ஒபாமா வருகிறார், பராக்! பராக்!
"எனக்கு ஒரு கனவு இருக்கிறது - ஜார்ஜியாவின் சிவந்த மலைகளில், முன்னாள் அடிமைகளின் மகன்களும், முன்னாள் எஜமானர்களின் மகன்களும் சகோதரத்துவத்தின் மேஜையில் ஒன்றாக அமரவேண்டுமென்ற கனவு." - மார்ட்டின் லூதர் கிங்

அப்படியொரு கூட்டத்தை வாஷிங்டன் கண்டதில்லை. அப்படியொரு ஆரவாரத்தையும், ஆனந்தக் கண்ணீரையும், கோலாகலத்தையும்தான். இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதாக இருந்தது சற்றும் உணர்ச்சிகளைக் காட்டாத, ஸ்பிங்க்ஸ் போன்ற, பராக் ஒபாமாவின் முகத்தோற்றம்.

'நான் இந்த இடத்தில் உண்மையாகவே நிற்கிறேனா?' என்கிற சிறியதொரு ஆச்சரியம், அநிச்சயம் அவரிடம் இருந்திருக்கலாம். ஆனால் அவ்வளவு ஆரவாரத்துக்கும், கோலாகலத்துக்கும் - ஏன், நம்பிக்கைக்கும் - தகுதியுள்ளவர்தாம் என்பதைக் காட்டுவதாக அமைந்தது ஒபாமாவின் அதிபர் பதவி ஏற்புரை. (இந்த இதழில் பல இடங்களிலும் அவரது உரையிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன).

##Caption## கேபிடலில் மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு நனவானது. வெள்ளையர் கருப்பர் என்ற வித்தியாசமில்லாமல் அங்கே ஒரு கருப்பின அதிபரின் பதவியேற்பை எல்லோரும் கரகோஷம் செய்து வரவேற்றனர். 47 வயதான பராக் ஒபாமா ஒரு கென்யநாட்டு முஸ்லீம் தந்தைக்கும் அமெரிக்க வெள்ளைத் தாயாருக்கும் பிறந்தவர். கிறிஸ்தவர். மனைவி மிஷெல், இரண்டு மகள்கள் மாலியா, நடாஷா என்ற சாஷா.

உலக அளவில் பொருளாதாரச் சரிவின் ஆரம்பமே அமெரிக்காவில் இருந்தது. நிதி நிறுவன ஊழல்கள், வீட்டுக்கடனால் ஏற்பட்ட நிதிச் சிக்கல், வேலையிழப்பு, ஆப்பசைத்த குரங்கு போல இராக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படைகள் என்று இப்படி இருண்ட மேகங்கள் சூழ்ந்த நிலையில் பதவியேற்றிருக்கிறார் ஒபாமா. அதை அவர் நன்கு புரிந்துகொண்டும் இருக்கிறார்:

"வீடுகள் இழக்கப்பட்டுள்ளன, வேலைகள் நழுவின, வியாபாரங்கள் இழுத்து மூடப்பட்டன. நமது மருத்துவம் விலைகூடியதாக இருக்கிறது, பள்ளிகளில் மிகப் பலரை ஃபெயில் செய்கிறார்கள்; ஒவ்வொரு நாளும், நாம் ஆற்றலைப் பயன்படுத்தும் விதம் நம் எதிரிகளுக்குத் தெம்பும், உலகுக்கு அபாயமும் விளைவிப்பதாக இருக்கிறது என்பதற்கான மேலதிக ஆதாரத்தைக் கொண்டு வருகிறது" என்று தனது பதவியேற்பு உரையில் அவர் தெளிவாகவே குறிப்பிட்டார்.

அவரது பதவியேற்புரை சொற்பொழிவுக் கலையின் ஒரு சிகரம் என்று சொல்லும்படி இருந்தது. வேகம், விவேகம் இரண்டன் சரி விகிதக் கலவையாக அது அமைந்திருந்தது.

அவர் செய்ய வேண்டிய பணிகளின் பரிமாணத்தோடு ஒப்பிட்டால், இந்தப் பதவியைப் பெற்றதற்கு அவர் உழைத்த உழைப்பு ஒன்றுமில்லை என்று சொல்லலாம். ஆனாலும் ஒரு கருப்பினத்தவர் அமெரிக்க அதிபரானது மிகப்பெரிய திருப்புமுனைச் சாதனைதான் என்பதில் சந்தேகமில்லை. அவரது பதவிக்காலம் அமெரிக்காவின், ஏன் - உலகின், பொற்காலமாக அமையத் தென்றல் வாழ்த்துகிறது.

*****


பராக் ஒபாமா, அதிபர் பதவியேற்பு விழா உரையிலிருந்து சில மேற்கோள்கள்:

முந்தைய தலைமுறையினர் பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் எதிர்கொண்டது ஏவுகணைகளாலும் பீரங்கி வண்டிகளாலுமல்ல, உறுதியான கூட்டணிகளாலும் நிலைத்த நம்பிக்கைகளாலும்தான் என்பதை நினைவுகூருங்கள்.
*****


நாம் சந்திக்கும் சவால்கள் மெய்யானவை, தீவிரமானவை, பலதரப்பட்டவை என்பதை இன்று உங்களுக்குச் சொல்கிறேன். அவற்றை எளிதாகவோ விரைந்தோ தீர்த்துவிட முடியாது. ஆனால், அமெரிக்கா, இதைத் தெரிந்துகொள்: அவை தீர்க்கப்படும்.
*****


பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மீதான புதியதொரு வழியை நாம் முஸ்லிம் உலகத்திடமிருந்து கோருகிறோம்.

வெறுப்பை விதைக்கின்ற, தமது சமுதாயத்தின் எல்லா வியாதிகளுக்கும் மேற்குலகைப் பழிக்கின்ற உலகத்தின் பிற தலைவர்களுக்குச் சொல்கிறேன் - மக்கள் நீங்கள் எதை ஆக்குகிறீர்கள் என்பதை வைத்து உங்களை எடை போடுவார்கள், எதை அழிக்கிறீர்கள் என்பதை வைத்தல்ல,

*****


நமது நாட்டின் மகோன்னதத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்போது, அந்த மகோன்னதம் தானாக வந்ததல்ல, சம்பாதிக்கப்பட வேண்டியது என்பதைப் புரிந்தே சொல்கிறேன். நமது பயணம் குறுக்கு வழியிலோ, குறைவுடையதை ஏற்பதோ அல்ல.

அது பலவீன இதயம் படைத்தவர்களுக்கல்ல. உழைப்பைவிட ஓய்வை, பணமும் புகழும் தரும் உல்லாசத்தை விரும்புகிறவர்களுக்கானதும் அல்ல.

சவால்களை ஏற்றவர்களுக்கு, செயல்படுவோருக்கு, படைப்போருக்கானது அது.

சிலர் புகழ்பெற்றார்கள், பலர் இனங்காணப்படாத ஆணும் பெண்ணுமான உழைப்பாளிகள் - கரடுமுரடான, நீண்ட, வளத்தையும் சுதந்திரத்தையும் நோக்கிய பாதையிலான பயணம்.

தமது சொற்ப உடைமைகளைக் கட்டித் தூக்கிக்கொண்டு, புதிய வாழ்க்கையைத் தேடி நமக்காக அவர்கள் கடல்கடந்து பயணித்தனர். மேற்கின் வியர்வைச் சாலைகளில் உழைத்து, சவுக்கடிகளைத் தாங்கிக்கொண்டு கடின நிலத்தை நம் பொருட்டாக உழுதனர்.

*****


கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள், கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய நாடு நமது. உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்துள்ள ஒவ்வொரு மொழியும், கலாசாரமும் நம்மை வடிவமைக்கின்றன.
*****


நமது அரசியலின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த சொத்தைக் குற்றச்சாட்டுகள், பொய் வாக்குறுதிகள், திருப்பிப் பழித்தல், சாயம்போன கோட்பாடுகள் ஆகியவை முடிந்துபோயின என்று பிரகடனம் செய்ய இன்று வந்துள்ளேன்.
*****


நமது பொருளாதாரத்தின் வெற்றி நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியைச் (GDP) சார்ந்து இருந்ததில்லை. நமது வளங்கள் எப்படி எல்லோரையும் சென்று எட்டுகின்றன, விரும்பும் இதயங்களுக்கு எப்படி வாய்ப்புச் சென்றடைகிறது என்பதைப் பொறுத்தே இருந்தது, அதுவும் கருணையினால் அல்ல, அதுதான் பொதுநலத்துக்கு நிச்சயமான பாதை என்பதால்.
*****


அச்சத்தை விட நம்பிக்கையை, சண்டையை, சச்சரவைவிட லட்சிய ஒற்றுமையை நாம் தேர்ந்தெடுத்திருப்பதால் நாம் இன்று இங்கே கூடியிருக்கிறோம்.
*****


நமக்கிருக்கும் சவால்கள் புதியவையாக இருக்கலாம். அவற்றைச் சமாளிக்கும் வழிகள் புதியனவாக இருக்கலாம். ஆனால், நமது வெற்றிக்கு அடிப்படையான உண்மைகள் - நேர்மை, கடின உழைப்பு, துணிச்சல், நடுவுநிலைமை, சகிப்புத்தன்மை, ஆர்வம், விசுவாசம், தேசப்பற்று - இவையெல்லாம் மிகப் பழையனவே. இவற்றுக்கு நாம் திரும்பியாக வேண்டும். குடியுரிமைக்கான விலை இதுதான்.
*****


இன்றிலிருந்து நாம் எழுந்து நின்று, தூசிதட்டிக் கொண்டு, அமெரிக்காவை மீண்டும் ஆக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
*****


பூமியிலேயே மிக அதிக வளமான, சக்தி வாய்ந்த தேசம் நாம். இங்கே பிரச்சனை ஏற்படும்போது நமது தொழிலாளருக்கு இருந்த உற்பத்தித் திறன் இப்போதொன்றும் குறைந்துவிடவில்லை. நமது மனங்களின் படைப்புத்திறன் குறைந்துவிடவில்லை. நமது பொருள்கள், சேவைகளுக்கான தேவை போன வாரத்தையோ, மாதத்தையோ, வருடத்தையோ விடக் குறைந்துவிடவில்லை. நமது ஆற்றல் சற்றும் குறையாமல்தான் இருக்கிறது.

ஆனால், அப்படியே நிற்கும், குறுகிய நோக்கங்களைப் பாதுகாக்கும், கசப்பான முடிவுகளைத் தள்ளிப்போடும் - அந்தக் காலம் மலையேறிவிட்டது.

*****


நமது வாழ்க்கை சிறக்க வேண்டுமே என்று நமது முன்னோர்கள் - ஆண்களும் பெண்களும் - போராடினர், தியாகம் செய்தனர், தங்கள் கைகள் புண்ணாகும்வரை உழைத்தனர். தமது தனிப்பட்ட ஆசைகளின் ஒட்டு மொத்தத்தை விட அமெரிக்கா பெரியது என்பதாகப் பார்த்தார்கள்; பிறப்பின், செல்வத்தின், குழுவின் பேதங்களைவிட அமெரிக்கா பெரியது என்பதாக.
*****


எங்கு பார்த்தாலும் செய்ய வேண்டிய பணி இருப்பது தெரிகிறது.

விரைந்த, துணிச்சலான செயல்பாட்டுக்காகப் பொருளாதாரம் காத்திருக்கிறது. புதிய வேலைகளை உருவாக்க மட்டுமல்ல, வளர்ச்சிக்கான புதிய அஸ்திவாரத்தை அமைக்கவும் நாம் செயல்படுவோம்.

*****


மதுரபாரதி

© TamilOnline.com