சிங்கை கிருஷ்ணனின் சிங்கப்பூர் ஆலயங்கள்
தமிழ் இணைய உலகிலும், மடற்குழுக்களிலும் நன்கு அறியப்பட்டவர் சிங்கை கிருஷ்ணன். மலேசியாவில் பிறந்து சிங்கையில் வாழ்ந்து வரும் இவர், அடிப்படையில் ஓர் ஆன்மீகவாதி. அமைதி விரும்பி. அடிக்கடி திருவண்ணாமலை, ஆய்க்குடி, சதுரகிரி என ஆன்மீகத் தலங்களுக்கு விஜயம் செய்பவர். திருக்கயிலாய யாத்திரை குறித்தும், இலக்கியங்கள் குறித்தும் ஏற்கனவே இரு நூல்கள் எழுதியுள்ளார். தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஆலயங்கள் குறித்தும், சிங்கை உட்பட தெற்கு ஆசியாவில் இந்துமதம் பரவிய விதம், அதன் பெருமைகள் குறித்தும் மிக விரிவானதொரு நூலை ஆக்கியிருக்கிறார். 'சிங்கப்பூர் ஆலயங்கள்' என்னும் அந்நூல் சிங்கப்பூர் வாழ் தமிழர் பண்பாட்டுக்கும், பக்திக்கும் நல்லதோர் ஆதாரமாகத் திகழ்கிறது.

தெற்காசியாவில், குறிப்பாக சிங்கப்பூரில், இந்து சமயம் எப்படிப் பரவியது, தமிழர் வழிபாடு எங்ஙனம் துவங்கியது, அது எவ்வாறு இந்தோ-சீனக் கலாசாரமாய் பரிணமித்தது என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆய்ந்து விளக்கியுள்ளார். சிங்கப்பூர் ஆலயங்களின் வரலாற்றை மட்டும் தெரிவிக்காமல், சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சி, அதன் தடைக்கற்களையே அது சாதனையாக மாற்றிய விதம், தமிழர்கள், குறிப்பாக நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆற்றிய பணிகள், ஆலய வளர்ச்சியில் அவர்கள் காட்டிய அக்கறை, அவர்களது சமயப் பற்று, தொழில் வளர்ச்சி என்பது பற்றியெல்லாம் விரிவாக இந்நூலில் விளக்கியிருக்கும் பாங்கு அருமை.

சிங்கப்பூரில் வசிக்கும் சீனர்கள் தமிழர்தம் ஆலயத் திருவிழாக்களிலும், சமய நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வது, வழிபாடுகளில் கலந்து கொள்வது பற்றி அவர் கூறியுள்ள விதம் நெகிழ்வு. இது போன்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர் தம் வாழ்முறை, ஆலயங்கள் குறித்த நூல்கள் வெளி வருவது மிக அவசியம்.

280 பக்கங்கள்

விலை: ரூ.100/- (சிங்கப்பூர் டாலர் $15)

நூல் கிடைக்குமிடம்:
நர்மதா பதிப்பகம்,
சென்னை

இணையம்வழி வாங்க www.newbooklands.com

© TamilOnline.com