LA ஔவை தமிழ் வகுப்பு பொங்கல் விழா
ஜனவரி 25, 2009 அன்று தைப்பொங்கல் விழாவை ஔவை தமிழ் வகுப்பு, அகூரா பாலவிகார் மற்றும் ஹிந்தி வகுப்புகள் இணைந்து லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் மாலிபு ஹிந்துத் திருக்கோவிலில் கொண்டாடினர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இவ்வாண்டின் சிறப்பாக தமிழ்க் கடவுளான முருகனை மையமாகக் கொண்ட மூன்று நாடகங்களையும், இரண்டு பாடல்களையும் அரங்கேற்றியிருந்தனர். ஔவைப் பாட்டியிடம் முருகன், ‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று கேட்கும் காட்சியில் தொடங்கி, ஞானப்பழக் கதையில் முருகன் கோபம் கொண்டு பழனிக்குச் செல்வதையும், பின் இடும்பன் கதையில் பக்தர்கள் காவடி தூக்கிப் பாத யாத்திரை செய்வதற்கான கதையையும் விளக்கியது சிறப்பு. சிறுவர்கள் செந்தமிழில் வசனம் பேசி நடித்தது அருமை. விநாயகரைப் போற்றும் 'பாலும் தெளிதேனும்', 'கலைநிறை கணபதி' பாடல்களையும், முருகன் மீதான 'வேல் முருகா', 'பச்சை மயில் வாகனனே' பாடல்களையும் சிறுவர்கள் அருமையாகப் பாடினர். ஹிந்தி வகுப்புக் குழந்தைகளும், பாலவிகார் குழந்தைகளும் பாடிய ஹிந்தி, ஸம்ஸ்கிருதப் பாடல்களும், பஜனைகளும் வெகு சிறப்பு. மாணவர்களின் குழலிசை நன்றாக இருந்தது.

நிகழ்ச்சியில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலப் பழமொழிகளுக்கு மாணவ, மாணவியர் நடித்துக்காட்ட, அவற்றைப் பார்வையாளர்கள் ஊகித்துச் சொன்னது புதுமையான முயற்சி. தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

அலமேலு அருணாசலம், ஜயஸ்ரீ கல்யாண்

© TamilOnline.com