இவர்கள் இப்படித்தான்
பொதுவாக நமக்கு அரசியல் மீது அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை; அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பல்வேறு அரசியல்வாதிகள் தங்களது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைக் காட்டும் போதெல்லாம் நாம் அனைவரும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு 'இவர்கள் இப்படித்தான்' என்று திட்டிக்கொண்டோ அல்லது தலைவிதியை நொந்துகொண்டோ அடுத்த வேலையைப் பார்ப்பது என்ற பழக்கத்தைப் பல ஆண்டுகளாகக் கொண்டிருக்கிறோம். வேறு விதமாகச் சொல்லப் போனால் அரசியல்வாதிகளின் எந்தச் செயலைக் கண்டும் நாம் ஆச்சரியப்படுவதே இல்லை.

தமிழகத் தேர்தலைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, அரசியல்வாதிகள் எவ்வளவு தரம் தாழ்ந்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது. நேற்றுவரை ஒன்றாக இருந்துவிட்டு இன்று புள்ளிவிபரங்களுடன் தமது முந்தயை தோழமைக் கட்சிகளின் குறைகளைப் பட்டியலிடுவது முன்னெப்போதையும்விடப் பெரிய கேலிக்கூத்தாகிவிட்டது. அதேபோல் வாக்குறுதிகளை அள்ளிவீசும் கொடுமையும் காண, கேட்கச் சகிக்கவில்லை. மக்களை முட்டாள்கள் என்று நினைப்பதை மறைக்கக் கூடத் தேவையில்லை என்று அரசியல்வியாதிகள் நினைக்கிற நிலை வந்துவிட்டது.

ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று: படித்தவர்கள், ஒரு கட்சி அமைத்து, 'இந்தத் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பிற்காலத்துக்கான அடிக்கல் நாட்டுவோம்' என்ற தொலைநோக்குடன் சில தொகுதிகளில் போட்டியிடும் 'லோக் பரித்ராண்' கட்சிதான். அரசியலைச் சாக்கடை என்று வர்ணித்துவிட்டுச் சுத்தம் செய்யாமல் அதன் நாற்றத்தைக் குறைகூறுவது சரியல்ல என்பது எனது எண்ணம். ஏறத்தாழ அந்நிலைக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாளைய உலகம் உங்களுடயது. பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்

***


தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் காவேரி மற்றும் பல பிரச்சினைகளால் சந்தேகத்துடனேயே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். இதனால் இரு மாநிலத்தாருக்கும் இந்தியாவுக்கும் பல வகையிலும் இழப்பே. சென்னையிலும் பங்களூரிலும் பெரும் பொருட்செலவில் சர்வதேச விமான நிலையங்கள் - இழப்பையும், பணச் செலவையும் அதிகரிக்கும் காலதாமதங்களுடன் - கட்டப்படுகின்றன. இரு மாநகரங்களுக்கும் 400 கிமீ தூரம்தான். இரண்டுக்கும் நடுவில், உண்மையில் சர்வதேசத் தரத்தில் ஒரு பெரிய விமான நிலையத்தைக் கட்டி, சென்னைக்கும், பங்களூருக்கும் இடையே விரைவு நெடுஞ்சாலை (freeway) ஒன்றும் கட்டினால் எல்லோருக்கும் நல்லது. செய்வார்களா?

***


பிரிவு எந்த நிலையிலும் எளிதானதல்ல. எதிர்பாராத பிரிவுகளை எதிர்கொள்ளுதல் இன்னமும் கடினம். தென்றலின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த மணி மு. மணிவண்ணன் அவர்களும் தென்றலும் அப்படிப்பட்ட ஒரு பிரிவை எதிர்கொள்கிறோம். நண்பர் மணிவண்ணனுக்குத் தென்றலின் சார்பிலும், எனது சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் சந்திப்போம்,

பி. அசோகன்
மே 2006

© TamilOnline.com