மனைவியர் போற்றும் விழா
உலகில் 50 சதவிகிதம் பெண்கள். மற்ற அனைவரும் அப்பெண்களால் பெற்றெடுக்கப்பட்ட ஆண்கள் எனப் பெண்ணினத்தின் பெருமையை உணர்த்தியவர் வேதாத்திரி மகரிஷி. அவரது துணைவியார் அன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30, அன்பர்களால் மனைவியரைப் போற்றும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ் வருடம் இந்த நாளை முதல்முறையாக உலக சமுதாய சேவா சங்கத்தின் (World Community Service Center) விரிகுடாப்பகுதி மன்றம், ஃப்ரீமாண்ட் ஹிந்துக் கோயிலில் கொண்டாடியது. மூத்த பேராசிரியர் அறிவானந்தம் (Joint Director, SMART, Aliyar, India) அவர்கள் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு தம்பதிகளாக நடராஜன் வெங்கடாசலம், உண்ணாமலை வெங்கடாசலம் உட்படப் மற்றும் பலர் கலந்துகொண்டனர். செயலாளர் ரவிகுமார் கோவிந்தராஜன் இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்த, பொறுப்பாசிரியர் முரளி சீனிவாசன் விழாவின் சிறப்பை எடுத்துரைத்தார்.

'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!' என்பதே உலக சமுதாய சேவா சங்கத்தின் தாரக மந்திரம். தனிமனித அமைதியே உலக அமைதிக்கு ஒரே வழி என்று உணர்த்தியவர் இந்நிறுவனத்தின் தந்தை தத்துவ ஞானி ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி அவர்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலம் பெற எளிய முறை உடற்பயிற்சி, மன அமைதி, நலம் பெற எளிய முறை குண்டலினி தவப் பயிற்சி மற்றும் அகத்தாய்வு, உயிருக்கு சித்தர்களின் காயல்கல்பப் பயிற்சி ஆகியன இந் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்றது.

'இறைவன் வேறு நாம் வேறல்ல; நாமே இறைவன், எல்லாம் இறைவனின் தோற்றமே' என்று அவனை உணர்ந்து அறிய இப்பயிற்சிகள் உதவுகின்றன. எல்லா மதத்தினரும், எந்த வயதினரும் ஆண், பெண் பாகுபாடு இன்றி பின்பற்றும் சிறப்புமிக்கது இப்பயிற்சிகள். இந்நிறுவனத்தின் வட அமெரிக்கக் கிளையாக வளைகுடாப் பகுதி மன்றம் (SKY Bay Area) அக்டோபர் 2007ல் இருந்து பொதுமக்களுக்குச் சேவை செய்து வருகிறது.

சிறப்பு தவத்திற்குப் பின் தம்பதிகள் பூ, பழம் பரிமாறி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். தலைவர் ராஜேஷ் சாம்பசிவம் நன்றி உரைக்க, காலை உணவுடன் விழா நிறைவுபெற்றது.

ராஜேஷ் சாம்பசிவம், ஃப்ரீமாண்ட்

© TamilOnline.com