குட்டிமான் போலும் குழந்தை
தலைவியும் தலைவனும் மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு நாள் தலைவியின் வீட்டிற்குச் சென்று அவளை வளர்த்த செவிலித்தாய் கண்டு திரும்பித் தலைவியைப் பெற்ற நற்றாய்க்குத் தான் பார்த்துக் களித்த நிகழ்ச்சிகளைக் கூறுகிறாள். அவற்றைப் பேயனார் என்னும் சங்கப் புலவர் அழகாக ஐங்குறுநூறு என்னும் கவிதைத் தொகுதியில் பாடியுள்ளார். இந்தப் பாடல்கள் இல்வாழ்க்கை நடத்தும் முறையைச் சார்ந்த முல்லைத் திணையில் அடங்கும்.

அவற்றை நாம் காண்போம் இங்கே. குழந்தை, தாய், தந்தை மூவரும் நெருக்கமாகத் தழுவி வாழும் காட்சி இவற்றின் சிறப்பாகும்.

பெற்ற மான்கள் இடையே குட்டிமான்!
செவிலித்தாய் கண்டு மகிழும் முதற்காட்சி நினைத்ததை ஈனும் தேவர் உலகத்தும் பெற அரியதென்று சொல்லி வியப்பது. அது என்ன?

மறிஇடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற,அவர் கிடக்கை! முனிவின்று;
நீல்நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறல்அரும் குரைத்தே
(ஐங்குறுநூறு: முல்லை: 401)

[மறி = குட்டி; பிணை = பெண்; முனிவு = வெறுப்பு; நீல் = நீலம்; வியலகம் = பெரிய இடம்; கவை = அடக்கு, தழுவு; கவைஇய = அடக்கிய, தழுவிய; ஈனும் = கொடுக்கும்; உம்பர் = மேலோர், தேவர்; குரை = பெருமை, பண்பு]

“மான்குட்டி இடையிலே கிடந்த மானும் அதன் பெண்ணும் போலப் புதல்வன் நடுவிலே இருக்க மிகவும் இனியதுதான் அவர்கள் படுத்துக் கிடப்பது! எந்த வகையிலும் வெறுக்கத்தக்கதல்ல! நீலநிறத்து அகன்ற வானத்தில் அடங்கியதும் நினைத்ததை ஈனுவதுமான தேவருலகத்திலும் கூடப் பெறுவதற்கு அரிய பண்பை உடையது!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறாள் செவிலித்தாய்.

பாலூட்டும் தாயை அணைத்த தலைவன்!
இன்னுமொரு பொழுதில் செவிலித்தாய் தான் கண்டதைச் சொல்லுகிறாள்:

வாள்நுதல் அரிவை மகன்முலை ஊட்டத்
தான்அவள் சிறுபுறம் கவையினன் நன்றும்...
(ஐங்குறுநூறு: முல்லை: 404)

[வாள் = ஒளி; நுதல் = நெற்றி; அரிவை = பெண்; சிறுபுறம் = முதுகு; கவையினன் = தழுவினான்]
“ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண்னானவள் மகனுக்கு நகிலில் சுரக்கும் பாலை ஊட்டத் தலைவன் அவளுடைய முதுகைப் பெரிதும் அணைத்தபடி இருந்தான்” என்கிறாள் செவிலித்தாய்.

யாழிசை போலும் இனிய தழுவல்
மேலும் ஒரு காட்சி பாணர் நரம்பில் எழும் இசைபோலும் இனிமையும் பண்பும் உடையது என்கிறாள்:

புதல்வன் கவைஇய தாய்புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்புஉளர் முரற்கை போல
இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!
(ஐங்குறுநூறு: முல்லை: 402)

[கவைஇய = தழுவிய; முயங்கு = தழுவு; நசை = விரும்பு; வதி = இரு; உளர் = மீட்டு; முரற்கை = முரல்கை, ஒலிக்கை, இசை]
“புதல்வனை அணைத்த தாயின் முதுகைத் தழுவித் தலைவன் மிகவும் விருப்பத்தோடு இருக்கும் கிடக்கை, பாணர் யாழ்நரம்பை மீட்டி எழுப்பும் இசை போல் இனிதாகும், மேலும் பண்பும் உடையதாகும்” என்கிறாள் செவிலி.

இங்கே தமிழிசை இராகத்தின் இனிமையும் உள்ளத்தின் கவலையை நீக்கி உயர்த்தும் பண்பும் பாராட்டப் பெறுவதையும் காண்கிறோம்.

இருவரையும் அணைத்த தாய்!
அடுத்துக் கண்ட இன்னொரு காட்சியையும் சொல்கிறாள்:

புதல்வன் கவைஇயினன் தந்தை; மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்!
இனிது மன்ற அவர்கிடக்கை!
நனிஇரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே!
(ஐங்குறுநூறு: முல்லை: 409)

[கவையினன் = அணைத்தான்; மன்ற = மிகவும்; நனி இரும் = மிகப் பெரிய; உறும் = பொருந்தும்]
“புதல்வனை அணைத்திருந்தான் தந்தை; மெல்லிய மொழி பேசும் புதல்வனின் தாயோ இருவரையும் அணைத்திருந்தாள்! மிகவும் இனியது அவர்கள் இவ்வாறு கிடப்பது! மிகப்பெரும் பரப்புடைய இந்த உலக மக்களின் வழக்கோடு அது பொருந்தும்தான்!” என்று பாராட்டுகிறாள் செவிலித்தாய்.

மாலையில் கட்டில்...மார்பிலே புதல்வன்!
அடுத்த காட்சி நம்மை மாலை நேரத்தில் அவர்கள் வீட்டு முன்புறத்திற்கு எடுத்துச் செல்கிறது. அங்கே கட்டிலிலே தலைவன் மார்பில் புதல்வன் ஊரும் காட்சி. பாணன்
யாழில் இசை மீட்டி மகிழ்விக்கிறான்:
மாலை முன்றில் குறுங்காற் கட்டில்
மனையோள் துணைவி ஆகப் புதல்வன்
மார்பில் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே!
மென்பிணித்து அம்ம, பாணனது யாழே!
(ஐங்குறுநூறு: முல்லை: 410)

[முன்றில் = முன்வீடு; ஒத்தன்று = ஒத்தது]
“மாலையில் வீட்டு முன்புறத்தில் குட்டைக்கால் கொண்ட கட்டிலிலே மனைவி துணையாக அமர்ந்திருக்கப் புதல்வன் தன்னுடைய மார்பிலே ஊர்ந்துகொண்டு எழும்பும் மகிழ்ச்சிச் சிரிப்பு இனிய மாலைப் பொழுதிற்கு ஒத்திருந்தது. அதனோடு பாணனது யாழ் எழுப்பும் இசையும் மெல்லிய பிணிப்போடு இருந்தது, அம்ம!” என்கிறாள் செவிலி.

வீட்டுக்கு விளக்காகத் திகழும் தாய்!
இவ்வளவு இனிமையாகக் குடும்பம் நடத்தும் தலைவி மனைக்கு விளக்காக ஒளிறுகிறாள் என்றும் சொல்கிறாள்:

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்கு விளக்காயினள் மன்ற, கனைப்பெயல்
பூப் பல அணிந்த வைப்பின்
புறவுஅணி நாடன் புதல்வன் தாயே

[பாண்டில் = விளக்கு;மன்ற = மிகவும், கனைப் பெயல் = மிகுமழை; வைப்பு = இடம்; புறவு = காடு]
“பெருமழை பொழிந்து பல பூக்களை அணிந்த இடமுடைய காடு நிறைந்த நாட்டில் வாழும் தலைவனின் புதல்வனுக்குத் தாயான இவள் ஒளிரும் சுடருடைய விளக்கின் செஞ்சுடர் போலத் தன்னுடைய மனைக்கு விளக்காகப் பெரிதும் இருக்கிறாள்!”
ஆண்டாளும் திருப்பாவையிலே யசோதையாரைக் “கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி அசோதாய்!” என்று போற்றுவதும் இங்கே நினைவு கூரத்தக்கது.

இவ்வாறு சங்கக்காலத்திலே கணவன் மனைவி குழந்தை அனைவரும் நெருக்கமாகத் தழுவிப் பழகி உலகம் போற்ற வாழ்ந்து திகழ்வதைப் பேயனார் கவிதைகளால் அறிகிறோம்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com