நான் மிகவும் சென்சிடிவ் டைப்...
அன்புள்ள சிநேகிதியே
தயவு செய்து நான் உங்களிடம் கூறியது. எழுதியது எதையும் இந்தப் பகுதியில் வெளியிடாதீர்கள். எப்படிப் பிறரால் என் மனம் புண்படுதைத் தவிர்ப்பது, என்னை 'டீசென்சிடைஸ்' செய்துகொள்வது என்பதை மட்டும் சொல்லிக் கொடுங்கள். நன்றி.
....

அன்புள்ள சிநேகிதியே
உங்களுடைய அச்சம் புரிகிறது. உங்கள் கேள்விக்கு பதில் அளிக்குமுன், மறுபடியும் இந்தப் பகுதியைப் பற்றிச் சிறிது விளக்கம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே பெயர், விலாசம் எதற்குமே முக்கியத்துவம் கிடையாது. எது, என்ன, எப்படி என்று தெரிந்தால், எதனால், எதற்காக, எப்படிச் செய்யலாம் என்று ஆராய்ந்து நமக்குத் தெரிந்த பதிலைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவருடைய 'கேஸ் ஹிஸ்டரி' அல்லது சூழ்நிலை பற்றி இந்தப் பகுதியில் எழுதும்போது, வாசகர்களுக்குப் படிக்க ஆர்வம் இருக்கும். அவர்கள் கண்ணோட்டத்தில் அந்தப் பிரச்சனையை அவர்களுக்கு ஏற்றாற்போல் ஆராய்ந்து, தீர்ப்பதற்கு முயற்சி செய்ய ஓர் உத்வேகம் பிறக்கும்.

ஒரு கலாசாரத்தைத் தழுவிய எந்த மக்களின் உறவுவகைப் பிரச்சனையை யார் எழுதினாலும், மக்களில் ஒரு பகுதியினருக்குத் தங்கள் சொந்த விஷயத்தை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கும். சம்பவங்கள், பேச்சுப் பரிமாறல்கள் கூட தத்ரூபமாக இருக்கும். 'நம் வீட்டுப் பிரச்சனையைத் தெரிந்தவர்கள் யாரோ அம்பலப்படுத்தி இருக்கிறார்களோ' என்று கூடச் சிலருக்கு 'paranoia' ஏற்படும்.

நமக்கு ஏதாவது பிரச்சனை(அதாவது, நம்முடைய சமூகக் கோட்பாடுகளுக்கு ஒத்துவராத--நம் வாழ்க்கையில் ஏற்படும் செயல் மாற்றங்கள்) என்று வரும்போது அது நமக்கு மட்டும்தான் வந்து விட்டது என்று கூசி, அந்தரங்கப்படுத்தப் பார்க்கிறோம். அதேபோல நமக்குப் பாராட்டுக் கிடைத்தாலும் அது நமக்கு மட்டுமே என்று பெருமிதத்தில் அதை பிரகடனப்படுத்திக் கொள்கிறோம். இரண்டையுமே நம்மைப் போல் ஒரு பகுதியினர் எங்கோ யாரோ அவஸ்தை / ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மனதில் இருத்திக் கொண்டால், 'எனக்குமட்டும் ஏன்?' என்ற கேள்வியும், 'இதுதான் நான்' என்ற நினைப்பும், மனதைச் சமநிலைக்கு கொண்டுவரும்.

சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது போல், வேதனைகளையும் நம் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொண்டால், நிச்சயம் உதவி, ஓர் உணர்ச்சிபூர்வமான ஆதரவாவது கிடைக்கும். மனதை அந்த 'comfort zone'க்குக் கொண்டு வருவதற்கு, நம்முடைய முயற்சியும் தேவை. பழகுபவர்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருக்க வேண்டும். பரந்த மனமுடையவர்கள், பறந்து உதவிக்கு வருபவர்கள், எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள். ஆனால் நாம் அவர்களை இனம் கண்டு கொண்டு, அவர்களை நம்புகிறோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் இல்லையா?

இந்தப் பகுதியில் நீங்கள் விருப்பப்பட்டபடி பொதுவாக எழுதுகிறேன். நம்மை எப்படி 'டீசென்ஸிடைஸ்' செய்து கொள்வது? எருமைத் தோல் கொண்டவராக இருங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள், 'மூவ் ஆன்', 'லெட் கோ' என்ற அறிவுரைகள்தாம் பிறரிடமிருந்து (அவர்களுக்கே அப்படி ஒரு சம்பவம் ஏற்படும்வரை) வரும்.

1. ஒரு பார்ட்டிக்குப் போகிறோம். நம் சிநேகிதர்கள் என்று நினைப்பவர்கள், கண்டு கொள்ளவில்லை. மனது சுருங்கத்தான் செய்யும்.
2. நாம் கணவர் வழி அல்லது மனைவி வழி உறவினருக்கு (நாத்தனார், மைத்துனன்) உதவி செய்யப்போக, ஓர் அங்கீகாரம் கிடைப்பதற்குப் பதிலாக அவமானப்பட்டு விட்டால் மனம் துவண்டுதான் போகிறது.
3. ஒரு பதவி உயர்வை எதிர்பார்க்கும் போது, 'we will let you go' என்றால், நாம் நியாயமாகச் செயல்படும் போது அநியாயமாகச் செயல்பட்டார்களே என்று மனம் குமுறித்தான் போகும்.
4. நம் வாழ்க்கைத் துணையோடு ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும், எதையாவது சேர்ந்து செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால், அவர்கள் (கணவன்/மனைவி) நம் ஆசைக்கு மதிப்புத் தராதபோது மிதிபட்டுப் போகும். மனதில் துக்கம், கசப்பு எல்லாருக்கும்தான் வரும். யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

சில முயற்சிகள் செய்து பார்க்கலாம்.

1. நம்மைப் பிறர் கண்டுகொள்ளாத போது...

a. சில சமயம் கவனித்திருக்க மாட்டார்கள். அப்படியா. சரி. மனம் சாந்தம்.
b. வேண்டுமென்றே... (சரி, என்ன கோபமோ. இல்லை அவர்கள் என்னை விட உயர்ந்த நிலை என்ற எண்ணமோ- கொஞ்சம் நம்க்குள்ளே சிரித்துக் கொள்வோம். அவர்கள் பாராமுகம் அவர்கள் பிரச்சனை. (நாம் ஏன் வாங்கிக் கொள்ள வேண்டும்)

2.உறவினருக்கு உதவி செய்து அங்கீகாரம் கிட்டாதபோது...
a. சில சமயம் வெளிப்படுத்தத் தெரியாது. உள்ளுக்குள் நம்மைப் பாராட்டுவார்கள். அப்படியா. சரி. மனம் சாந்தம்.
b. 'நீ எதற்குச் செய்ய வேண்டும்' கேள்வி. சரி, என் கடமை செய்தேன். அது கேள்வி கேட்டவர்களுக்குப் பிரச்சனையாகத் தெரிந்தால், அது அவர்கள் பிரச்சனை. நம் மனசாட்சி சரியாக இருக்கிறதே - துவண்ட மனம் சிறிது நிமிர்கிறது

3.நாம் நியாயமாகச் செயல்பட்டோம். அநியாயம் நடக்கிறது..
a. எங்கோ தவறு செய்திருக்கிறோம், நமக்கே புரியாமல். (கொஞ்சம் குமுறல் அடங்கும்)
b. இந்தக் கசப்பு, அதிர்ச்சி, நெடுநாள் இருக்கும். மறுபடியும் நாம் வேறு இடத்தில் நிலையூன்றும் வரையில். கசப்பு கொஞ்சம், கொஞ்சமாக அகன்று அந்த உணர்வு அனுபவமாகவும், அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் மாறும் என்னும் நினைப்புத்தான் வாழ்க்கைப் பாடம்.

4.கணவன்/மனைவி நம் எதிர்பார்ப்புகளை, மெல்லிய உணர்வுகளை, aந்தரங்க ஆசைகளைப் புரிந்து கொள்வதில்லை
a. சிலருக்கு அன்பை, ஆசையை, பாசத்தை வெளிப்படுத்தத் தெரிவதில்லை.
b. தாம்பத்தியத்தை ஒரு போட்டியாக நினைத்து 'நான்தான் வெற்றிக்கு உரியவன்(ள்)' என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அங்கே அன்பின் ஆதிக்கத்தைவிட, அதிகாரத்தின் ஆதிக்கம்தான் அதிகம். நம் அன்பையும், ஆதங்கத்தையும் அதிகாரத்தின் வழியாகக் காட்டுவதையும் சிலர் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். காரம் சுவை. அதிகாரம் சுரீர். இப்படி அன்பை வெளிப்படுத்தும் கணவருக்கோ, மனைவிக்கோ மற்றவர்மேல் ஏற்படுத்தும் தாக்கம் புரிவதில்லையோ என்று நினைப்பேன். அன்பையும் பாதுகாப்பையும் தங்கள் அதிகாரம்/கட்டுப்பாட்டினால் வெளிப்படுத்தும் நபர்களும் தங்களை மற்றவர் புரிந்து கொள்ளவில்லையே, என்று வருந்திக்கொண்டு இருப்பார்கள்.
இதிலும் ஆண்கள் அதிகமாக வெளிப் படுத்திக் கொள்ள மாட்டார்கள். (நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தாலொழிய) பெண்கள் அனிச்ச மலர் போல வாடி விடுகிறார்கள். (என்னுடைய பார்வையிலிருந்து எழுதுகிறேன். ஒருவர், இருவர் விதிவிலக்காக இருக்கலாம்.)

பதில் நீளமாகிக் கொண்டே போகிறது. அடுத்த இதழில் தொடர்கிறேன்.

வாழ்த்துக்கள்!
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com