தென்றல் பேசுகிறது...
2000 ஆண்டில் இணையம் அசுர வடிவம் எடுத்தபோது அது பல செங்கல்-காரைக் கடைகளைக் காணாமற்போகச் செய்துவிடும் என்று முதலில் யாரும் நம்பவில்லை. இணையவழிப் பொருள் விற்பனை அங்கீகரிக்கப்பட்ட வழியாகவே ஆனது. ஆனால் இப்போதுள்ள பொருளாதார மந்தநிலையும் பல அங்காடிகளுக்குப் பூட்டுப் போட்டுவிட்டது சற்றே அதிரச் செய்வதாக உள்ளது. வரும் நாட்களில் கடை வளாகத்துக்குள்ளேயே பொருளை அல்லது சேவையை நுகர்வதற்கு அவசியமுடையதான ஹோட்டல்கள், அழகுநிலையங்கள், எரிபொருள் வழங்கு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள் போன்றவை போக, மற்றவை எல்லாம் இணையவழிக் கடைகளாகிவிடுமோ எனக் கருதத் தோன்றாமலில்லை. இதன் சமுதாய விளைவுகள் என்ன என்பதும் சிந்திக்கத் தக்கது.

***


வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்து விட்டார் என்பது நம்பக் கடினமாக உள்ளது. ஸ்ரீலங்கா மண்ணில் கணக்கற்ற ஆண்டுகளாக இருந்தும் சம உரிமை இல்லாமல், நான்காந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்ட தமிழர்களின் உரிமைப் போராளியாகத் தொடங்கிய வீரமகன் அவர் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், அவர் தொடுத்த போர் தம்போன்றவர் மீதும், தம் மக்கள் மீதுமே கொலைவெறியாக மாறியதையும் மறக்க முடியாது. “ஸ்ரீலங்காவுக்குத் திரும்பி வாருங்கள், நாட்டைப் புனரமைக்கலாம்” என்று ராஜபக்சே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விடுத்திருக்கும் அழைப்பு பாராட்டத் தக்கது. அதற்கு முதல்படியாக, ஸ்ரீலங்கா மண்ணிலேயே இடம்பெயர்ந்தவர்களாகச் சொல்லொணாத துயரங்களில் ஆழ்ந்திருக்கும் தமிழர்களுக்கு அவர் நம்பிக்கை தரும்படியாக அவரது அரசு நடந்து காட்ட வேண்டும். இருதரப்பினரும் பகைமையைப் புதைத்துவிட்டு தம் வாழ்வையும் தம் நாட்டையும் மீட்டெடுத்துச் செழுமைப்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கை ஏற்படும்வரை உலக நாடுகள், குறிப்பாக இந்தியா, நடுநிலைமையோடு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். உலகத் தமிழர்கள் தத்தம் அரசுகளைத் தொடர்ந்து இதற்காக வற்புறுத்த வேண்டுவது தலையாய கடன். இந்த இதழில் வெளியாகியிருக்கும் சின்மயா மிஷன் தொண்டர் கௌரி மகேந்திரனின் நேரடி ரிப்போர்ட் மனதை உருக்குவதாக இருக்கிறது. அத்தோடு ‘Doctors without Borders' என்னும் பன்னாட்டு அமைப்பும் மெச்சத்தக்க சேவையை ஸ்ரீலங்காவில் செய்துவருகிறது. இந்த அமைப்புகளுக்குத் தென்றல் வாசகர்களும், சேவை நிறுவனங்களும் பெரிய மனதோடு உதவ வேண்டும்.

***


பத்திரிகைகளுக்குப் படம் போடுவதில் தனக்கென அழகார்ந்த ஒரு பாணியை அமைத்துக் கொண்டவர் மணியம் செல்வன். அவரது கோடுகளும் வண்ணப் பயன்பாடும் பார்த்தவுடனே நம்மை ம.செ. என்று முணுமுணுக்க வைக்கும் சிறப்புக் கொண்டவை. படத்தில்கூட வன்முறையும் எதிர்மறை எண்ணங்களும் வரக்கூடாது என்ற அவரது கருத்தோடு தென்றலுக்கு முழு உடன்பாடு உண்டு. மணியம் செல்வனின் நேர்காணலும் இதில் வெளியாகியுள்ள அவரது படைப்புகளும் (அட்டைப்படம் உட்பட) தென்றலுக்குப் பெருமை சேர்ப்பன. தாமும் சரி, தமது மாணாக்கர்களும் சரி நடனக் கலையின் உச்சத்தை எட்ட வேண்டும் என்ற முனைப்போடு எப்போதும் செயல்படுபவர் ‘அபிநயா டான்ஸ் கம்பெனி’யின் மைதிலி குமார். அதில் சமரசங்கள் கிடையாது. நூறாவது அரங்கேற்றம் என்ற இலக்கைத் தொடும் மைதிலி குமாருடனான நேர்காணல் இந்த இதழை அலங்கரிக்கிறது. போட்டிச் சிறுகதைகள் , பா. ராகவனின் ‘யாளிமுட்டை’ , சாதனையாளர் பி. வெங்கட்ராமன் பற்றிய கட்டுரை என்று பல சுவையான அம்சங்களுடன் இந்த இதழ் உங்கள் கைகளை எட்டுகிறது.

***


தேசிய அளவில் ஸ்பெல்லிங் பீ போட்டியில் முதலிடம் பெற்ற காவ்யா சிவசங்கருக்கும், அறிவியல் தேனீ போட்டியில் இரண்டாவது இடம் பெற்ற அர்ஜுன் கந்தசாமிக்கும் எமது வாழ்த்துக்கள். உங்கள் பகுதியில் இருக்கும் சாதனையாளர்களைத் தென்றல் வழியே தமிழ்கூறும் உலகுக்கு அறிமுகப்படுத்த விரும்பினால் அவரைப் பற்றிய சிறு குறிப்பை எங்களுக்கு அனுப்புங்கள். நீங்களே நேர்காணல், கட்டுரைகள் முதலியவை எழுத வல்லவரானால் தென்றலோடு தொடர்பு கொள்ளுங்கள். வட அமெரிக்காவின் பிரத்தியேகத் தமிழ் மாத இதழை மேலும் சிறப்புடையதாகச் செய்வதில் உங்கள் பங்கும் இருக்கட்டும்.

ஜூலை மாதம் 3-5 தேதிகளில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவையின் (FeTNA) ஆண்டுவிழா, அடலாண்டா தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் அட்லாண்டாவில் நடைபெற உள்ளது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்!


ஜூன் 2009

© TamilOnline.com