கனடாவில் முதுமை இனிது!
நான் கனடா வந்து 32 வருடமாகிறது. இங்கே எனக்குப் பிடித்தது முதியோர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்தான். இங்கு வந்து 10 வருடமாகி, 65 வயதும் கடந்து விட்டால் கனடா பென்ஷன் வீடு தேடி வந்துவிடும். எனக்கு 2 வருடத்திற்கு முன் காலில் வலி ஏற்பட்டு நடக்கமுடியாமல் போய்விட்டது. ஹெல்த் கேர் துறைக்குத் தெரியப்படுத்தியதும் ஒரு நர்ஸ் வந்து என்னைப் பரிசோதித்து விட்டு எனக்கு சக்கர நாற்காலி, வாக்கர், குளியல் தொட்டி நாற்காலி எல்லாம் இலவசமாகக் கொடுக்க ஏற்பாடு செய்தார். இவை 1000 கனடியன் டாலருக்கு மேல் இருக்கும். அதோடு எனக்கு குளியல் தொட்டியில் ஏற, இறங்கக் கைப்பிடிகள் எல்லாம் அவர்களே வந்து பொருத்திவிட்டுப் போனார்கள். தினமும் ஒரு பெண்மணி வந்து என் சாப்பாட்டைச் சூடாக்கி, என்னைச் சாப்பிட வைத்து, பின்னர் பழங்களும் நறுக்கிவைத்து விட்டுப் போவார். குளிப்பதற்கு, வேளைக்கு மருந்து எடுத்து வைப்பது என்று எல்லா உதவிகளையும் செய்துவிட்டுப் போவார். தினமும் ஒரு சிகிச்சையாளர் வந்து உடற்பயிற்சிகள் செய்ய வைத்துவிட்டுப் போவார். இப்போது நானே எல்லாம் ஓரளவு பண்ணிக் கொள்ள முடிவதால் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

இதுபோக, முதியோர்களுக்கு வெளியே போய்வர DATS என்ற வேன் சேவை இருக்கிறது. 2 நாளைக்கு முன்பே நாம் போகுமிடம், நேரம், வரும் நேரம் என எல்லாம் சொல்லி விட்டால் அவர்களே அந்த நேரத்திற்கு வந்து, நம்மைக் கைப்பிடித்து அழைத்து வேனில் உட்கார வைத்துவிட்டு கதவைப் பூட்டி பத்திரமாக அழைத்துப் போவார்கள். ஓட்டுனர்கள் எல்லோரும் இனிய சுபாவமாக, அன்போடு பழகுபவர்களாக இருப்பார்கள். இங்கே, நாங்கள் முதியவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.

தவிர அமெரிக்காவிலேயே தென்றல் மாத இதழ் பிரசுரமாவது மிகவும் பிடித்த விஷயம். எனக்கு மாதாமாதம் தபாலில் தென்றல் வந்துவிடுகிறது. எல்லா இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், சமையற் குறிப்புகள், படங்கள், கதைகள் எல்லாவற்றையும் படித்து சந்தோஷப்படுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். தென்றலுக்கு என் நன்றிகள். தென்றல் வாழ்க!

எனக்குப் பிடித்த மற்றொன்று!

தென்றலில் சிக்கில் குருசரணின் பேட்டி படித்தேன். அவரது கச்சேரியைக் கேட்க மிக ஆவலாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக மே 8ம் தேதி அவர் கச்சேரி எட்மன்டனில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த 82 வயதிலும் சிரமப்பட்டு கச்சேரிக்குப் போயிருந்தேன். இரண்டரை மணி நேரம் அற்புதமாகப் பாடினார். நல்ல கூட்டம். அவருடன் 5 நிமிஷம் பேசி என் ஆசியையும் தெரிவித்தேன். அடக்கமும், பண்பும் உள்ள இளைஞர். அவரிடம் தென்றலில் படித்ததால்தான் வந்தேன் என்று சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார். தென்றலுக்கு மீண்டும் நன்றி!

தனம் கோச்சோய்,
பென்சில்வேனியா

© TamilOnline.com