ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
நாதுல்லா கணவாய்

ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

தேர்தல் பணிக்காக நான் சிக்கிமில் இருந்த சமயம் நாதுல்லா கணவாய்க்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இது கடல் மட்டத்திலிருந்து 14400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியா, சீனா இரண்டு அரசாங்கத்தினாலும் சுற்றுலா பயணிகளுக்காக இக்கணவாய் திறந்து விடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 11 மணிவரை வாகனங்களில் பயணிகள் கணவாய்க்கு வருகிறார்கள். இங்கு செல்ல இந்தியப் பகுதியின், சுற்றுலாத் துறைக்குத் தலா 50 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி பெறவேண்டும்.

காங்டோக்கிலிருந்து 54 கி.மீ. தொலைவில் இந்தக் கணவாய் உள்ளது. பயணம் மிகவும் சிரமமானது. அத்துடன் மூன்று, நான்கு, ராணுவ சோதனைச் சாவடிகளையும் கடக்க வேண்டும். மேல்பகுதியில் சாலை மிகக் குறுகியதாக இருப்பதால் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். இப்பகுதி முழுவதுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தகரக் கொட்டகைகளால் ஆன அநேக ராணுவ முகாம்களைக் கடந்துதான் செல்ல வேண்டும். பல்வேறு இடர்ப்பாடுகளைக் கொண்ட சூழலில் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் பணியாற்றுகிறார்கள். கணவாயும் அதன் சுற்றுப்புறமும் பஞ்சாப் படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளது. கணவாய் அருகே நெருங்கும் போது சாலையில் உள்ள ஒரு அறிவிப்புப் பலகையில் பின்வருமாறு எழுதியிருந்தது:

##Caption## ”தேசத்திற்காக உயிர் நீத்தவர்களின்
நினைவாக தியாகிகள் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது”

மேலும் நெஞ்சத்தை நெகிழ வைக்கும் வாக்கியங்களும் உள்ளன.

'வாழ்க்கை கடுமையானது. ஆனால்
நாம் அதை விடக்கடினமானவர்கள்.'
'ஓ வீர பஞ்சாபி, உயிரே உலகம்!
பிறகு என்ன? உயிர் உலகத்திற்கே'

கணவாயில் 21வது பஞ்சாப் படையின் லெப்டினன்ட் தாரிக்கானைச் சந்தித்தோம். லக்னோவிலிருந்து கடந்த ஆண்டுதான் வந்திருந்தார். எங்களை அன்புடன் வரவேற்று சூடான தேநீர் வழங்கினார். கடல் மட்டத்திலிருந்து 14400 அடி உயரத்தில் கணவாய் இருப்பதால், காற்றில் பிராண வாயு 50 சதவிகிதம்தான் இருக்கும். இந்திய, சீன எல்லையைப் பிரிக்கும் முள்கம்பி வேலியை அடைய மேலும் 200 மீட்டர் ஏற வேண்டும். சில அடிகள் ஏறிய பிறகுதான் மூச்சு விடுவதன் சிரமத்தை உணர்ந்தேன். பழைய கால முறையைக் கடைப்பிடித்தேன். ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து வாய் வழியாக மூச்சை வெளியே விட்டேன். சிறிது நேரத்தில் எனது சுவாசம் நிலைப்பட்டது. அடுத்த பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் புதிய தட்பவெப்பத்துக்கு எங்களைத் தகவமைத்துக் கொண்டோம்.

நாங்கள் அங்கு சென்றபோது பனிமூட்டமாக இருந்தது. ஆனால் சூரியன் மேலே வந்ததுமே நிலத்தின் சீனப்பகுதியை-- ஒருகாலத்தில் திபேத்திடமிருந்து சீனா வசப்படுத்திக் கொண்ட பூமியை--பார்க்க முடிந்தது. இதன் சீனப்பகுதி கரடு முரடானது. அதன் சமீபத்திய நகரம் நூற்றுக்கணக்கான மைல்கள் தாண்டியே உள்ளது. சீனப்பகுதியில் சில சிப்பாய் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒருவரை நோக்கி என் கையை அசைத்தேன். அவர் வேலிப்பக்கமாக வந்து என்னுடன் கை குலுக்கினார். அந்த இளைஞன், எனது மகனைப் போன்றவன், சூதுவாதற்றவனாக இருந்தான். அவனைத் தழுவியபடி அவனுடன் ஒரு படம் எடுத்துக் கொண்டேன். திபேத்திய வம்சாவளியினரில் ஒருவருக்கொருவர் உறவுமுறை உள்ள ஏராளமானவர்கள் வேலியின் இருபுறத்திலும் வசிக்கின்றனர். கடிதங்கள் மூலம் அவர்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்கின்றனர். சிறு பரிசுகளாக கைக் கடிகாரங்கள், தின்பண்டங்கள் மாற்றிக் கொள்ளப்படுகின்றன. கார்கில் யுத்தத்திற்குப் பிறகு அதேபோல் உணர்ச்சிக் கொந்தளிப்பான இன்னொரு உயரமான எல்லைப் பகுதியில் சமாதானமும் ஒற்றுமையும் நிலவுவது உள்ளத்தை உருக்குவதாக உள்ளது. நாதுல்லா, உலகெங்கிலுமிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளால் இந்தியா சீனாவிற்கு இடையில் புதிய நட்புறவு எல்லையைத் திறந்துவிடும் என்று நிச்சயமாக நம்பலாம்.

நாதுல்லாவில் சென்னை பொறியாளர்கள்
##Caption## நாதுல்லா கணவாய் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த 'சென்னைப் பொறியாளர்' குழுவைச் சந்தித்தேன். அவர்கள் ஆவலோடு எனக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே, தேர்தல் பார்வையாளர்களில் ஒருவர் தமிழ்நாட்டிலிருந்து வருகிறவர் என்றும், அவர் நாதுல்லா கணவாய்க்கு வருகை தருவார் என்றும் செய்தித்தாளில் படித்திருந்ததால் என்னைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழுவில் முப்பது பொறியாளர்கள் இருந்தனர். இந்தியாவிலுள்ள பொறியாளர்கள் பிரிவில் 'சென்னைப் பொறியாளர்' குழு மிகவும் புகழ்பெற்றதும் பழமையானதுமாகும். நாதுல்லாவில் அவர்கள் நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நிர்மாணித்த மாநாட்டு அரங்கம் அவர்களின் மாபெரும் சாதனையாகும். நவநாகரீகமான அழகு ததும்பும் கட்டிடம். அந்தப் பகுதியிலேயே கிடைக்கும் கற்கள், மரங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் மிக உயரமான இடத்தில் இந்த மாநாட்டு அரங்கைக் கட்டி முடித்ததன் மூலம் சென்னைப் பொறியாளர்கள் ஒரு வகையான உலகசாதனை படைத்துள்ளதாக, பொறியாளர்களின் இளநிலை அதிகாரியான ராஜமோகன் சொல்லக் கேட்டு மனம் பூரித்துப் போனேன். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அரங்கத்தை அவர்கள் ஆறே மாதத்தில் கட்டி முடித்ததுதான்.

ராஜு எனக்காக அரங்கத்தைத் திறந்து சுற்றிக் காட்டினார். செம்மையாக வடிவமைக்கப்பட்ட அரங்கம். அதன் கூரைகள் அழகான மரங்களினால் அமைந்தவை. வழவழப்பான வெல்வெட்டுத் துணி விரிக்கப்பட்ட வசீகரமான மாநாட்டு மேஜை. மேஜையின் மீது ராணுவத்தின் கொடி கம்பீரமாக நிற்கிறது. இந்திய சீன ராணுவ அதிகாரிகள் சந்தித்து உரையாடுவதற்காக இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. நம்முடையதைப் போல் பெரிதாக அல்லாமல் சீனப்பகுதியிலும் சிறியதாக ஒரு அரங்கம் உள்ளது. இரண்டு தேசங்களின் ராணுவ அதிகாரிகளுக்கிடையிலான முதல் மாநாடு 1999ம் ஆண்டு செப்டம்பர் 15ல் நடந்துள்ளது.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, தங்கள் வீட்டிற்கு வெகு தொலைவில் குளிர்நடுக்கும் பிரதேசத்தில் வேலை செய்யும் சென்னைப் பொறியாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். மேலும் ஓராண்டில் ஆறு மாதங்கள் பனி மூடிக்கிடக்கும் குளிர்காலத்தில் அவர்கள் அங்கேயே உறுதியுடன் பணியாற்றுகிறார்கள். தங்களுக்குப் பழக்கமான அரிசிச் சோறு, சாம்பார், ரசம் போன்ற சாப்பாட்டு வகை கிடைக்காவிட்டாலும், அவர்கள் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். பெரும்பாலும் சப்பாத்தி, பருப்புடன்தான் தங்கள் சாப்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எப்போதாவது ஒரு சமயம் தாங்களாகவே வீட்டுச் சமையல் போலச் சமைத்துச் சாப்பிடுகின்றனர். பெரும்பாலான நமது சிப்பாய்கள் தற்காலிகத் தகரக் கொட்டகைகளில் தான் வசிக்கிறார்கள். ஆனால் சீனப் பகுதியில் சிப்பாய்கள் தங்குவதற்கு நல்ல இடமும் தாராளமாக நல்ல உடைகளும் வழங்கப்படுகின்றன. சீனப் பகுதியிலுள்ள நடைபாதைகள் தரை மட்டத்திற்குக் கீழாகச் செல்லும் வாய்க்காலைப் போல் உள்ளன. இது அவர்களை குளிரிலும் பனியிலுமிருந்து காப்பாற்றுவதுடன், அவர்கள் நடமாட்டம் இந்தியப் பகுதியிலிருந்து பார்க்க முடியாமலும் ஆகிவிடுகிறது. மிகவும் கடுமையான பருவநிலை உள்ள இந்த இடத்தில் வேலை செய்யும் நமது சிப்பாய்களுக்கும் இம்மாதிரி வசதிகளை அவசியம் அரசு செய்து கொடுக்க வேண்டும்.

ராஜமோகனின் குடும்பம் கோயம்புத்தூரில் வசிக்கிறது. அங்கு அவரது மனைவி பள்ளி ஆசிரியையாக வேலை பார்க்கிறார். மருதமலையின் அடிவாரத்தில் அவர்களுடைய வீடு இருக்கிறது. நீண்டகாலமாக அவர் தன் வீட்டிற்குச் செல்லவில்லை. அடுத்த முறை நான் கோயம்புத்தூர் போகும்போது அவரது மனைவியைச் சந்திக்க முயற்சி செய்வதாக ராஜ்மோகனுக்கு வாக்குறுதி கொடுத்தேன்.

ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com