பாரதிய பாஷா பரிஷத் விருதுகள்
திரைப் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்ட வைரமுத்துவின் நீண்ட மொழிச்சேவையை கௌரவிக்கும் விதமாக கொல்கத்தாவில் உள்ள இந்திய மொழிக் கழகம், சாதனா சம்மான் விருதினை அறிவித்துள்ளது. இக்கழகம், ஒவ்வொரு ஆண்டும் 14 மொழிகளில் சிறந்து விளங்குவோரைத் தேர்வு செய்து விருதுகளை அளித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழுக்கான இவ்விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி ஆகியோர் முன்னரே இந்த விருதினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெறுபவரின் படைப்புகளைப் பல்வேறு இந்திய மொழிகளில் பரிஷத்தே மொழிபெயர்த்து வெளியிடும் என்பது விருதின் சிறப்பம்சம்.

அதே போன்று பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் - இளைஞர்களுக்கான தேசிய இலக்கிய விருது - தமிழுக்காக எழுத்தாளர் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக் கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளதுடன், பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் குழு மூலம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. ஸ்ரீராம் எழுத்தாளர், பத்திரிகையாளர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். 'மஞ்சரி'யில் இதழாசிரியராகப் பணியாற்றிய இவர், தற்போது விகடன் பிரசுரத்தின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். 11,000 ரூபாய் பொற்கிழியும் நினைவுப் பரிசும் கொண்ட இவ்விருது, ஏப்ரல் 18ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com