மகாத்மா காந்தியை 'பனியா' எனக் காண்பதைப் போல!
மேதைகள், தியாகிகள், அரசியல் ஞானிகள், சமூகப் போராளிகள் என்பவர் அவர்தம் சாதித் தலைவர்களாக மட்டும் அடையாளம் காட்டப்படுவது, முன்னிறுத்தப்படுவது, சமகால இந்திய அரசியல் சூழலின் வீழ்ச்சி. மகாத்மா காந்தியை 'பனியா' எனக் காண்பதைப் போல!
- நாஞ்சில்நாடன்

நான் ஐ.ஐ.டி.யில் படித்து முடித்தாலும் மற்ற மாணவர்களைப் போல் ஏதாவது பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும். அல்லது வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. எனக்குப் பிடித்தமான இசைத்துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்காக அமெரிக்காவில் உள்ள பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். 70 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் இசைக் கலைஞர்களுடன் இசை கற்றேன். இசையைத்தான் சுவாசித்தேன். படித்து முடித்த பிறகு குறும்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினேன். மனிதாபிமான உணர்வு இருந்தால்தான் இதுபோன்று குறும்படங்களுக்கு வேலைசெய்ய முடியும். நாம் நமது கடமையைச் செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்கக் கூடாது என்ற கருதுபவன் நான். எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். பணம் எனக்கு பெரிதல்ல. இசைதான் முக்கியம். கலைதான் முக்கியம். கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைக்க தயாராக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பெர்க்கலி இசைக்கல்லூரியைப் போல உலகத்தரமான ஒரு இசைக் கல்லூரியை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு உள்ளது.
- பிரசன்னா, கிடார் இசைக்கலைஞர்

நான் சினிமாவில் 87 நடிகையருடன் டூயட் பாடியிருக்கிறேன். நடிப்பின்போது 157 பேருக்குத் தாலி கட்டியிருக்கிறேன். ஆனால், ஒரு நிமிடம்கூட காதலுக்கோ, காமத்திற்கோ மனம் அலை பாய்ந்ததில்லை. காரணம், படிக்கும்போதே விவேகானந்தரின் சிந்தனைகளை மனதில் ஏற்றிருந்தேன்.
- நடிகர் சிவகுமார், கல்லூரி மாணவர்களிடம்...

தமிழுக்கு வளம் சேர்க்க லத்தீன் அமெரிக்க, போஸ்ட் மாடர்னிஸ்ட், அதி யதார்த்த, மந்திரவாத அல்ட்டல்கள், முகமூடிகள், தோரணைகள் தேவையில்லை. ஒவ்வொரு தமிழ் வாழ்வும் அதன் இயல்பான வெளிப்பாட்டிலேயே இதுகாறும் காணாத தனித் தன்மையைத் தந்துவிடும்.
- வெங்கட் சாமிநாதன், விமர்சகர்

இலக்கியத்தின் அப்போதைக்கப்போதுள்ள நாடித் துடிப்புகளைத் தொட்டுப் பார்த்து இனம் காண்பதில் திறனாய்வின் பங்கு கணிசமானது. தமிழில் சென்ற தலைமுறையில் க.நா.சு., சி.சு.செல்லப்பா, நகுலன்., வெங்கட் சுவாமிநாதன் போன்றவர்கள், மலையாளத்தில் குட்டி கிருஷ்ணமாரார், ஜோசப் முண்டசேரி, குப்தன் நாயர் போன்றவர்கள் வகித்த பங்கு சிறப்பானது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அதீதமாய் நிஜமான இலக்கியத்தைத் தேடும் ஆக்கப்பூர்வமான அத்தகைய முயற்சிகள், பரவலாக இல்லாவிடினும், அபூர்வமாகவாவது அண்மைக் காலத் தமிழ், மலையாள மொழிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
- நீல.பத்மநாபன்

கலப்படம் செய்யவே முடியாது என்று நினைத்திருந்த பழங்களில்தான் இன்று அதிகமான அளவு கலப்படமும் உடற்கேடு விளைவிக்கும் பொருட்களும் கலக்கப்படுகின்றன. அதிலும் காய்களாகப் பறிக்கப்பட்டு ரசாயனம் கலந்து பழங்களாக மாற்றப்படுகின்றதே அதிகம். காசு கொடுத்து நாம் வாங்கும் பெரும்பான்மை பழங்கள் வெறும் சக்கைகளே. தரமான, சுவையான பழங்களை வாங்க வேண்டும் என்றால் அதன் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பலமடங்கு பெருகிவிட்டதோடு கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.
- எஸ்.ராமகிருஷ்ணன்

சமூகத்தில் கல்வியறிவு பெறுவது அதிகமாகும் போதுதான் குற்றங்கள் குறையும். சீர்திருத்த இல்லத்திற்கு வரும் நாற்பது சதவீதம் பேர் படிப்பறிவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மறுமலர்ச்சி பெறவே கல்வி தருகிறோம். இல்லவாசிகளை மாற்றுவதற்கு புத்தகங்கள்தான் பேருதவியாக இருக்கின்றன. இல்லவாசி ஒவ்வொருவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
- ஆர். நடராஜ், ஐ.ஜி., சிறைத்துறை

© TamilOnline.com