டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா
ஏப்ரல் 12, 2009 அன்று டல்லாஸ் ஃபோர்ட்வொர்த் ஹிந்து ஆலயத்தில் தமிழ்க்கலை விழா நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஞாயிறுக்கிழமை தோறும் தமிழ் மற்றும் சமய வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழ் வகுப்புகள் படித்தரம் 1, 2, 3 காலை 11 மணி முதல் 12 மணிவரை நடைபெறுகின்றன.

இங்கு தமிழ் பயின்ற குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒகாய் இளைஞர் மையத்தில் நடைபெற்றது. விழாவை பரணிதரன் ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். குழந்தைகள் பாடிய கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. முதலில் லெவல் 1 குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுத்தமான உச்சரிப்புடன் குழந்தைகள் பாடிய பாடல்களும், ஸ்லோகங்களும் அனைவரையும் கவர்ந்தன. லெவல் 2 குழந்தைகள் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற தலைப்பில் நாடகம் ஒன்றை நடத்தினர். அந்நாடகத்தின் வாயிலாக திருக்குறள், பழமொழிகள், நீதிகள், உறவுகள் என்று அனைத்தையும் கூறி அசத்தினர். லெவல் 3 மாணவ, மாணவிகள் கதைகள், பாடல்கள், ஆத்திசூடி போன்றவற்றை எடுத்துரைத்தனர். அவர்களின் உச்சரிப்பும், ஆர்வமும் அவர்களுக்கு தமிழின் மீதுள்ள நாட்டத்தைப் பறை சாற்றின. நிகழ்ச்சியின் முடிவில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் நொறுக்குத் தீனி, பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

பரணிதரன் ராதாகிருஷ்ணன்,
டல்லாஸ் டெக்ஸாஸ்

© TamilOnline.com