தென்றல் பேசுகிறது...
வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். போன ஆண்டு போய் விட்டது, வரும் ஆண்டு நல்லதாக அமையட்டும் என்று நினைப்பது மனித இயல்பு. சென்றதை மறந்துவிட்டது, கையில் இருக்கும் கணத்தைக் கவலையிலும் அச்சத்திலும் செலவழித்துவிட்டு, வருவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பது ஒருவகை மடமை. உழவுக் காலத்தில் உறங்கினால் அறுவடைக் காலத்தில் அழ வேண்டி வரும் என்பார்கள். செய்ய வேண்டியதை தாமதிக்காமல், சஞ்சலப் படாமல், வேறு காரணங்களுக்காகத் தயங்காமல் உறுதியாகச் செய்ய வேண்டும். இது வன்முறைத் தடுப்புக்கும் பொருந்தும்.

டிசம்பர் 2008 இதழ் அச்சேறிக் கொண்டிருந்த அதே சமயத்தில் தாஜ், ஒபராய் ஓட்டல்களிலும் மும்பை சத்திரபதி சிவாஜி முனையத்திலும் எந்தப் பாவமு மறியாத சாதாரணக் குடிமக்கள் நவீன குண்டுகளாலும், தானியங்கித் துப்பாக்கிகளாலும் சுட்டுத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிரடிப் படை கமாண்டோக்கள், மும்பை போலீஸ், தீயணைப்புப் படை ஆகியவை மிக நீண்ட ஒரு போராட்டத்துக்குப் பின் வெறியாட்டத்தை நிறுத்தினார்கள். தாக்குதல் நடத்திய கஸவ் என்ற பெயர்கொண்ட ஒரே ஒரு பாகிஸ்தானி இளைஞர் மட்டும் பிடிபட்டார். சிலர் தப்பி ஓடியிருக்கலாம். மீதமிருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். கஸவ் பிடிபட்ட காரணத்தால் இந்தியா மீதான இந்த மிகக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணகர்த்தாக்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்குகிறார்கள் என்பது தெரிய வந்தது. பாகிஸ்தானின் உண்மைமுகம் அமெரிக்கா உட்படப் பல பாகிஸ்தானைக் கொஞ்சும் நாடுகளுக்கும் தெளிவானது.

நமது நாட்டை, மக்களை, எந்தக் காரணமோ முன்னறிவிப்போ இல்லாமல் தாக்கியவர் எவராக இருந்தாலும், அவர்களுக்குப் பக்கபலமாக யார் இருந்தாலும் அவர்களுக்குத் தயங்காமல் தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் இத்தகைய அசம்பாவிதம் நடக்காமல் சட்டத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுவானதாக்க வேண்டும். இதில் அரசியல் லாபத்துக்காக தாட்சணியம் காட்டுவது கூடாது.

ஆளும் கட்சியின்மீது மக்களின் ஒட்டு மொத்தமான கோபம் திரும்பியதை மும்பை சம்பவத்தின்போது காணமுடிந்தது. மத்திய அரசுக் கட்டிலில் மிக அதிக ஆண்டுகள் அமர்ந்திருந்த, அமர்ந்திருக்கும் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. போனது போகட்டும். இனியாவது விழித்துக்கொண்டு, எது சரியோ அதைச் செய்யாவிட்டால், இன்னும் பல கஸவ்களை இந்தியா சந்திக்க வேண்டி வரும். அப்போது கையைப் பிசைந்து பயனில்லை.

புத்தாண்டில் அமெரிக்கா பராக் ஒபாமாவின் தலைமையிலான புதியதொரு அரசை ஆவலோடு எதிர்பார்த்து நிற்கிறது. நிறைய வாக்குறுதிகள், நிறைய எதிர்பார்ப்புகள். இளமை, புதுமை, மாற்றம் என்ற சொற்கள் எங்கும் எதிரொலிக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரம், உலக அரசியல், அமைதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று பரந்துபட்ட பிரச்சனைகள் ஒபாமாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவரும் மிக்க அனுபவம் வாய்ந்தவர்களையே தனது அரசின் குழு உறுப்பினர்களாக அறிவித்துள்ளார். ஒபாமா ஒரு மந்திரவாதியல்ல. ஆனால், நம்பிக்கையும் உழைப்பும் பெரிய அதிசயங்களைச் சாதிக்க முடியும் என்பதை அறிந்தவர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அதை நிரூபித்தவர். உண்மையான நிரூபணம், வரும் நாட்களில் தான் இருக்கிறது. அதிபர் ஒபாமாவைத் தென்றல் வரவேற்கிறது. ஒரு நல்ல, மக்களுடன் நட்பான அரசை அளிக்க அவரை வாழ்த்துகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குப் பெரும் ஆதரவு தரும் கொள்கையை ஒபாமா அறிவித்துள்ள நிலையில் சூரிய சக்தித் துறையில் புரட்சிகரமான மாறுதலைக் கொண்டுவரும் விலைகுறைந்த சிலிக்கான் படலம் உற்பத்திசெய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ள கிரிஸ்டல் சோலார் குழுமத்தின் T.S. ரவி மற்றும் சிவாவின் குறிப்பிடத்தக்க நேர்காணல் இந்தப் புத்தாண்டு இதழில் வெளியாகிறது. சென்னை கச்சேரி சீஸனில் மிக அதிகமான கச்சேரிகள் செய்யும் இளம் வித்வான் சிக்கில் குருசரணின் நேர்காணலும் ரசனை மிக்கது. சிறுகதைகள், அனல் பறக்கும் கவிதை என்று சுவையான அம்சங்களோடு மலர்கிறது தென்றல் புத்தாண்டிதழ்.

படைப்பாளிகளுக்குப் போதிய அவகாசம் தரும்விதமாக, தென்றல் சிறுகதைப் போட்டியின் இறுதித் தேதி 31 ஜனவரி 2009 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால நீட்டிப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் மீண்டும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்.


ஜனவரி 2009

© TamilOnline.com