மூட்டு வலி
அறிகுறிகள்
இது முக்கியமாக முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு, தோள் மூட்டு, முதுகு போன்ற பெரிய மூட்டுகளையும் கைவிரல் மூட்டுகளையும் தாக்குகின்றது. ஒரு மூட்டு மட்டுமோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்படலாம். இது பெரும்பாலும் எந்தவித விபத்தோ பெருந்துயரோ (trauma) இல்லாமல் ஏற்படுகிறது. குறிப்பாகச் சில செயல்கள் இந்த வலியை அதிகப்படுத்தும். முழங்கால் மூட்டு வலி இருப்பவர்களுக்குப் படி ஏறுதல், இறங்குதல் கடினம். தரையில் இருந்து எழுவது மிகவும் கடினம். மற்றபடி நடக்க, நிற்க முடியும். நாளாக ஆக அதுவும் பாதிக்கப்படலாம். குறிப்பாகக் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது மூட்டுகள் அதிகமாக இறுகிவிடும். அந்த மூட்டுகளை அசைத்தால், இறுக்கம் விலகும். இடுப்பு வலி இருப்பவர்களுக்கு நடப்பதும், அமர்ந்து கொள்வதும் கடினமாகும். தோள் வலி இருப்பவர்களுக்குத் தலை பின்னுவது, சட்டை அணிவது போன்ற அன்றாட வேலைகள் கடினமாகலாம். இதையும் தவிரக் கைவிரல்களில் உள்ள சின்ன மூட்டுகளும் பாதிக்கப்படலாம். தீவிரம் அதிகமாகும்போது வீக்கம் ஏற்படலாம். வலி, இறுக்கம், செயல்பாடு குறைதல், வீக்கம் ஆகியவை முக்கிய அறிகுறிகள். இவை தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருக்குமானால் மருத்துவரை நாட வேண்டும். x-கதிர் மூலம் தேய்மானத்தைக் கண்டுபிடிக்கலாம். ஒரு சிலருக்கு ஆர்த்ரோஸ்கோபி பரிசோதனை தேவைப்படலாம். இது ஒரு சின்ன கேமிரா மூலம் மூட்டுகளைப் படம் பிடிப்பது.

யாரைத் தாக்கும்?
##Caption##பெரும்பாலும் வயதானவர்களுக்கு, குறிப்பாக 50-60 வயது ஆனவர்களுக்கு, இந்த நோய் பெருத்த உபாதை தரும். இவர்களின் நடமாட்டம் பெரிதும் பாதிக்கப்படும். வயது ஆக ஆக இது அதிகரிக்குமே அன்றிக் குறைவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு 30 வயது முதலே பதம் பார்க்கலாம். உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். உடற்பயிற்சி செய்யாதவர்களையும் இந்த மூட்டு வலி சிறு வயதிலேயே தாக்கக்கூடும். வீட்டு வேலை, வெளி வேலை என்று செய்தாலும் தகுந்த சரியான உடற்பயிற்சி செய்யாவிட்டால் தசைநார்கள் வலுவிழந்து, எலும்புகளும் தேயலாம். இதைத் தவிர வேறுவித ஆர்தரைடிஸ் மூலம் மூட்டுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் ஏற்பட வாய்ப்பு உண்டு. பரம்பரையில் வரக்கூடிய ருமடாயிடு ஆர்த்ரைடிஸ், தோல்வகை நோயுடன் காணப்படும் ஸோரொயாடிக் ஆர்தரைடிஸ், சூலை (Gout) போன்ற மூட்டு வலிகளினால் பாதிக்கப்பட்டவருக்கும் ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் ஏற்படலாம். குறிப்பிட்ட சில தொழிலைச் செய்பவர்களுக்கு தொழில் மூலம் மூட்டுகள் பாதிக்கப்படலாம். கணினி அல்லது தட்டச்சுச் செய்பவர்களுக்கு விரல்கள் பாதிக்கப்படலாம். பாரம் தூக்குபவர்களுக்கு முதுகு மற்றும் முழங்கால் முட்டு பாதிக்கப்படலாம். நீரிழிவு, தைராயிடு மற்றும் கால்சியம் பாதிப்பு இருப்பவர்களுக்கும் இந்த வகை ஆர்த்ரைடிஸ் ஏற்படலாம்.

நோயின் தீவிர வகைகள்
மூட்டுகளில் தேய்மானம் அதிகமாகும் போது, நோயின் பாதிப்பு அதிகமாகிறது. மூட்டுகளின் இடையில் இருக்கும் குருத்தெலும்புப் பகுதி தேய்ந்து குறைவதால் எலும்புகளிடையே உராய்வு ஏற்படலாம். மூட்டுகளுக்கு ஒரு மென்மையான குஷன் போல இருக்கும் குருத்தெலும்பு இதில் பாதிக்கப்படுகிறது. மூட்டில் வந்து இணையும் தசைகளும், தசை நார்களும் வலுக் குறைந்து அதனால் பாதிப்பு அதிகமாகும். முற்றிய நிலையில் மூட்டுகள் அறவே செயல்படாமல் போய்விடும்.

தடுப்பு முறைகள்
சிறுவயது முதலே மூட்டுகளுக்கு பலத்தை அதிகப்படுத்த வேண்டும். செய்யும் எதையும் மூட்டுகளுக்கு அதிகத் தேய்மானம் ஏற்படாமல் செய்ய வேண்டும். குறிப்பாக, குனிந்து செய்யும் வேலைகளை, முழங்கால் முட்டி மடித்து செய்வது முதுகுப் பகுதியைக் காக்கும். தகுந்த உடற்பயிற்சி மூலம் மூட்டுகளை இணைக்கும் தசைகளையும் தசைநார்களை பலப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி அதிகம் செய்பவர்களும் மூட்டுகளில் ஏற்படும் தாக்கத்தை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். உதாரணத்திற்கு வேக நடை செய்பவர்கள், வேறுவிதத்தில் இதயத்துடிப்பை அதிகரிக்கும் உடற்பயிற்சியுடன் மாற்றிச் செய்தால் முழங்கால் மூட்டு பாதிப்பைக் குறைக்கலாம். Treadmill நடையுடன் Elliptical செய்வதையும் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். தேவையான அளவு சுண்ணாம்புச் சத்து மற்றும் வைடமின் D உட்கொள்ள வேண்டும். பால், தயிர் மற்றும் சீஸ் அல்லது மாத்திரை வழியே இவற்றை உட்கொள்ளலாம். சராசரி மனிதனுக்கு 1200 முதல் 1500 மில்லி EQ கால்சியம் தேவை. 400 முதல் 800 IU வைடமின் D தேவை. சூரிய வெளிச்சம் குறைந்து காணப்படும் குளிர் காலங்களில் வைடமின் D அளவு குறைவாகவே கிடைக்கிறது. அதனால் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது.

##Caption## தீர்வு முறைகள்
இதை முற்றிலும் குணமாக்க முடியாது. ஆனால், வலி குறைப்பு முறைகளும் செயல்பாடு அதிகரிக்கும் முறைகளும் நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன. மேற்கூறிய தடுப்பு முறைகளைக் கையாள்வதின் மூலம் நோயின் தீவிரம் குறையவும் வாய்ப்பு உள்ளது. வலியினால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகும்போது மாத்திரைகள் உதவுகின்றன. Tylenol எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்லது. Motrin அல்லது Advil போன்ற மாத்திரைகளும் வலி நிவாராணம் தர வல்லன. ஆனால் இந்த வகை மாத்திரைகளைத் தினப்படி உட்கொண்டால் பின்விளைவுகள் அதிகம். குறிப்பாக வயிற்றுப் புண், இரத்தம் கசிதல், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படலாம். முழங்கால் மூட்டுகளுக்கு Brace மருந்துக் கடையில் கிடைக்கும். இதை அணிந்து நடப்பது உதவும். இதைத் தவிர Chondroitin sulfate மற்றும் Glycosamine என்று சொல்லப்படும் மாத்திரைகள் மருத்துவரின் சீட்டு இல்லாமலேயே கிடைக்கின்றன. இந்த வகை மாத்திரைகள் மூட்டு பாதிப்பை குறைக்க வல்லதெனச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Physical Therapy என்று சொல்லப்படும் உடற்பயிற்சி ஆலோசனை மூட்டுவலி இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தகுந்த உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொள்வதோடு பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுடன் சேர்ந்து இவற்றைச் செய்யும்போது ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகின்றன. தண்ணீர் பிடித்தவர்கள் நீச்சல் குளத்தில் நின்றபடியும் இவ்வகை உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நீச்சல் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் மூட்டுகளின் தேய்மானத்தைக் குறைக்க வல்லது. இவையும் தவிர மூட்டுகளில் Corticosteroid என்ற மருந்தை ஊசிமூலம் மருத்துவர் செலுத்தலாம். இந்த வகை நிவாரணம் 6 மாதங்கள் வரை நீடிக்கவல்லது.

அறுவை சிகிச்சை
மேற்கூறிய சிகிச்சை முறைகள் பலன் அளிக்காத போது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். முழங்கால் மூட்டு மற்றும் இடுப்பில் புதிய மூட்டுகளைப் பொறுத்தும் அறுவை சிகிச்சை தற்போது பரவலாகச் செய்யப்படுகின்றது. நமது முன்னோர்களை விட நமது வாழ்நாள் நீண்டதாக இருக்கும் காரணத்தால், இந்த வகை அறுவை சிகிச்சைகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஒரு சிலருக்கு இந்தச் சிகிச்சை சீக்கிரமே தேவைப்படலாம். நோய் முற்றும்வரை காத்திருக்காமல், அறுவை சிகிச்சையின் அபாயம் அதிகம் இல்லாதபோதே அவற்றைச் செய்வது நல்லது. இதற்குப் பின் விளைவுகளும் மிகவும் குறைந்துள்ளன. நல்ல Rehabilitation மற்றும் Physical therapy இந்த சிகிச்சைக்குப் பின்னர் மிகவும் முக்கியம். மருத்துவர் சொன்னபடி நடப்பதின் மூலம் இந்த அறுவை சிகிச்சைகள் நல்ல பலன்களை அளிக்கும். இந்தியாவில் இவை இப்போது பரவலாகச் செய்யப்படுகின்றன. அமெரிக்காவிலும் இந்த அறுவை சிகிச்சைகள் நல்ல பலனைத் தருகின்றன. சிகிச்சைக்குப் பின் உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவுப் பழக்கம் இல்லாது போனால் சிகிச்சை பலனற்றுப் போகும் அபாயம் உண்டு.

மேலும் விவரங்களுக்கு: www.mayoclinic.com

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com