தென்றல் பேசுகிறது...
உலகெங்கும் ஏற்பட்டு வரும் வேலையிழப்பு திகிலூட்டுவதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் நாற்காலி உருவப்பட்டு விடுகிறது. வளமான காலத்தில் நண்பர்களாகத் தெரிந்தவர்கள், வேலை போனதும் எதிரிகளாகத் தோன்றுகிறார்கள். அடிமனதில் அமிழ்ந்து கிடக்கும் இன வெறுப்பு எரிமலையாக வெடிக்கிறது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தூக்கலாகத் தெரிகின்றன. 'எனது ரொட்டியை இவன் திருடிக் கொண்டான்' என்ற எண்ணம் கையில் துப்பாக்கி ஏந்த வைக்கிறது. தெற்காசியர்களைப் போலச் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வறட்சிக்காலத்தை ஓரளவு மனதிடத்தோடு தாண்டிவிடுகிறார்கள். பிளாஸ்டிக் கடன் அட்டையை நம்பி வாழ்கிறவர்களின் காலுக்குக் கீழேயிருந்து பூமி திடீரெனக் காணாமல் போகிறது. பங்கு வணிகம், பரஸ்பர நிதி, வீடு, நிலம் என்று எல்லாப் புதுப்பாணி முதலீடுகளும் முடிவற்ற குழிக்குள் விழுந்து கொண்டிருக்க, தங்கத்தின் விலை மட்டும் வானத்தை நோக்கிச் சீறிக் கொண்டிருக்கிறது. 'When the going gets tough, the tough get going' என்று சொல்வார்கள். சங்கு சுட்டாலும் வெண்மை தர வேண்டும்.

*****


'வெற்றி மேலும் மேலும் வெற்றியைக் கொண்டு தரும்' என்பது 'ஸ்லம்டாக் மில்லியனேர்' விஷயத்தில் உண்மையாகி விட்டது. அதிலும் 3 இந்தியர்கள் ஒரே சமயத்தில் ஆஸ்கார் வென்றது மகிழ்ச்சி வெள்ளத்தை மடைதிறந்து விட்டிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானுக்கு மட்டுமே இரண்டு ஆஸ்கார் விருதுகள் என்பது தமிழர்களைப் பெருமிதக் கடலில் தள்ளியிருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தன் தாயையும் இறைவனையும் போற்றி மேடையில் பேசிய, பணிவும் ஆற்றலும் செறிந்த ரஹ்மான் இளம் தலைமுறையினருக்கு நல்ல முன்னோடி. "வாழ்வு முழுவதும் எனக்கு வெறுக்கவும் நேசிக்கவும் வாய்ப்புகள் வந்தன. நான் நேசத்தைத் தேர்ந்தெடுத்தேன். இங்கே வந்திருக்கிறேன்" என்று அவர் மேடையில் கூறியது சிலரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எந்தப் பொருளில் வேண்டுமானாலும் கூறட்டும், மனிதர்கள் நேசத்தை வாழ்முறையாகத் தேர்ந்தெடுத்தால் நிச்சயம் அது மேன்மையைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

*****


இலங்கை நிலவரத்தைச் சித்திரிக்கும் கதை, கவிதைகளைத் தென்றல் பிரசுரித்து வந்துள்ளது. அங்கு நடக்கும் இனப்படுகொலையை மிகுந்த பரிவோடும் துயரோடும் கவனித்து வந்திருக்கிறது. இனியும் கவனிப்பது போதாது, குரல் எழுப்ப வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது. தென்றலின் குரலில் நம்பிக்கை கொண்ட சில வாசகர்கள் கடிதங்கள் எழுதினார்கள். ஒன்றிரண்டு கோபமான வார்த்தைகளைக் கொண்டவையாகக் கூட இருந்தன. நிலைமை அப்படி. அவர்களைக் குறைசொல்ல முடியாது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழனுக்காகத் தென்றல் குரல் கொடுக்கும். ஆனால் அது வெற்றுக் கோஷமாக இருக்காது என்பதை இந்த இதழில் வெளிவந்திருக்கும் சிறப்புப் பார்வை கட்டுரை தெளிவுபடுத்துகிறது. இலங்கையில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் அகப்பட்டுத் துன்புறும் சாதாரணத் தமிழ்க் குடிமக்கள் வெளிவந்து கௌரவத்தோடு வாழும் நிலை ஏற்பட வேண்டும்.

*****


உலகில் எங்கெல்லாம் இந்தியப் பாரம்பரிய அழகோடு பிரம்மாண்டமான கோவில்களும் சிற்பங்களும் நிற்கின்றனவோ அங்கெல்லாம் பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்களின் கைவண்ணம் இருக்கும். கன்யாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை, சென்னையின் வள்ளுவர் கோட்டம், ஹவாயித் தீவின் இறைவன் கோவில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். கணபதி ஸ்தபதி அவர்களின் நேர்காணல் மிகச் சுவையானது. சில கருத்துக்கள் மாறுபட்டுத் தோன்றலாம். ஆனாலும் அவையும் அறியத்தக்கனவே என்ற முறையில் தென்றல் வெளியிடுகிறது. அமெரிக்கப் பொதுவாழ்வில் தமது காலடிகளைப் பதித்துவரும் சூசி நாக்பால், வேதாந்தம் ஆகியோரின் நேர்காணலும் குறிப்பிடத்தக்கது. மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷுக்கு அஞ்சலி , சமையல் குறிப்புகள் , 'எங்கள் வீட்டில்' பகுதியின் சுவாரஸ்யமான புகைப்படங்கள் என்று தென்றலுக்கே உரிய கதம்பச் சுவையோடு இந்த இதழ் உங்கள் கரத்தை எட்டியுள்ளது. உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

*****


தென்றல் சிறுகதைப் போட்டிக்கு வந்த சிறுகதைகள் பரிசீலனையில் உள்ளன. ஏப்ரல் 2009 இதழில் முடிவுகள் வெளியாகும்.

*****


தென்றல் வாசகர்களுக்கு மிலாடி நபி, ஹோலிப் பண்டிகை வாழ்த்துகள்.


மார்ச் 2009

© TamilOnline.com