழிச் சாலையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதிகக் குலுக்கல் இல்லாமல் விரைந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வீசியடித்த காற்றைச் சுகமாக வாங்கிக்கொண்டு பயணிக்க, மேலூர் தூசியைத் தாண்டி, ஆனை மலை, மீனாட்சி மருத்துவமனை, உயர்நீதிமன்றம் கடந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தே விட்டது.

எண்பதுகளின் இறுதியில் மதுரையில் இருந்தவையெல்லாம், பெரியார் பேருந்து நிலையம், அதையொட்டித் திருவள்ளுவர் பேருந்து நிலையம், அதை விட்டால் அண்ணா பேருந்து நிலையங்கள்தான். பின்பு பெரியாருக்கு எதிராக தனியார் பேருந்து நிலையம் வந்தது. அப்புறம் ஆரப்பாளையம், பழங்காநத்தம் என்று மாற்றி மாற்றி பேருந்து நிலையங்களைக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள். மாட்டுத்தாவணி உருவான புதிதில் அடிமாடு மாதிரி பாவமாக இருந்தபோது பார்த்தது. இப்போது அதன் அபார வளர்ச்சி பிரமிக்க வைத்தது. வெயில் சுட்டெரித்தாலும் திருச்சி போலில்லை. செல்வா "வண்டியனுப்பவா" என்று தொலைபேசியில் கேட்டபோது மறுத்துவிட்டு மஞ்சள் நிறத்தில் கூட்டமில்லாது வந்த தாழ்தளப் பேருந்தில் ஏறினேன். செல்வாவின் அலுவலகம் பைக்காராவில் இருக்கிறது. அதில் தாழ்தளப் பேருந்து நிற்காது என்றும் அதற்கு முந்தைய பழங்காநத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளுமாறும் நடத்துனர் சொன்னார்.

##Caption## தரைப் பாலத்தை ஒட்டிப் புதிதாக ஒரு மேம்பாலம் உருவாகியிருந்தது. சிம்மக்கல் வழியாக, ரயில் நிலையத்தையும், பெரியார் மற்றும் உபரி பேருந்து நிலையங்களையும் கடந்து மதுரைக்கல்லூரிப் பாலத்தின் மேல் சென்றபோது அதன் பிரும்மாண்ட மைதானத்தை - ஒரு காலத்தில் அனுதினமும் ஓடியாடிய மைதானத்தை - ஆவலுடன் பார்த்தேன். யாருமில்லாது கால்வாசி நீர் தேங்கியிருக்க, பன்றிகள் நிறைய இருந்தன. பழங்காநத்தத்தில் இறங்கி அருகிலேயே இருந்த ஆட்டோவிலேறி "பைக்காரா போங்கண்ணே" என்று ஏறிக்கொண்டேன். செல்வாவின் அலுவலக வாசலில் இறங்கிக்கொண்டு அவரிடம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு "வரேண்ணே" என்று உள்ளே செல்ல அவரும் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றார். இதே சென்னையாக இருந்திருந்தால் என் நிலைமையே வேறு மாதிரி!

செல்வாவுக்குத் தொப்பை பெரிதாகியிருந்தது. "என்னடா ஆளு அப்படியே இருக்க?" என்றான். குசலங்கள் விசாரித்துக்கொண்டு வெளியில் வந்து பக்கத்து சாலையோரக் கடையில் டீ வாங்கிக் குடித்தபோது அந்த வெயிலிலும் இதமாக இருந்தது. மனதிற்குள் இளையராஜா "சொர்க்கமே என்றாலும்..." என்று பாடினார். செல்வாவோடு திருநகர் விரைந்து புதிய சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழிருந்த எழுத்தரிடம் விவரங்களைக் கொடுக்க அவர் கடகடவென்று பத்திரத்தை அடித்துத்தர படியேறி அலுவலகத்திற்குச் சென்றோம். மக்கள் பெஞ்ச் ஒன்றில் வரிசையாக அமர்ந்திருந்தனர். அலுவலகம் அமைதியாக இருந்தது. செல்வா பத்திரத்தை உள்ளே கொடுத்தான்.

அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள். ஒருவர் என் விரல்களில் மசி தடவி கைரேகையைப் பத்திரத்தில் பதிந்துக்கொண்டார். செல்வாவும் இன்னொரு நண்பரும் சாட்சி ஒப்பம் இட்டார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொண்டு மறுபடியும் கீழே எழுத்தரிடம் வந்த போது அவர் மிகவும் தயங்கி "பத்திரத்திற்கு நூறு. எழுத்துச் செலவு அம்பது - நூத்தம்பது கொடுங்க ஸார்" என்றார். அதோடு திருச்சியிலிருந்து நான் வந்த செலவுகளெல்லாம் சேர்த்து எனக்கு அதுவரை முந்நூற்றைம்பதுதான் ஆகியிருந்தது. "செல்வா வேற எதனாச்சும் யாருக்காச்சும் கொடுக்கணுமா?" என்று சந்தேகத்தோடு கேட்க, அவன் புழுவைப் போல பார்த்துவிட்டு "வண்டில ஏர்றா" என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்ப, நம்ப முடியாமல் ஏறியமர்ந்து அவன் அலுவலகம் திரும்பினோம்!

மறுநாள் காலை ரயிலில் திருச்சிக்குத் திரும்பிவிட்டேன்.

இன்னும் வரும்...

வற்றாயிருப்பு சுந்தர்

© TamilOnline.com