வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூந்தளிர்க் கூட்டம்
நவம்பர் 15, 2008 அன்று காலையில் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் குழந்தைகள் தினத்தை ஒட்டி குழந்தைகளுக்காக ஓவியம், நடனம், நாடகம், மாறுவேடம், இசை, பேச்சுப்போட்டி ஆகியவற்றை CET அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடங்கினார் தொகுப்பாளர் ஸ்ருதி அரவிந்தன். பரதத்தில் தொடங்கியது போட்டி. வளைகுடாப்பகுதியின் திறம்வாய்ந்த ஆசிரியைகளான இந்துமதி கணேஷ், தீபா மஹாதேவன் ஆகியோரின் மாணவிகள் ஆடிய புஷ்பாஞ்சலி, பதம் அதற்கான பாவங்களால் பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகள் வரலாற்று நாடகத்தைச் செந்தமிழில் அருமையாகப் பேசி நடித்தனர். இனிய இலங்கைத் தமிழில் நடந்தேறிய ஒரு பட்டிமன்றமும் பரிசு பெற்றது. சினிமாப் பாடல்களைக் குழந்தைகள் சிறப்பாகப் பாடினர். கிராமிய மற்றும் சினிமாப்பாடல்களுக்கான நடனங்கள் அனைவரையும் மகிழ்வித்தது. குறிப்பாக, குறத்தி பாடலுக்கு 3-4 வயதுக் குழந்தைகள் ஆடியபோது பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல்களோடு கலகல சிரிப்பும் சேர்ந்து ஒலித்தது.

உலக அழகி, தேசியத் தலைவர்கள், தாத்தா, பாட்டி, நடிகர்களாக, ஒன்றரை வயது முதல் மூன்று வயதுவரை மாறுவேடப் போட்டியில் பங்குபெற்ற குழந்தைகள் அனைவரையும் மகிழச் செய்தனர். இந்த மண்ணிலும் இனிய தமிழ் பேசும் சிறார் உள்ளனர் என்பதைப் பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் நிரூபித்தனர்.

பரிசுபெற்ற ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நடுவர்களாக லதா ஸ்ரீதர், சுதா பெருவம்பா, தீபா ராமானுஜம், இந்நிகழ்ச்சியைப் பின்னணியில் இருந்து இயக்கிய சித்ரா ராஜசேகரன் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த ஆண்டிலிருந்து தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சி இனிவரும் வருடங்களிலும் தொடரும் என்றனர் நிர்வாகக் குழுவினர்.

அமர்க்களம்

காலைநேரப் பரபரப்பு நீங்கி நாற்காலியில் சாய்ந்தபடி பெற்றோரும் அரிதாரம் கலைத்த அனைத்துப் போட்டியாளர்களும் ஆர்வமாய் அமர ஆரம்பித்தது 'அமர்க்களம்' இன்னிசை நிகழ்ச்சி. பாடலுக்குக் குரல் மட்டுமன்றி மனதும் லயித்தால்தான் எல்லோரையும் கவர முடியும் என நிரூபித்தனர் ராஜா தலைமையிலான ராஹாலயா குழுவினர். பழைய பாடல்களில் இருந்து புதுப்பாடல்கள் வரை பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். 'எங்கேயும் எப்போதும்' பாடிய ராஜா, 'கல்லை மட்டும் கண்டால்' பாடிய கார்த்திக், 'விழியிலே' பாடிய ஜெயஸ்ரீ, சிறப்பாகப் பாடிய நித்யா, சிவா, வர்ஷா ஆகிய அனைவரும் சேர்ந்து இந்நிகழ்ச்சியை அமர்க்களமாக்கினர். இசைக்கருவி விற்பன்னர்கள் கிஷ்மு, ராஜ், ஃபர்ஹான், அருண் காடி, பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் அருண் விஸ்வநாதனின் மிமிக்ரி நிகழ்ச்சி பார்வையாளருக்கு உற்சாக டானிக்காக அமைந்தது. பாகீரதி சேஷப்பன் அவர்கள் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தார்.

கச்சேரியின் நடுவே மன்றத்தின் முன்னாள் தலைவர் சிவா சேஷப்பன் அவர்கள் அறிமுகப்படுத்த, முன்பு பொறுப்பு வகித்து மன்றப்பணி ஆற்றிய வரதராஜன், கமல் கண்ணன், குமார்குமரப்பன், முனைவர். பத்மா ராஜகோபால், வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், முனைவர். தமிழன் பாக்கியராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நித்யவதி சுந்தரேஷ்

© TamilOnline.com