டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - 2007
பிப்ரவரி 10, 2007 அன்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நேஷ்வில் விநாயகர் ஆலயத்தின் கலையரங்கில் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் முதல் பகுதியில் இளைய தலைமுறையினருக்கான நிகழ்ச்சிகளும், அடுத்த பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிகளாக திரு. ஐங்கரன் அவர்களின் இசை நிகழ்ச்சியும், பெண்களின் கும்மிப் பாட்டும் நடைபெற்றது.

இளையோருக்கான பகுதியில், அமெரிக்க மண்ணில் பிறந்த குழந்தைகள் மேற்கத்திய இசைக்கருவிகளில் தமிழ்ப்பாடல்களை இசைத்து பார்த்தவர்களை பிரமிக்கச் செய்தனர். கர்நாடக சங்கீதத்திலும் சளைத்தவர்களல்ல

என்பதைக் கீர்த்தனைகள் பாடிய சங்கரன் மகாதேவன் அவர்களின் மாணவிகள் நிரூபித்தனர். அதற்கு ஒருபடி மேல் சென்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் கட்டபொம்மன்-ஜாக்சன் துரை உரையாடலை

அழகுதமிழில் நடித்துக்காட்டி அனைவரையும் மகிழச்செய்தனர்.

ஐங்கரன் அவர்களின் இசை நிகழ்ச்சியில் காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் இசைக்கப்பட்டன. 22 வருடங்களாக அமெரிக்க நாட்டின் மேடைகளில் பாடிவரும் ஐங்கரன், திருமதி. பி. சுசீலா

அவர்களுடன் 15 இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மகாநதி ஷோபனா, ஜமுனா ராணி மற்றும் மனோரமா ஆகியோருடனும் மேடையில் இசைத்திருக்கிறார்.

தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.தனியாக ஒரு இசைக்குழு வைத்திருக்கிறார். பி.பி. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜா, எஸ்.பி.பி. குரல்களில் மட்டும் அல்லாது பல குரல்களிலும் பாடும் திறமை படைத்தவர்.

ஐங்கரன் அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் நிகழ்ச்சியில் பெரும்பாலான பாடல்களுக்குப் புதியவர்களைத் தேர்ந்தெடுத்து, குறுகிய காலத்தில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து அற்புதமாக நிகழ்ச்சியை நடத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, சிகரம் வைத்தாற்போல் பெண்களின் கும்மிப் பாட்டு இடம் பெற்றது. இன்று வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே காணப்படும் நமது நாட்டுப்புறக் கலைகள் ஒரு காலத்தில் வாழ்க்கையில் ஒரு

பகுதியாக இருந்தன என்பதையும், அவை எவ்வளவு சிறப்பானவை என்பதையும் இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இது அமைந்தது.

அருணாசலம்

© TamilOnline.com