தென்றல் பேசுகிறது
எங்கு திரும்பினாலும் ‘ஒபாமாவின் 100 நாட்கள்' என்ற ஒலியே கேட்கிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே, தாமே ஒரு பெரும் மாறுதலாக அரியணை ஏறியவர் ஒபாமா. அவரது பதவி ஏற்புரை கேட்கச் செவிக்குள் தேனூற்றுவதாக இருந்தது. ஆனால், ஒபாமா என்ன சாதித்தார் என்று அவரவர் பார்வையில் விவாதித்து மதிப்பெண் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நூறு நாள் என்பது ஒரு தேசத்தின் வாழ்வில் ஒரு துளியில் சிறு கூறு. நான்காண்டுப் பதவிக் காலத்தில் சற்றேறக் குறைய 15ல் ஒரு பங்கு. தான் கூறிய திசையில் அடியெடுத்து வைத்திருக்கிறாரா ஒபாமா என்பது மட்டுமே கணிக்கத் தக்கது. அந்தக் கேள்விக்கு ‘ஆமாம்' என்பதுதான் விடையாகக் கிடைக்கும். தொழில்துறை மறு தூண்டலுக்கு $787 பில்லியன், வங்கிகளைக் காப்பாற்ற $1 டிரில்லியன் ஆகிய திட்டங்கள் அதலபாதாளத்தில் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. மருத்துவச் செலவைக் குறைப்பதும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குள் மிக அதிகமானவர்களைக் கொண்டு வருவதும் அவரே ஏற்றுக்கொண்ட பிற சவால்கள். இந்த நூறு நாட்களில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணம் என்ன என்று கேட்டதற்கு, “ஒரே நேரத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்க வேண்டியனவாகத் தோன்றுவதுதான்” என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், இவற்றைத் தீர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையும் அவரிடம் ஒளிவீசுவது தான் மக்களுக்குக் கிட்டும் மின்னல் கீற்று.

பாகிஸ்தானில் லாஹூரை நோக்கித் தாலிபான்கள் முன்னேறுவது குறித்தும் ஒபாமா கவலை தெரிவித்திருக்கிறார். வறுமை, பாதுகாப்பின்மை ஆகியவற்றில் அல்லலுறும் பாகிஸ்தானியப் பொது மக்களை தாலிபான் தன் பக்கம் சாய்ப்பது எளிது. அதுகுறித்து அமெரிக்காவைவிட அதிகம் கவலைப்பட வேண்டியது இந்தியா தான். ஆனால், இந்திய நெருப்புக் கோழி வழக்கம் போல மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு, மிகப் பத்திரமாக உணர்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மும்பையில் இரண்டு நாட்களுக்கு மேல் இரவு பகலாகக் கண்ணில்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்த தீவிரவாதிகள் கூட்டத்தில் பிடிபட்ட ஒரே ஒருவனான அஜ்மல் கசபின் வயது என்ன, அவனுக்குச் சிறையில் என்ன வசதிகள் செய்துகொடுக்கலாம், பிற உரிமைகள் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசு, சொந்தப் பிரஜைகளுக்குக் கொடுக்கும் மரியாதை உலகறிந்ததே. “எனக்குச் சிறையில் சுரைக்காய், அஜ்மல் கசபுக்கு தந்தூரி சிக்கன்!” என்று வருண் காந்தி அங்கலாய்த்தால் அதில் உண்மை இல்லாமலில்லை.

2002-06 காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து சுவிஸ் வங்கிகளுக்குத் தப்பிச் சென்றிருக்கும் கருப்புப் பணம் ஏறக்குறைய $1.6 டிரில்லியன் (ரூபாய் 51 லட்சம் கோடிகள்) எனப்படுகிறது. இதை யாருடையது என்று கேட்கவோ, திருப்பிக் கொண்டு வரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லாத இந்திய மத்திய அரசு, போஃபார்ஸ் ஊழலில் ‘ரெட் கார்னர் நோட்டிஸ்' தரப்பட்டிருந்த சோனியா குடும்ப நண்பரான குவாட் ரோச்சியை இன்டர்போலின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டது. அவரது சுவிஸ் வங்கிக் கணக்கைச் சுதந்திரமாக அவர் அனுபவிக்கலாம் என்று முன்னமேயே அதைத் திறந்து விட்டது. ஆக, சுரண்டல், ஊழல், கறுப்புப் பணம், அரச குடும்பத் தொடர்பு -- இவற்றுக்கு மட்டுமே பரிபூரண சுதந்திரம் உண்டு என்கிற எண்ணம் வலுவடைவது எந்த ஜனநாயக நாட்டுக்கும் நல்லதல்ல.

விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் நடுவேயான குண்டுப் பொழிவில் வீடு, வாசல், உறவு, உணவு, உறக்கம் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் தமிழருக்கு வேண்டியது உடை, உணவு, மருந்து, நீர் ஆகிய அடிப்படைத் தேவைகள். அவர்களின் தேவையுணர்ந்து அங்கே அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆன்மநேயத்துடன் செயல்படும் நிறுவனம் சின்மயா மிஷன். அதன் பணிகளைப் பற்றிய ஒரு கட்டுரை இந்த இதழில் வெளிவந்துள்ளது. ஆன்மீகத்தையும் மனிதநேயத்தையும் பண்புகளையும் தனது பரிச்சயமான குரலில் பட்டி தொட்டிகளிலும் ஒலிக்கச் செய்த தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் மாறுபட்ட நேர்காணலும், வானொலியில் ‘தமிழ் அமுதம்' பரிமாறும் பாலநேத்திரம்-விஜி தம்பதியினரின் நேர்காணலும் இந்த இதழின் சிறப்புகள். போட்டிச் சிறுகதைகள், கவிதை என்று பல்சுவை விருந்தும் வருகிறது. சுவைத்துப் பாருங்கள்.

வாசகர்களுக்கு மே தின, அன்னையர் தின வாழ்த்துக்கள்!


மே 2009

*****


தென்றல், ஏப்ரல் 2009, இதழில் வெளியான ‘அர்த்தங்கள் மாறும்' சிறுகதையுடன் பக்கம் 37ல் வெளியாகியிருக்கும் படம் ‘அக்ரஹாரத்தில் கழுதை' திரைப்படத்தில் நடித்த டாக்டர் எஸ். கோபாலி அவர்களைக் கொண்ட ஸ்டில் என்று அறிய வருகிறோம். இந்தக் கதையுடன் இந்தப் படத்தை வெளியிட்டமைக்கு வருந்துகிறோம்.

© TamilOnline.com